இளவயதில் ஒருவர் தமது வேலையிடத்தில் வெற்றிகாண முயல்வது சில நேரங்களில் சவால்மிக்கதாக இருக்கலாம்.
சரியான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதிலும் திறமைகளை அறிந்து செயல்படுவதிலும் குழப்பம் ஏற்படலாம்.
21 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர், ஊழியரணியில் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொள்வதாக ஆய்வு ஒன்றில் வெளியான தகவல், இவ்வாண்டு ஜனவரியில் கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ‘சிங்கப்பூர் பார்வைகள் 2024’ மாநாட்டின்போது பகிரப்பட்டது.
“ஊழியரணிக்குள் நுழையும் இளையர்களில் பலர் தங்களை முழுமையாகத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை என உணர்கின்றனர்,” என்று என்டியுசியின் இளையர் மேம்பாட்டு இயக்குநர் நடாஷா சோய் அந்த மாநாட்டின்போது தெரிவித்தார்.
அழுத்த உணர்வு
கல்வியில் சிறந்து விளங்குதல், மதிப்புமிக்க நிறுவனங்களில் ஊழியராகச் சேருதல், லாபகரமான தொழில் பாதையைத் தேர்ந்தெடுத்தல் என மிகுந்த மன அழுத்தத்திற்கு இளையர்கள் பலர் ஆளாவதாகப் பல்கலைக்கழக மாணவர் பத்மஜா அசோகன், 23, தெரிவித்தார்.
“வெற்றிகரமான இளமைப்பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டாலும் வரும் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்க்கும் மனப்போக்கு முக்கியம்,” என்று அவர் கூறினார்.
தேர்வுகளையும் பாடங்களையும் எண்ணி, பெரும் மன அழுத்தத்திற்கு இளையர்கள் ஆளாவதாக தேசிய சேவையாளர் ரகுநந்தன் தெரிவித்தார்.
“இதனால் கற்றல் என்பதைத் தேர்வுக்கெனத் தயாராகுதல் என்று மட்டும் எண்ணிவிடுகின்றனர். தேர்வுக்கு அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று, உறக்கமின்றி உழைத்து மனச்சோர்வுக்கும் இளையர்கள் ஆளாகின்றனர்,” என்று அவர் கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
முன்தயாரிப்பாக வேலைத் திறன்களை வளர்த்தல்
பிறர் தயவில் இருந்துவிட்டு இளையர்கள் திடீரென வேலை உலகில் காலடி எடுத்துவைத்துப் பொறுப்புகளை நிர்வகிக்கும் சூழலுக்கு மாறும்போது சவால்கள் ஏற்படுவதாக ‘ரேவன் கன்சல்டன்சி’ மனநல சிகிச்சை அமைப்பைச் சேர்ந்த மனநல ஆலோசகர் பிரவீன் நாயர், 47, தெரிவித்தார்.
“பதின்ம வயதை அடுத்து பெரியவர்களாகும்போது சிலர் தங்களின் வேலையிடங்களில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை,” என்று அவர் கூறினார்.
எனவே, பணிக்குரிய திறன்களை இளவயதில் அல்லது பள்ளிக் காலத்தில் ஒருவர் கற்றுக்கொள்வதன் மூலம் வேலையைத் தொடங்கும்போது ஓரளவுக்குத் தயாராக இருக்கலாம் என்று வாழ்க்கைத் தொழில் பயிற்றுநர் சரோஜினி பத்மநாதன் தெரிவித்தார்.
“திறமையாகச் செயல்படுதல், பேச்சாற்றல், புத்தாக்கச் சிந்தனை, மேலதிகாரிக்கு மரியாதை போன்றவை வேலையிடத்தில் ஒருவர் கடைப்பிடிக்கக்கூடிய முக்கிய திறன்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத்திற்கு என்ன தேவை என்று படித்துக்கொண்டே திட்டமிட்டு வேலைத் திறன்களை வளர்த்துக்கொள்ளும்படி திருமதி சரோஜினி அறிவுறுத்துகிறார்.

