லசால் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு ஒப்படைப்பைத் தொடங்கியபோது, உலகளவில் பெண்களைப் பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்றான கருப்பைவாய்ப் புற்றுநோய்க்குத் தீர்வுகாண விரும்பினார் 21 வயது குனிகா ஜெயின்.
அதன் விளைவாகப் பிறந்தது ‘சாவி’ (Chaavi) எனும் கருப்பைவாய்ப் புற்றுநோயைக் கண்டறிய உதவும் தனித்துவமான சுயபரிசோதனைக் கருவி.
இது, குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்குத் தனியுரிமை, எளிதான அணுகல், தங்கள் உடல்நலத்தின் மீதான கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக ஏற்படும் இந்த கிருமி, பாலியல் தொடர்புமூலம் பரவக்கூடியது. இது, முழுமையாகத் தடுக்கக்கூடிய ஒரு புற்றுநோய் ஆகும்.
“இருப்பினும், இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் இதனால் உயிரிழக்கிறார். ஒருநாளுக்கு ஏறக்குறைய 200 மரணங்கள்,” என்று பொருள் வடிவமைப்புப் பட்டதாரி குனிகா கூறினார்.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், போதிய விழிப்புணர்வு இல்லாமை, சமூகத்தில் நிலவும் களங்கம், ஆண் மருத்துவர்களிடம் செல்வதற்கான தயக்கம், ‘ஸ்பெகுலம்’ எனப்படும் மருத்துவ சாதனத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அச்சம் முதலியவற்றைச் சுட்டினார்.
மேலும், இந்திய கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், தங்கள் இனப்பெருக்க சுகாதாரம் குறித்து பேசும்போது, அவர்கள் சமூக, கலாசாரத் தடைகளை எதிர்கொள்கிறார்கள். சில இடங்களில் கருப்பைவாய்ப் புற்றுநோய் தீய சக்திகளால் ஏற்படுகிறது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
“இதனால் பல பெண்கள் பரிசோதனையை முற்றிலும் தவிர்க்கிறார்கள். இந்தத் தடைகளை உடைத்து, பெண்கள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய, அவர்களின் ஆரோக்கியத்தின்மீது அவர்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு கருவியை உருவாக்க விரும்பினேன்,” என்றார் குனிகா.
தொடர்புடைய செய்திகள்
‘சாவி’ சுயபரிசோதனைக் கருவி கச்சிதமாகவும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கையுறைகள், மாதிரி எடுக்க உதவும் துணைக் கருவி, பரிசோதனைத் திரவத்துடன் கூடிய கருவி ஆகியவை உள்ளன.
பெண்கள் சொந்தமாகவே மாதிரிகளை எளிதாகச் சேகரித்து, நிறம் மாறும் காகிதத் துண்டின் மூலம் உடனடியாகத் தங்களைச் சோதித்து கொள்ளலாம். தேவை ஏற்பட்டால் கூடுதல் பரிசோதனைக்குச் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை அவர்கள் ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பலாம்.
இந்த இரட்டைச் செயல்பாடு (சேகரிப்பு மற்றும் உடனடி கண்டறிதல்) (collection and detection) தற்போதுள்ள பரிசோதனை முறைகளில் காணப்படும் முக்கிய இடைவெளியைப் பூர்த்திசெய்வதாக குனிகா குறிப்பிட்டார்.
குனிகா தயாரித்த சாதனம் தேசிய அளவில் நடத்தப்பட்ட 2025 ஜேம்ஸ் டைசன் விருதிற்கான இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஜேம்ஸ் டைசன் விருது ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக வடிவமைப்புப் போட்டி. அது ஆர்வமிகு பொறியாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தொழில்நுட்பத்தின்வழி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உலகத்தில் ஒரு மாற்றத்தைக் ஏற்படுத்த ஊக்குவிக்கிறது.
‘சாவி’ சுயபரிசோதனைக் கருவி விரிவான களஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மருத்துவ, சமூகச் சவால்களைப் புரிந்துகொள்வதற்காக, டெல்லியில் ஒரு மாதம் முழுவதும் தங்கியிருந்து ‘ஆஷா’ எனப்படும் சமூக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், புற்றுநோய் நிபுணர்கள் முதலியோருடன் குனிகா கலந்தாலோசித்தார்.
கருவியின் ஆரம்பக்கால வடிவமைப்புகள் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டு கிராமப்புறப் பெண்களுக்குப் பயன்படுத்த எளிதாக உள்ளதா எனப் பரிசோதிக்கப்பட்டன. அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் சிலிகான் துணைப் பகுதி, மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி உறை போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
“என் கருவியைப் பயன்படுத்திய ஒருவர் அதைப் பயன்படுத்த எளிதாக இருக்கிறது என்று கூறி தமது மகள்களுக்கும் அதைப் பரிந்துரைத்தார்,” என்று குனிகா நினைவுகூர்ந்தார்.
சுமார் $2 மதிப்பிலான ‘சாவி’ சுயபரிசோதனைக் கருவி, செலவு, தூரம், சமூக களங்கம் போன்ற தடைகளைத் தவிர்த்தல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்கள் கருப்பைவாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள், பரிசோதனை முறைகள், இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை எளிதாகப் புரிந்துகொள்வதற்காக, ஆங்கிலத்தில் ஒரு கையேட்டையும் குனிகா உருவாக்கியுள்ளார். அது விரைவில் இந்தியிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“இது தொடர்பான விழிப்புணர்வும் கல்வியும்தான் பெண்களுக்குச் சரியான முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய அளவில் நடந்த போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான ‘சாவி’ சுயபரிசோதனைக் கருவி, உலகளவில் நடக்கும் ஜேம்ஸ் டைசன் விருது போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளது. இதில் வெற்றி பெறுபவருக்கு $50,700 பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
அடுத்தகட்டமாகச் சாதனத்தின் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றும் அதற்கு அரசு ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன என்றும் குனிகா தெரிவித்தார்.
“இந்த விருது, என்னுடைய யோசனைமீது நான் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு, உலகமெங்கும் கட்டாயமாகச் சென்றடைய வேண்டிய ஒன்றாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போது, அவர் வடிவமைப்பில் முதுகலைப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். படிப்புக்குப் பிறகு முழு நேரமாக ‘சாவி’ திட்டத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
ஒரு நாள், ‘சாவி’ சுயபரிசோதனைப் பெட்டி இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் என்பதே குனிகாவின் கனவு.
“சமூகத்தில் நிலவும் மௌனத்தாலும் களங்கத்தாலும் எந்தவொரு பெண்ணும் தன் உயிரை இழக்கக்கூடாது,” என்றார் அவர்.
ஜேம்ஸ் டைசன் விருது போட்டியில், அனைத்துலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 20 கண்டுபிடிப்புகள் அக்டோபர் 15 தேதியன்று அறிவிக்கப்படுவார்கள். இதைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.