குறைந்த வருமானக் குடும்பத்தில் வளர்ந்த கார்த்திக்கேசன் நடராஜன், பலரின் முன்னேற்றப் பயணத்தைத் தடுக்கக்கூடிய சவால்களை வாழ்க்கையில் எதிர்கொண்டார்.
ஆனால், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), அரசுத் திட்டங்கள் போன்றவற்றின் உறுதியான ஆதரவோடு, அவர் விடாமுயற்சியுடன் உழைத்துச் சிறந்த தேர்ச்சி பெற்றார்.
அதன் அங்கீகாரமாக, இவ்வாண்டு நடைபெற்ற சிண்டாவின் 34வது உன்னத விருதுகளில் முதன்மை விருதாளராக (valedictorian) 28 வயது கார்த்திக்கேசன் தேர்வு செய்யப்பட்டார். இவர் தம் குடும்பத்தில் முதல் தலைமுறை பல்கலைக்கழகப் பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தம் தொடக்கப்பள்ளி காலத்தில் கல்விக்கான வசதிகள் மிகக் குறைவாகவே இருந்தன என்று நினைவுகூர்ந்த கார்த்திக்கேசன், “அப்போது சிண்டா எனக்கு பள்ளிப் பொருள்களை வழங்கி உதவியது. அது பெற்றோரின் சுமையைக் குறைத்ததோடு நான் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு சூழலையும் உருவாக்கியது,” எனக் குறிப்பிட்டார்.
அந்தக் காலத்தில், அறிவியலின்மீது உருவான ஆர்வமே, முதலில் ரிபப்ளிக் பல்துறை தொழிற்கல்லூரியில் உயிரியல் மருத்துவ அறிவியலை (Biomedical Sciences) படிக்கவும், பின்னர் யேல்-என்யூஎஸ் கல்லூரியில் வாழ்க்கை அறிவியலை (Life Sciences) தொடரவும் அவருக்கு வழிவகுத்தது.
கடந்த 2019ல் அவர் தேசிய சேவையில் இருந்தபோது, அவரின் தந்தை திடீரெனப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு முதல் நிலை இரைப்பைப் புற்றுநோயும் (Stage One Gastric Cancer) இருப்பது கண்டறியப்பட்டது.
“அப்போது, என் பயிற்சியை நிறுத்திவிட்டு பெற்றோருடன் முழுநேரமும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
“ஆனால், வார இறுதிகளில் அப்பாவைச் சந்திக்க சென்றபோது, என் பயிற்சி நேரத்தை மற்ற நாள்களில் மேற்கொண்டு எனது அட்டவணையில் ஒருங்கிணைக்க முடியும் என்பதை உணர்ந்தேன். இறுதியில், அவர் மெதுவாக குணமடைவதை நேரில் கண்டேன். இப்போது அவர் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்,” என்று கார்த்திக்கேசன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த அனுபவம், கடினமான சூழ்நிலைகளிலும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதைக் கற்றுத்தந்ததாக கார்த்திக்கேசன் கூறினார்.
குடும்பத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதல் நபராக, சில நேரங்களில் பாடத்திட்ட இடைவெளிகளை (knowledge gaps) சமாளிக்க சிரமமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல், நண்பர்களின் ஆதரவு, அனைத்துலக ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் அவர் அதை வெற்றிகரமாக சமாளித்தார்.
ஏ*ஸ்டார், ஹார்வர்ட், யேல் போன்ற முன்னணி நிறுவனங்களில் புற்றுநோய் ஆராய்ச்சி, புதுப்பித்தல் உயிரியல் (Regenerative Biology), கணினி ஆய்வுக் கருவிகள் (Computational Tools) ஆகிய துறைகளில் ஆராய்ச்சி அனுபவம் பெறும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
தமக்குத் துணையாக இருந்து, தம்மை வளர்த்து ஆளாக்கிய சமூகத்திற்கு திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணத்தோடு சிண்டாவுக்குத் திரும்பிய கார்த்திக்கேசன், தொண்டூழியராகவும் துணைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு, இளையர்கள், குழந்தைகள், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உதவும் திட்டங்களில் ஈடுபட்டார்.
“நான் ஆசிரியர் உதவியாளராக (Teaching Assistant) பணிபுரிந்தபோது, குழந்தைகளுடன் தொடர்புகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
“பின்னர், அதிகப் பொறுப்புகளை ஏற்று, பயனாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, என்னால் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தை முழுமையாக உணர்ந்தேன்,” என்று தமது அனுபவத்தை அவர் விளக்கினார்.
சிண்டாவின் 34வது உன்னத விருது விழாவில் பெற்ற அங்கீகாரத்தைப் பற்றி அவர், “என் ஆரம்ப வளர்ச்சியில் பெரிதும் துணைநின்ற சிண்டா, என் கல்வி, ஆராய்ச்சி, தன்னார்வ பங்களிப்புகள் அனைத்தையும் அங்கீகரித்திருப்பது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது,” எனக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் புற்றுநோய் உயிரியலில் (Cancer Biology) முனைவர் பட்டம் பெறவும், விடுமுறைக்கால பட்டறைகள் மூலம் இளங்கலை மாணவர்களுக்கு வழிகாட்டுதலும் ஆராய்ச்சி வாய்ப்புகளும் வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.