இளையரிடையே தொழில்முனைப்புடன் வர்த்தகத் திறன்களை ஊக்குவித்த போட்டி

3 mins read
1f270139-e237-4f2f-b007-3e1d3549c852
இயோ சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவர் தாரா ஷிவானி, 15. - படம்: ஹாலோஜென் சிங்கப்பூர்
multi-img1 of 3

லாப நோக்கமற்ற அமைப்பான ‘ஹாலோஜென்’, ஆண்டுதோறும் நடத்தும் ‘தேசிய இளம் தொழில்முனைப்புச் சவால்’ (NFTE (Network For Teaching Entrepreneurship) Youth Entrepreneurship Competition), நவம்பர் 14ஆம் தேதி ஷா அறக்கட்டளை முன்னாள் மாணவர் மன்றத்தில் இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது.

தொழில்முனைப்பைக் கற்பிக்கும் கட்டமைப்பு (என்எஃப்டிஇ), இப்போட்டிவழி இளம் சிங்கப்பூரர்கள், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தோரின் தொழில்முனைப்பு ஆர்வத்தை வளர்த்து வருகிறது.

தொழில்துறைத் தலைவர்களின் முன்னிலையில் தாங்கள் உருவாக்கிய வர்த்தகத் தீர்வுகளை இளையர்கள் படைப்பதற்கான தளத்தை இது வழங்கிவருகிறது.

பெருநிறுவன தன்னார்வலர்களால் ஆதரிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியின்வழி, மாணவர்கள் சந்தை ஆராய்ச்சி, நிதிக் கல்வியறிவு, வாடிக்கையாளர்களுக்காக வர்த்தக யோசனைகளைப் படைத்தல் போன்ற முக்கிய வர்த்தகத் திறன்களைக் கற்றுக்கொண்டனர்.

இத்திட்டத்தில் மொத்தம் பங்கேற்ற 16 பள்ளிகளைச் சேர்ந்த 539 மாணவர்களிலிருந்து 45 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தங்களின் யோசனைகளை இறுதிப்போட்டி நாளன்று, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்குச் சாவடிகள் வைத்து படைத்துக் காட்டினர். இதைத் தொடர்ந்து ஆறு இறுதிப் போட்டியாளர்கள் தங்களின் வர்த்தகத் தீர்வுகளை மேடையில் நடுவர்கள் முன்னிலையில் படைத்தனர்.

போட்டியின் வெற்றியாளர், ‘அனைத்துலக இளம் தொழில்முனைவர்’ (Global Young Entrepreneur) பட்டத்தைப் பெற்றதோடு நியூயார்க் நகரில் ‘உலக இளையர் தொழில்முனைப்புச் சவால்’ போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

45 போட்டியாளர்களில் ஒருவரான இயோ சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவி தாரா ஷிவானி பிரேம் ஆனந்தன், 15, படிப்பதற்குக் கவனச்சிதறல் இல்லாத ஓர் அமைதியான சூழல் தேவைப்படும் மாணவர்களுக்குத் தீர்வாக ‘டக்லிங்ஸ் ஸ்டடி ஹெவன்’ (Duckling’s Study Heaven) என்ற தலைப்பில் தனது படைப்பை அமைத்தார்.

“மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போது தாங்கள் இருக்கும் சூழல் காரணமாகக் கவனச்சிதறலுக்கு ஆளாகின்றனர்,” என்று அவர் கூறினார்.

வர்த்தகத் திட்ட உருவாக்கத்தில் செலவுக்கான கட்டமைப்பு, வருவாயைத் திட்டமிடுதல் போன்றவற்றில் ஏற்பட்ட சிக்கல்களைத் தான் களைந்தபோது வர்த்தகம் சார்ந்த புதிய திறன்களைக் கற்றுக்கொண்டதாகச் சொன்னார்.

“எதிர்கால வர்த்தக யோசனைகளுக்கு நான் பயன்படுத்தக்கூடிய நுணுக்கங்களை இந்த அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது,” என்று அவர் கூறினார்.

செல்லப்பிராணி உரிமையாளர்கள், பெரும்பாலும் தங்களின் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தங்களின் செல்லப்பிராணிகளுக்குப் பாதுகாப்பான ஒரு பராமரிப்பு மையத்தைக் கண்டுபிடிப்பதில் பிரச்சினையை எதிர்நோக்கலாம். இதைத் தீர்க்க முடிவு செய்தார் செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர் ஜித்தேஸ்வரன் சுரேஷ், 15.

தன்னுடைய செல்லப்பிராணிப் பராமரிப்பால் அவருக்கு ஏற்பட்ட இந்த யோசனை, விளையாட்டு மைதானத்துடன் இணைந்த ஒரு செல்லப்பிராணி ஹோட்டல் குறித்த திட்டத்தைப் படைத்தார்.

“ஒரு வணிகத்தால் உண்மை உலகப் பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முடியும் என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்நிகழ்ச்சி எனக்கு உதவியது,” என்று அவர் கூறினார்.

மற்றொரு போட்டியாளரான போவன் உயர்நிலைப்பள்ளி மாணவர் 17 வயது ஹரேஷ் சுப்ரமணியன், இளையர்களிடையே பாரம்பரிய விளையாட்டுகளையும் கலாசார அறிவையும் ஊக்குவிக்க ‘கேம் ஹவுஸ் கஃபே’ என்ற இடத்தைப் பற்றிப் படைத்தார். பாரம்பரியத் தொடர்பை இழந்துவிட்ட தனது தலைமுறைக்காக ஒன்றுகூடி விளையாடும் ஓர் இடத்தை உருவாக்கினார்.

“இது ஒருவித சிறிய அருங்காட்சியகம் என்றுகூட சொல்லலாம். இங்கு மக்கள் தங்களது கலாசாரத்தைப் பகிர்ந்துகொண்டு மற்றவர்களின் கலாசாரத்தையும் அனுபவிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சி அவரது தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்த உதவியது என்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவருக்குக் கற்பித்தது என்றும் ஹரேஷ் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்