அண்ணனின் வழியில் கடல்துறையில் தடம் பதிக்கும் தம்பி

அண்ணனின் வழியில் கடல்துறையில் தடம் பதிக்கும் தம்பி

3 mins read
c912a832-4332-4d4d-bf75-60ac4ce863d0
‘பெர்ஜ் பல்க்’ நிறுவனத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றும் 28 வயதுக் கதிரவன் சுப்பரமணியம். - படம்: கடல்துறை, துறைமுக ஆணையம்

நடுக்கடலில் கடற்கொள்ளையர்களைத் தடுப்பது, கடற்படைப் பயிற்சிகள் நடக்கும் ஆபத்தான பகுதிகளில் விழிப்புடன் கப்பலைச் செலுத்துவது, எதிர்பாராத மின்தடைகளை எந்தப் பதற்றமுமின்றி அமைதியாகக் கையாள்வது ஆகிய சாகசங்கள் நிறைந்த வேலைகள்  பொதுவாக இளையர்களை ஈர்க்கக் கூடியவை.

அவ்வாறே, 28 வயதுக் கதிரவன் சுப்பரமணியத்தின் மனத்திலும் கடல்துறையின்மீது ஆழமான ஈர்ப்பு உருவானது. 

செம்பவாங் கப்பல் கட்டும் தளத்தில் மின்சாரப் பொறியாளராகப் பணியாற்றிய, தன்னைவிட 10 வயது மூத்த அண்ணன் பகிர்ந்த சுவாரசியமான அனுபவங்களே கதிரவனின் கனவுகளுக்கு வித்திட்டன.

“வழக்கமான அலுவலகப் பணியிலிருந்து மாறுபட்ட, ஆற்றல்மிக்க துறையாக அது எனக்குத் தோன்றியது,” என்றார் திரு கதிரவன்.

சிராங்கூன் தொடக்கக்கல்லூரியில் பயின்ற கதிரவன், பின்னர் கடலோடியாக வேண்டும் என்ற இலக்குடன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பிரிவில் சேர்ந்தார். 

அங்கு அவர், கப்பல் வடிவமைப்பு, கடல்துறைப் பொறியியலில் நிபுணத்துவம் பெற்றார்.

பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தில் கடல்துறை இளையர் தூதராகச் சேர்ந்தபோது பல்வேறு மாநாடுகளில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த அனுபவங்கள் அவரது இலக்கை விரிவுபடுத்தின.

கடல் பயணத்தைத் தாண்டி, கரையில் இருந்தபடியே புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, கப்பல் துறையின் நீடித்த நிலைத்தன்மையை மேம்படுத்துவது எனப் பல புதிய வாய்ப்புகள் இருப்பதை அவர் ஆழமாக உணர்ந்தார்.

தொடர்ந்து, 2023ல் ‘பெர்ஜ் பல்க்’ (Berge Bulk) நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் நிர்வாகப் பயிற்சி பெற்ற அவர், தற்போது அந்நிறுவனத்தின் புதுமைப் படைப்புப் பிரிவில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். கப்பல்களின் செயல்திறனை மேம்படுத்துவது, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முன்னெடுப்புகளில் பங்காற்றுவது இவரது முக்கிய அன்றாடப் பணிகளாகும்.

“பல நேரங்களில் ஒட்டுமொத்தத் துறையிலும் இல்லாத புதிய தீர்வுகள் எங்களுக்குத் தேவைப்படும். அதற்காகக் காத்திராமல், நாங்களே சுயமாகச் சிந்தித்து புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்க என் நிறுவனம் முழுச் சுதந்திரம் வழங்குகிறது,” என்று கதிரவன் குறிப்பிட்டார்.

தான் மட்டுமன்றி தனது அண்ணனும் அக்காவும்கூடக் கடல்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார். அவரின் அண்ணன் உற்பத்தி, சேமிப்பு, சரக்கு மாற்றத்துக்கான கப்பல் (FPSO) துறையிலும், தமக்கை சரக்குப் பெட்டகங்களுக்கான கட்டமைப்புத் தளவாடத் துறையிலும் பணியாற்றுகின்றனர். அன்றாட வேலையில் ஏற்படும் இயந்திரவியல், மின்னணுவியல் அம்சங்கள் பற்றி அண்ணனும் தம்பியும் கலந்துரையாடுவர்.

(இடமிருந்து) அண்ணன் கார்த்திகேயன் சுப்பரமணியம், அக்கா கார்த்தினி சுப்பரமணியம், தம்பி கதிரவன் சுப்பரமணியம்.
(இடமிருந்து) அண்ணன் கார்த்திகேயன் சுப்பரமணியம், அக்கா கார்த்தினி சுப்பரமணியம், தம்பி கதிரவன் சுப்பரமணியம். - படம்: கதிரவன் சுப்பரமணியம்

இளையர்களை இத்துறைக்கு ஈர்க்கும் முக்கியத் தளமாக, ஏப்ரல் 20 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிங்கப்பூர்க் கடல்துறை வாரம் (Singapore Maritime Week) 2026 அமைகிறது.

இதையொட்டி, வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறும் திறனாளர்க் கண்காட்சியில் (Talent@SMW) கதிரவன் கலந்துகொள்ளவுள்ளார். அன்றைய தினம் காலை நடைபெறும் இளையர்களுக்கான சிறப்பு மாநாட்டில் குழு விவாதிப்பாளராகவும் கலந்துகொண்டு, மின்னிலக்க மாற்றம், கரியமில வாயு வெளியேற்றக் குறைப்பு குறித்து மாணவர்களுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.

கடல்துறை என்பது கப்பல் பயணம் சார்ந்தது மட்டுமே என்ற பொதுவான எண்ணம் மாற வேண்டும் என்றார் கதிரவன்.

“செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு எனப் பல புதிய தொழில்நுட்பங்கள் இத்துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

“இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களால், இனி வரும் காலங்களில் ஒருவருடைய வேலை வரம்பு விரிவடைந்து, அவர் மேலும் பல புதிய திறன்களைக் கற்றுச் செயல்படும் நிலை உருவாகும் என உறுதியாக நம்புகிறேன்,” என்று கதிரவன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்