இந்து இளையர் கட்டமைப்பு (Hindu Youth Network) தனது ஐந்து ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணம் ஏப்ரல் 5ஆம் தேதி சனிக்கிழமை கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்து அறக்கட்டளை வாரியத்திற்குக்கீழ் இயங்கும் இக்கட்டமைப்பின் இளையர்கள், தங்கள் பண்பாட்டின் மீதுள்ள பிடிப்பையும் இறைவன் மீதுள்ள பக்தியையும் இசையின் மூலம் வெளிப்படுத்தும் வண்ணம் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
ஸ்ரீ மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் இசை, நடன நிகழ்ச்சிகளைப் படைத்தனர்.
இல்லற வாழ்வில் ஈடுபவர்கள் வாழ்க்கையைச் சீராக நடத்த உதவும் ‘பஞ்ச மகா யக்ஞம்’ என்பதைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது நிகழ்ச்சி.
‘பஞ்ச மகா யக்ஞம்’ என்பதில் தெய்வம், ரிஷி, பித்ரு, மனிதம், பூதம் ஆகிய ஐந்தும் அடங்கும். மனிதன் இந்த ஐந்திற்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி அமைந்தது.
பாடல்களும் நடனங்களும் வந்தோரிடம் வரவேற்பைப் பெற்றன.
பாரம்பரிய இந்திய இசைக்கருவிகளுடன் மேற்கத்திய, அரபு இசைக் கருவிகளும் நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது பலரைக் கவர்ந்தது.
மூன்று மாதங்களாக நிகழ்ச்சிக்காகப் பயிற்சி செய்ததாக அமைப்பினர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிகழ்ச்சி மூலம் இந்தியப் பண்பாடு பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார் மாணவர் த்ரிநேத்ரா, 16.
“என் அடையாளத்தை இசையின் மூலம் தெரிந்துகொள்ள இந்நிகழ்ச்சி உதவியது,” என்று குறிப்பிட்ட த்ரிநேத்ரா, “இளையர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பண்பாட்டை அறிந்து, உணர வேண்டும்,” என்றார்.
இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் இளையர்களை ஈர்த்து, இந்து சமயம் குறித்த புரிதலை உருவாக்க முனைவதாகக் கூறினார் இந்து இளையர் கட்டமைப்பின் தலைவர் கார்த்திக் ராமசாமி, 30.