அயல்நாட்டிலிருந்து வந்து சிங்கப்பூரில் குடிபெயர்ந்தவர்கள் புதிய சூழலில் சந்திக்கும் சவால்களை நன்கு அறிந்தவர் தேவ்நவின் மாதேஸ்வரன், 24.
பெரும் கனவுகளுடன் கூட்டைவிட்டுப் பறந்து சிங்கப்பூரில் வாழ்வாதாரம் அமைத்தோரில் அவரது குடும்பத்தினரும் அடங்குவர்..
மொழி வேறுபாடுகள், நிதி நிர்வாகச் சவால்கள், உயரும் செலவினங்கள் எனப் பலவற்றையும் தாண்டிச் சிங்கப்பூரில் வேரூன்றிய அவரது பெற்றோரின் அர்ப்பணிப்பால் தேவ்நவின், தன்னைச் சிங்கப்பூரர் என்று சொல்லும் பெருமிதத்தையும் பெற்றுள்ளார் .
பலருக்கும் உதவும் அனுபவப் பதிவுகள்
தன் அனுபவங்களால் கிடைத்த படிப்பினைகளைச் சமூக ஊடகத்தளங்களில் பதிவிட்டுவரும் தேவ்நவின், சிங்கப்பூரில் குடிபெயர்ந்த இந்தியர்களுக்கு ஆதரவுக்கரமாகத் திகழ்கிறார்.
“நான் அறிவுரை கேட்கும்போது என்னைச் சுற்றியிருந்தவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூரர்களாகவோ, நிரந்தரவாசிகளாகவோ இருந்ததால் அவர்கள் கூறிய தகவல்கள் பலவும் வெளிநாட்டவராக இருந்த எனக்குப் பொருந்தவில்லை. அந்தச் சிரமத்தை மற்றொருவர் சந்திக்கக்கூடாது என்பதால்தான் ‘இன்ஸ்டகிராம், டிக்டாக்’ பக்கங்களைத் தொடங்கினேன்,” என்றார் தேவ்நவின்.
‘ஃபைனேன்ஷியல் அலையன்ஸ்’ நிறுவனத்தைப் பிரதிநிதிக்கும் நிதி ஆலோசகராகப் பணியாற்றிவருவதால், வெளிநாட்டவருக்கென நிதி சார்ந்த பயனுள்ள தகவல்களையும் அவர் பதிவேற்றி வருகிறார்.
தாய்நாடாக அமைந்த சிங்கப்பூர்
தமிழ்நாட்டின் செங்கல்கோடு மாவட்டத்திலிருந்து 7 வயதில் சிங்கப்பூர் வந்தவர் தேவ்நவின். வந்த புதிதிலேயே, தொடக்கப்பள்ளியில் நேர்ந்த ஒரு சம்பவம் சிங்கப்பூர் மக்களின் அன்பை அவருக்கு உணர்த்தியது.
“அப்போது எனக்கு ஆங்கிலம் தெரியாது. பள்ளியில் ஆசிரியர், சக மாணவர்கள் பேசுவது புரியவில்லை. மணி அடித்ததும் பள்ளி முடிந்துவிட்டது என எண்ணி அம்மாவைத் தேடி சிற்றுண்டிச் சாலைக்கு வந்தேன்.
“அங்கு அம்மாவைக் காணாமல் ‘அம்மா, அம்மா’ என அழுதேன். ஒரு சீன மாது என்னைக் கண்டு என் அம்மாவைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்தார். அப்போதுதான், மனிதருக்கு நம் மொழி புரியாவிட்டாலும் நம் உணர்வுகள் புரியும் என அறிந்துகொண்டேன்,” என்றார் தேவ்நவின்.
அன்று முதல் தேவ்நவின், தனக்குத் தெரியாத தகவல்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தயங்குவதில்லை.
நிலைத்தன்மை நாடிய பயணம்
சிங்கப்பூரில் வெளிநாட்டவர் என்றாலே நிலையான வாழ்வு குறித்த அச்சம் இருக்கும். தந்தைக்கு வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா என்ற அத்தகைய அச்சமும் தேவ்நவினின் குடும்பத்திற்கு இருந்தது.
‘ஓ’ நிலைத் தேர்வுகளை எழுதி முடித்து, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த வேளையில் திடீரெனத் தந்தைக்கு வேலை போனது.
“தேர்வு முடிவுகள் வந்தன. எனக்கு மூன்று புள்ளிகள் கிடைத்தன; அந்த மதிப்பெண்களுடன் நான் விரும்பிய எந்தக் கல்லூரிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். இருந்தபோதும் இங்குக் கல்வி கற்பதற்கான எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்தது,” என்றார் தேவ்நவின்.
அந்நேரத்தில் அவருடைய தாத்தா கூறிய சொற்கள் ஊக்கமளித்தன. “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் பேரன் சிங்கப்பூரிலேயே படிக்கவேண்டும். நான் என் நிலத்தை விற்றாவது அவனைப் படிக்கவைப்பேன்,” என்றார்.
அந்த உந்துதலில், தேவ்நவின் மாணவக் கடப்பிதழுக்குப் பதிவுசெய்தார். பெற்றோர் தம் வாழ்க்கைச் சேமிப்புகளைப் பயன்படுத்தி அவரைப் படிக்கவைத்தனர். தேவ்நவின் பகுதிநேர வேலைகளுக்கும் சென்றார்.
காத்திருப்புக்குப்பின் குடியுரிமை
ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் படித்த தேவ்நவின், தேசியச் சேவையை நிறைவேற்றியபின் சிங்கப்பூர்க் குடியுரிமையைப் பெற்றார்.
“அந்த கணம் என் கண்களில் கண்ணீர் மல்கியது. என் தாய் என்னை ஏற்றுக்கொண்டதுபோன்ற உணர்வு. எங்கள் அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. என் தாத்தா பழனிக்குச் சென்று முடியிறக்கினார்,” என்றார் தேவ்நவின்.
பல்லாண்டுகளாக நிலவிய நிச்சயமற்ற நிலைக்கு இச்செய்தி முற்றுப்புள்ளி இட்டது.
கணினிப் பொறியியல் துறையில் பட்டப்படிப்பைத் தொடங்கிய தேவ்நவின், பின்னர் தன் ஆர்வம் வேறு பக்கம் திரும்பியதை உணர்ந்தார்.
நாடுகளுக்கிடையே இடம்பெயர்ந்து வாழும் மக்களின் சவால்களை ஆழமாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் தற்போது சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த கல்விக் கல்லூரியில் தனக்கென வடிவமைத்த படிப்பைப் பயின்றுவருகிறார்.
“சிங்கப்பூரில் எவ்வளவு காலம் இருப்போம் என்ற நிச்சயமின்மையால் முதலீடு செய்யத் தயங்குவோர்க்கு உதவ விரும்புகிறேன்.எதிர்காலத்தில், உலக அளவில் குடியேறிகளுக்கு வழிகாட்டும் நிதித் திட்டமிடல் நிறுவனத்தை உருவாக்குவதே என் இலக்கு,” என்றார் தேவ்நவின்.

