அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை வருடாந்தர ‘கரேஜ் கேட்வாக்’ ஆடை அலங்கார நடை நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மார்ச் 7) ஏற்பாடு செய்தது.
சோஃபிட்டல் சிங்கப்பூர் சிட்டி சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சி, ‘டிரிபிள் நெகட்டிவ்’ மார்பகப் புற்றுநோய் மாதத்தின்போது மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்களைச் சிறப்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
‘இளஞ்சிவப்பு வீராங்கனைகள்’ (Pink Warriors) என்று அழைக்கப்படும் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்கள் 20 பேர், நிகழ்ச்சி மேடையில் ஆடை அலங்கார நடையின்போது தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழக்கமான சுயபரிசோதனைகளை மேற்கொள்ளவும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவும் சமூகத்தில் தேவைப்படும் ஆதரவை நாடவும் நிகழ்ச்சி ஊக்கப்படுத்தியது என்று அறக்கட்டளை நம்புகிறது.
‘தைரியத்தின் கலாசார மொசைக்’ (A Cultural Mosaic of Courage) எனும் தலைப்பைக் கொண்ட இவ்வாண்டின் ஆடை அலங்கார நடை, சிங்கப்பூரின் பன்முக பாரம்பரியத்தை சீன, மலாய், இந்தியன், அனைத்துலக அம்சங்கள் என நான்கு பிரிவுகளில் கொண்டாடியது. லாசால் கலைக் கல்லூரியில் பயின்ற ஆறு பட்டதாரிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
அவர்களில் ஒருவரான 22 வயது கேயா பிரஜாபதியின் ‘கும்ஹாரி’ தொகுப்பு, குஜராத்தின் மட்பாண்டக் கலைஞர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
“ஆடை என்பது அவர்களின் வாழ்க்கை பயணத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் பாலமாக அமைகிறது. எனது ஆடைகள் வெளிப்படுத்தும் இந்தியக் கலாசாரத்தின் விரிவான வடிவங்களும் கண்ணைக் கவரும் நிறங்களும் அவற்றை அணிந்த இளஞ்சிவப்பு வீராங்கனைகளின் வலிமைக்கும் அழகுக்கும் சாட்சியமாக அமைந்தது என நம்புகிறேன்,” என்று கூறிய கேயா, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்ததாகச் சொன்னார்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக மாயா நடன அரங்கின் ஒரு பிரிவான ‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட ‘டிஏடிசி’ நடனக் குழுவினர் ஒரு நடனத்தைப் படைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் அரங்கின் நடனக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வத்தோடு முன்வந்தனர். இசை, உடை என்று எல்லாவற்றையும் அவர்களே தேர்ந்தெடுத்து, மேடையில் தைரியத்தை வெளிப்படுத்தினர்,” என்று மாயா நடன அரங்கின் இணை நிறுவனர் கவிதா கிருஷ்ணன், 53, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்வழி, அறக்கட்டளையின் திட்டங்களுக்கான நிதியும் திரட்டப்பட்டது. நுழைவுச்சீட்டுகளின் விற்பனைமூலம் திரட்டப்பட்ட தொகை, மார்பகப் புற்றுநோயாளிகளுக்கான ஆதரவுக்கும் மார்பகப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு முயற்சிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இளஞ்சிவப்பு வீராங்கனைகளில் ஒருவரான பகுதிநேர ஆசிரியர் பரமேஸ்வரி வீரசிங்கம், 49, ஆடை அலங்கார நடையில் பங்கேற்பதற்கு முதலில் தயக்கப்பட்டதாக சொன்னார்.
“ஆனால், என்னைப் போல் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட மற்ற பெண்களைச் சந்திக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவு செய்தேன்,” என்றார் அவர்.
2016ல் இவருக்கு இரண்டாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எட்டு முறை ‘கீமோதெரப்பி’ சிகிச்சைக்குப் பின்னர் புற்றுநோய் பாதிப்பிலிருந்து 2017ல் திருவாட்டி பரமேஸ்வரி முழுமையாக மீண்டு வந்தார்.
“புற்றுநோய் நம்மை சோதிக்கலாம், ஆனால் அது நம்மை வரையறுக்காது. நம்மை நாமே நம்பினால், எதையும் சாதிக்க முடியும் என்று நான் மனதார நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.