தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டடக்கலையில் புத்தாக்கச் சிந்தனைக்கு களம் அமைத்த ‘கேட்டலிஸ்ட் 2025’

2 mins read
d30fd275-dc79-4a86-b762-69735880675d
‘தி கேட்டலிஸ்ட் ஜெனஸிஸ்’ உயர்கல்வி வளாகம் என்ற வடிவமைப்பைச் செய்து முடிக்க லோபாவுக்கு கிட்டத்தட்ட ஓராண்டு காலமானது.  - படங்கள்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி
multi-img1 of 3

கனடாவில் பார்த்த ஒரு மாறுபட்ட வளாகத்தைச் சிங்கப்பூரில் அமைக்க எண்ணிய லோபா முத்ரா நடராஜன், தாம் பயிலும் தொழிற்கல்லூரியில் அத்தகைய பொறியியல் வளாகத்தை அமைப்பதற்கான திட்டத்தை உருவாக்கினார் .

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் லோபாவுக்கு கனடாவில் உள்ள ‘ஏஎம்எஸ் நெஸ்ட்’ (AMS Nest) வடிவமைப்பைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

மாணவர்களால் மாணவர்களுக்காகக் கட்டப்பட்ட 250,000 சதுர அடி கொண்ட அந்த வளாகத்தில் உணவு, பானக் கடைகள், படிப்பதற்கான வசதிகள், ஓய்வெடுப்பதற்கான இடங்கள், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வசதிகள் ஆகியவை அமைந்துள்ளன.

அதை அடிப்படையாகக் கொண்டு ‘தி கேட்டலிஸ்ட் ஜெனஸிஸ்’ (The Catalyst Genesis Institution) கல்விக் கழக வளாகத்துக்கான வடிவமைப்பை கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் உருவாக்கினார் லோபா.

“திட்டமிடல், ஆராய்ச்சி, வடிவமைப்பு முன்மாதிரிகள், மாதிரி வடிவமைப்பு, செயல்முறை, விரிவாக்க வரைபடங்கள் கொண்ட காட்சிப்பலகை ஆகியவற்றை உருவாக்க பல நாள் உழைத்தேன்,” என்றார் லோபா.

லோபாவின் கட்டட வடிமைப்பு, இன்னும் கட்டடமாக உருப்பெறவில்லை. எனினும், எதிர்காலக் கல்வி நிலையங்களை வடிவமைக்கத் தமது திட்டம் உதவும் என்று நம்புகிறார்.

லோபாவின் யோசனைகளை வெளிப்படுத்த தளம் அமைத்து தந்தது சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ‘கேட்டலிஸ்ட் 2025’ (CATALYST 2025) நிகழ்ச்சி. அதில் லோபா உள்ளிட்ட கட்டடக்கலை பயிலும் பல பட்டயக் கல்வி மாணவர்கள் புத்தாக்கம் நிறைந்த திட்டங்களை காட்சிப்படுத்தினர்.

அவர்களில் ஒருவர், கணினிவழி பாய்ம இயக்கவியலைப் பயன்படுத்தி (Computational Fluid Dynamics) பள்ளி வளாகத்தை வடிவமைத்த சுவிநேசன் சுடலைராஜன்.

மாணவர்கள் ஒன்றுகூடும் இடத்தில் காற்றோட்டத்தை அதிகரிக்கும் அம்சத்தை சுவிநேசன் தமது படைப்பில் புகுத்தியுள்ளார்.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உள்ள மின், மின்னணு பொறியியல் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் வகுப்புகளுக்கு செல்வதுண்டு.

இதனால் சக நண்பர்கள் அதிக நேரம் செலவிடமுடியாமல் போவதை சுவிநேசன் உணர்ந்தார். ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்போது திறந்த, காற்று வீசும் தாழ்வாரங்களில் நண்பர்களைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

“தரவு சார்ந்த பரிசோதனை மூலம் கட்டடக்கலை வடிவமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தால் இந்தத் திட்டத்தை துவங்கினேன்,” என்றார் சுவிநேசன்.

நகர மறுசீரமைப்பு ஆணையம், கல்வி அமைச்சு, ‘ஜென்ஸ்லர்’, சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பயனர் அனுபவ நடுவம் உள்ளிட்ட அமைப்புகளின் தொழில் வல்லுநர்களுடன் இணைந்து மொத்தம் இத்தகைய 180 திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

‘கேட்டலிஸ்ட் 2025’ நிகழ்ச்சியில் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் கட்டடக்கலை மற்றும் கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் வளாகம் (School of Architecture and the Built Environment), தேசிய பூங்காக் கழகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 14ஆம் தேதி கையெழுத்தானது.

நிலப்பரப்பு வடிவமைப்பு, கட்டடக்கலை, நகர்ப்புற பசுமை, இயற்கை பாதுகாப்பு, சமூக மேற்பார்வை ஆகியவற்றில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்