வரைவோம் வெல்வோம்: அழகிய சைனாடவுன்

வரைவோம் வெல்வோம்: அழகிய சைனாடவுன்

2 mins read
சிவாணி சக்திவேல்
5c491fbc-0f96-468e-9417-4baa666ab7de
சைனாடவுனின் பகோடா சாலை. - படம்: சிவாணி சக்திவேல்

உங்கள் தூரிகை மூலம் சைனாடவுனின் வரலாற்றுத் தெருக்களுக்குள் ஒரு சாகசப் பயணம் செய்யத் தயாரா?

சிங்கப்பூர் சைனாடவுனில் ஜூன் மாதம் முழுவதும் டிராகன் படகுத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் ஸ்மித் சாலையில் மேள தாளங்கள், சிங்க நடனம், விறுவிறுப்பான துடுப்புச் சவால்களுடன் தொடங்கிய இக்கொண்டாட்டம், தற்போது பள்ளி விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்காகப் புதிய வடிவம் பெற்றுள்ளது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, இளம் உள்ளங்களின் கற்பனைத் திறனுக்கும் சாகச உணர்வுக்கும் சவால் விடும் வகையில் இரண்டு நிகழ்ச்சிகள் இந்த ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளன.

2026 சீனப் புத்தாண்டின்போது சைனாடவுனில் காட்சிக்கு வைக்கப்பட்ட சீனப் பாரம்பரிய அலங்காரங்கள்.
2026 சீனப் புத்தாண்டின்போது சைனாடவுனில் காட்சிக்கு வைக்கப்பட்ட சீனப் பாரம்பரிய அலங்காரங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் ‘சைனாடவுனை வரைவோம்’ என்ற ஓவியப் போட்டி, ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் ஸ்மித் சாலையில் உள்ள ‘கலாசார மைய’ (Cultural Heart) பகுதியில் நடைபெறவுள்ளது.

பள்ளி மாணவர்களும் சிறுவர்களும் சைனாடவுனின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெருக்கள், பாரம்பரிய கட்டடக்கலை, தெருக் காட்சிகள் போன்றவற்றைத் தங்கள் தூரிகைகளால் ஓவியமாகத் தீட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ், 10 வெள்ளி மதிப்புள்ள சைனாடவுன் உணவு, பானப் பற்றுச்சீட்டு, சைனாடவுன் பாரம்பரிய மையத்திற்கான இலவச நுழைவுச் சீட்டு ஆகியவை வழங்கப்படும்.

சைனாடவுனின் அரிய, அழகிய அடுக்குமாடிக் கட்டடத்தைப் பிரதிபலிக்கும் பீப்பள்ஸ் பார்க் காம்பிளெக்ஸ்.
சைனாடவுனின் அரிய, அழகிய அடுக்குமாடிக் கட்டடத்தைப் பிரதிபலிக்கும் பீப்பள்ஸ் பார்க் காம்பிளெக்ஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதுமட்டுமன்றி, சிறந்த ஓவியங்களுக்கு ஆர்வமூட்டும் பரிசுகளும் காத்திருக்கின்றன.

முதல் பரிசாக 899 வெள்ளி மதிப்புள்ள ஆப்பிள் ஐபேட் ஏர், இரண்டாம் பரிசாக 719 வெள்ளி மதிப்புள்ள நிண்டெண்டோ ஸ்விட்ச் 2, மூன்றாம் பரிசாக 355 வெள்ளி மதிப்புள்ள ஹூயான் காம்வாஸ் வரைதல் டேப்லெட் வழங்கப்படும்.

நான்கு முதல் பத்தாம் இடம்வரை வெல்பவர்களுக்கு தலா 50 வெள்ளி மதிப்புள்ள பாப்புலர் புத்தகக் கடைப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் வண்ணங்கள், தூரிகை போன்ற வரைதலுக்கான பொருள்களை எடுத்துவர வேண்டும். போட்டி நடக்கும் இடத்தில் ‘ஏ3’ வரைதல் தாள் மட்டுமே வழங்கப்படும்.

Tourists stroll through Chinatown, stopping to shop and take photos, on May 17, 2026.
Tourists stroll through Chinatown, stopping to shop and take photos, on May 17, 2026. - The Straits Times

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஜூன் 24க்குள் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். 150 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.

ஓவியப் போட்டியைத் தொடர்ந்து, மாணவர்களின் சாகச உணர்வைத் தூண்டும் வகையில் ‘சைனாடவுன் சிங்கப்பூர் முத்திரைப் பேரணி’ ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாகோ சாலை, மாஸ்க் சாலை, பகோடா சாலை, ஸ்மித் சாலை ஆகிய பகுதிகளில் சாகசப் பயணம் அமையவுள்ளது.

பங்கேற்பாளர்கள் சைனாடவுன் பார்வையாளர் நிலையத்திலிருந்து ஓர் இலவச வரைபடப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, அங்குள்ள 11 முக்கிய வரலாற்று இடங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒவ்வோர் இடத்தை அடையும்போதும் முத்திரைகளைச் சேகரித்து, அந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதைகளைத் தெரிந்துகொள்வதோடு, அழகான புகைப்படங்களையும் எடுத்து மகிழலாம்.

இந்த இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து சைனாடவுன் வர்த்தக சங்கத்தின் நிர்வாக இயக்குநர் லிம் யிக் சுவான் “கலையின் மூலம், இளம் பங்கேற்பாளர்கள் சைனாடவுனின் தனித்துவமான கதைகளையும், வண்ணங்களையும், கலாசார வளத்தையும் கண்டறிய முடியும்” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விடுமுறைசைனாடவுன்பள்ளிமாணவர்கள்ஓவியம்