மாணவர்களின் குறைகளில் கவனம் செலுத்துவதைவிட, அவர்களிடம் உள்ள நிறைகளை அடையாளம் காண்பதே ஆரோக்கியமான மனநலத்திற்கு வழிவகுக்கும்.
‘ஃபோர்ட்டே 360’ (Forte 360) அமைப்பின் நிறுவனர் திவ்யா நந்தகுமாரனுக்கு இந்தக் கொள்கை, மாணவர் நலனுக்கான தமது அணுகுமுறையின் அடிநாதமாக உள்ளது.
மன அழுத்தம் அல்லது பதற்றம் ஏற்படும்வரை காத்திராமல், மாணவர்களின் மனநல மீள்திறனுக்கு வலுவான அடித்தளத்தை அளிக்க முற்படுகிறார் குமாரி திவ்யா.
பல்கலைக்கழகத்தில் உயிர்-பொறியியல் (Bio-Engineering) படித்துக்கொண்டிருந்தபோது, ஆய்வகங்களில் வேலை செய்வதில் தமக்கு விருப்பம் இல்லை என திவ்யா உணர்ந்தார்.
இதனால் அவர், பல்கலைக்கழகக் கல்வியிலிருந்து இடைவேளை எடுத்துக்கொண்டார்.
அரசு சாரா அமைப்பு ஒன்றில் பயிற்சி பெற்றபோது, அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் ஏங்கும் பிள்ளைகள் பலரை அவர் சந்தித்தார்.
அங்குள்ள சிறுவன் ஒருவன், “என் அப்பாவுக்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு உள்ளது; நானும் வளர்ந்த பிறகு அதையே செய்வேன்,” எனத் தம்மிடம் கூறியபோது தாம் திகைப்படைந்ததாக திவ்யா கூறினார்.
பிள்ளைகளை நல்வழிப்படுத்த எண்ணிய அவர், தொடக்கப்பள்ளி மாணவர்களின் நல்வாழ்வுக்கான ‘ஃபோர்ட்டே 360’ அமைப்பை உருவாக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அதற்கான அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் தமது அமைப்பு வழங்குவதற்கு திவ்யா முன்னுரிமை அளிக்கிறார்.
“முரட்டுத்தனமாகவோ கோபமாகவோ நடந்துகொள்ளும் குழந்தைகளிடம் எந்தத் திறமையும் இல்லை என்று நினைத்துப் பலரும் அவர்களைக் கைகழுவிவிடுகின்றனர்,” என்று திவ்யா குறிப்பிடுகிறார்.
“எவ்வளவு பிரச்சினைகளைக் கொடுத்தாலும் சரி, எல்லாப் பிள்ளைகளிடத்திலும் தனித்திறமை ஏதேனும் நிச்சயம் இருக்கும்,” என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
மனநோயின்மையை மட்டும் கருதி ஒருவர் மனநலத்துடன் இருக்கிறார் எனச் சொல்லிவிட முடியாது. உண்மையான மனநலத்திற்கு மன உறுதியும் நல்லவற்றுக்கான நன்றியுணர்வும் தேவை என்பது திவ்யாவின் கருத்து.
இத்தகைய குணங்களை வளர்ப்பதன் மூலம், மாணவர்கள் மனநோயற்றவர்களாக இருப்பதோடு மட்டுமன்றி, வாழ்க்கையில் வெற்றியாளர்களாகவும் திகழலாம்.
2021ல் சிறிய தன்னார்வ முயற்சியாகத் தொடங்கப்பட்ட ‘ஃபோர்ட்டே 360’ அமைப்பை முழுமையான அரசு சாரா அமைப்பாக (NGO) மாற்றுவது எளிதாக இருக்கவில்லை.
ஆசிரியர் பணியிலோ உளவியலிலோ முறையான பின்னணி இல்லாத இளம் தலைவராக திவ்யா பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தார்.
நிதி நெருக்கடி, தனிப்பட்ட மனஅழுத்தம் ஆகியவற்றையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது.
இருப்பினும், தமது குறிக்கோளின்மீது கொண்ட உறுதியாலும், அன்புக்குரியோரின் ஆதரவாலும் அவர் அந்தச் சவால்களை முறியடித்தார்.
மாணவர்களின் மனநலனை மதிப்பெண்களோடும் பாடப் புத்தகங்களோடும் மட்டும் இணைத்துப் பார்க்காமல், அவர்களின் தனித்திறன்களைக் கொண்டாடும்படி திவ்யா பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறார்.
“கல்வி அறிவு மட்டுமே பிள்ளைகளை முழுமையாக்காது. நன்றியுணர்வையும் மன உறுதியையும் பிள்ளைகளின் மனங்களில் கட்டியெழுப்பிப் பரிவுமிக்க சமூகத்தை உருவாக்குவோம்,” என்றார் குமாரி திவ்யா.
மனநலத்தைக் காக்கும் நெறி, அனைவரது அன்றாட வாழ்க்கை முறையுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்று திவ்யா கூறினார். அது வாழ்நாள் முழுவதற்குமே நல்ல அரண் என்றும் அவர் சொன்னார்.
“நீங்கள் நலமாக இருக்கிறீர்களா, மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா போன்ற கேள்விகளை ஒருவர்க்கு ஒருவர் கேட்டுப் பழகவேண்டும். அதைக் கேட்கும்போது கவனம் செலுத்துங்கள். அப்போதுதான் நமது அன்புக்குரியவர்களின் உணர்வுகள் வெளிப்பட்டு நமக்குத் தென்படும்,” என்று அவர் கூறினார்.

