உயிரோவியத் திரைப்படங்களைச் சிறுவயதிலேயே பார்த்து ரசித்த ஜோசுவா பெரேரா, உயிரோவியர் ஆகும் வேட்கை கொண்டார்.
நூற்றுக்கணக்கான ஓவியங்களைக் கைப்பட வரைந்து 30 நொடி உயிரோவியக் காணொளிகளை உருவாக்கிய நினைவுகள், இவர் முகத்தில் புன்முறுவலை வரவைத்தன.
“எப்படி உயிரோவியர் ஆவது என்பது பற்றி தொடக்கப்பள்ளி நாள்களில் எனக்குத் தெரியாது. எளிய ஓவியங்களைத் தீட்டினேன். என் துறைக்குத் தேவைப்படும் பொறுமையையும் விடாமுயற்சியையும் எனது அனுபவங்கள் வழங்கின,” என்றார்.
இப்போது அவர், ஒரு முழுநேர உயிரோவியர். ‘ஸ்கேப்’ (*SCAPE) கார்டூன்ஸ் அண்டர்கிரவுண்ட் உள்ளிட்ட படைப்பூக்க விழாக்களிலும் போட்டிகளிலும் அவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ‘கிளொவுடி’ (Cloudy), ‘ஹேவ் யூ சீன் மை ரேபிட்’ (Have You Seen My Rabbit?), ‘ஸ்டேன்ட் பை’ (Stand By) ஆகிய அவரது படைப்புகள் பலரது கவனத்தையும் பெற்றுள்ளன.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அவர் பயின்று சிறந்த மதிப்பெண்களையும் பெற்றார்.
இளையர்களுக்கு உரித்தான வேகத்துடன் ஆசிரியர்கள் கற்பிக்கும் விவேகம் சேரும்போது யோசனைகள் யாவும் தரமான படைப்புகளாக உருபெறுவதாக ஜோசுவா கூறினார்.
மக்களின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல கதைகளே, உயிரோவியக் கலைக்கு மூச்சுக்காற்றாக உள்ளன என்றார் அவர்.
‘பிரதர் பேர்’ போன்ற திரைப்பட்டங்களின் உருக்கமான, பண்புசார்ந்த கதைகள், உயிரோவியங்களின் மீதான ரசனையை ஏற்படுத்தியதாக ஜோசுவா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்குப் பிடித்த உயிரோவியப் படங்களை என் பெற்றோர் எனக்காக அன்புடன் வாங்கித்தருவர். ஓரே படத்தைத் தொடர்ந்து பார்த்து அதன் கலைக்கூறுகளை நுணுகி ஆராய்வேன்,” என்று அவர் கூறினார்.
எழுத்துத்துறை போல வரைகலைத் துறையிலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைக் கலைஞர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்றாலும் மனித ஆற்றல் அதை விஞ்சும் என்று ஜோசுவா நம்புகிறார்.
“ஆயினும், அவை இன்னும் மனித உயிரோவியர்களின் தரத்தை எட்டவில்லை என்னும் நிலையைக் காணலாம். உயிரோவியர்களுக்குப் பதிலாக பிழைகளுடனும் தவறுகளுடனும் அவை வரையப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
மனித ஆற்றலில் தரமும் நேர்மையும் இருந்தால் அதுதான் இறுதியில் மேலோங்கும் என நம்புகிறார் ஜோசுவா.
யோசனை உருவெடுக்கவும் வேலைப்பாடுகள் நிறைவுபெறவும் தொழில்நுட்பம் உதவினாலும் இதை வழிநடத்துவதற்கு மனிதர்கள் தேவைப்படுகின்றனர். ஒத்துழைப்பு, ஆர்வம் போன்ற மனிதப் பண்புகள் அதற்குத் தேவைப்படுகின்றன என்றார் ஜோசுவா.
கிளவுடி படத்திற்காக தமக்குப் பக்கபலமாக இருந்த ராயன் லீ, ரினே போ, பேடேவிட் பென்வெனுட்டி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் ஜோசுவா கூறினார்.