சிங்கப்பூரில் வேலை, கல்வி, பயிற்சி என எதிலும் ஈடுபடாத 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 17,000ஆக இருந்தது.
மனிதவள அமைச்சு வெளியிட்ட 2024 ஊழியரணி ஆய்வின் மூலம் இந்தத் தரவுகள் கிடைக்கப்பெற்றன. முன்னதாக, 2013ல் 3.7ஆக இருந்த இப்பிரிவினரின் விழுக்காடு, பத்தாண்டுகள் கழித்து 4.1 விழுக்காடாக உயர்ந்தது.
இவ்வாறு தங்களது முழு ஆற்றலை அறிந்திடாமல் ‘மறைந்து’ வாழும் இந்த இளையர்கள், சமூகத்திலிருந்து விலகி, வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, முக்கியமான நேரடித் தொடர்புகளை அமைக்காமலும் வளர்ச்சி வாய்ப்புகளைப் நாடாமலும் ஒரு தேக்க நிலையில் உள்ளனர்.
இந்தக் குறிப்பிட்ட இளையர்ப் பிரிவினர் தங்களைப் பற்றித் தாழ்வாக எண்ணுவர்; பிறருடன் பழகும் திறன்களைக் கொண்டிருக்கமாட்டர்; நண்பர்களுடனும் பெற்றோருடனும் நல்லுறவு வளர்த்துக்கொள்ளமாட்டர். அத்துடன் பள்ளியிலும் சிறப்பாகச் செய்ய முடியாத நிலையில் இருக்கலாம்.
இதனாலேயே இவர்கள் இணைய உலகுக்குள் சென்றுவிடுவர். சமூகத்தை விட்டு விலகித் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வர்.
இந்தப் போக்கு அக்கறைக்குரியது எனச் சுட்டிய இளையர் நல ஆர்வலர் அமைப்பான ‘இம்பார்ட்’ (‘Impart’), இத்தகைய இளையர்களைச் சந்தித்து அவர்களுடன் பழகி நம்பிக்கைமிக்க உறவை வளர்த்துக்கொள்ள முற்படுகிறது.
வீடுகள், அடுக்குமாடித் தரைத்தளங்கள், இணைய விளையாட்டு இடங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ‘இம்பார்ட்’ தொண்டூழியர்கள், இந்தக் குறிப்பிட்ட இளையர் பிரிவினரிடம் பேசி அவர்களுக்கு உணர்வுரீதியான ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற இளையர் தொடர்பு மாநாட்டில் உரையாற்றியவர்களில் ஒருவரான ‘இம்பார்ட்’ நிறுவனரும் தலைவருமான நரசிம்மன் திவாசிக மணி, இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
ஃபெய் யூ சமூகச் சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்த மாநாட்டில் 300 சமூக ஊழியர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பிறருடன் பழகாமல் தங்களை மறைத்துக்கொள்ளும் இளையர்களைச் சென்றடைவதற்குப் புத்தாக்க உத்திகள் தேவைப்படுகின்றன. அத்தகைய உத்திகளைப் பல அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டன.
இளையர்கள் தங்களது வாழ்க்கையின் நோக்கத்தையும் சுய மதிப்பையும் கண்டறிய உதவுவதற்காக, ‘ஸ்பார்டன்ஸ்’ (Spartans) குத்துச்சந்தை மன்றத்துடன் இணைந்து ‘புரோஜெக்ட் க்ரிட்’ (Project GRIT) என்ற திட்டத்தை இம்பாரட் நடத்துகிறது. குத்துச்சண்டை நுணுக்கங்களைத் தேர்ச்சிபெற்ற பயிற்றுநர்களிடமிருந்து இளையர்கள் கற்றுக்கொள்வதுடன் மீள்திறன், பிரச்சினைகளைச் சமாளிக்கும் உத்திகள், சமூகத்தில் ஒருவர் என்ற உணர்வைப் பெறுதல் போன்ற பலன்களைக் காணலாம்.
அத்துடன் அந்த அமைப்பு, ‘பெட்டர்’ (Bettr), ‘ஹெட்ச்’ (Hatch) ஆகிய திட்டங்களின் மூலம் இளையர்களுக்கு நடைமுறை சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் சேர்த்து அவர்களை வேலையில் சேர்க்க முயல்கிறது.
“சிங்கப்பூரில் ஒவ்வோர் இளையரும் தங்களது முழு ஆற்றலைக் கண்டறிவதை நாம் அனைவரும் உறுதி செய்யலாம். இளையர்கள் ஒவ்வொருவரையும் வளர்த்தெடுத்து அத்தகைய எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம்,” என்று கூறினார் திரு நரசிம்மன் திவாசிக மணி.
வளங்கள் அதிகம் தேவைப்படும் ஒரு பணியைச் சமூக சேவையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வெற்றிகரமாகச் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட, ஒவ்வோர் இளையருக்கும் சராசரியாக மூவாண்டு காலம் பிடிப்பதாக ஃபெய் யூ அமைப்பின் உதவி இயக்குநர் திரு பெஞ்சமின் இயோ தெரிவித்தார்.


