சிறப்புத் தேவை உள்ளவர்களுக்கு ஆதரவுத் திட்டம்: தங்க விருது பெற்றார் பிரணாவ்

2 mins read
4e9b8b36-986e-4225-9274-6f9996cb7fd0
‘புரோஜெக்ட் ஹார்ட்ஸ்’ (Project Hearts) மாணவர் அமைப்பை நண்பர்களுடன் நிறுவிய பிரணாவ் பிராயன். - படம்: பிரணாவ் பிராயன்

நண்பர்களுடன் உணவகம் ஒன்றில் அமர்ந்து இன்பமாக உண்கையில், சிறப்புத் தேவை உள்ள மாணவர்கள் அருகில் அமர்ந்திருந்ததைக் கண்டார் பிரணாவ் பிராயன், 22.

வழக்கத்துக்கு மாறாக அந்த மாணவர்கள் நடந்துகொண்டதைக் கவனித்த பிறகு அவர்கள் மதியிறுக்கம் கொண்டவர்கள் என்று அப்போது தமது 20 வயதில் உணர்ந்தார் பிரணாவ்.

கவலையிலும் அக்கறையிலும் அவரின் மனதில் ஒரு சிந்தனை ஊற்றெடுத்தது.

இத்தகைய மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் ‘புரோஜெக்ட் ஹார்ட்ஸ்’ (Project Hearts) என்ற அமைப்பை பிரணாவ் தொடங்கினார்.

தொடக்கத்தில் ஐந்து சிறப்புத் தேவை மாணவர்களுக்குக் கைகொடுத்த இந்த மாணவர் அமைப்பு, ஈராண்டுகளுக்குப் பிறகு தற்போது 15 இளையர்களைக் கவனித்துக்கொள்கிறது.

பிறரது மகிழ்ச்சியின்வழி இன்பம் துய்க்கும் மனப்பான்மையைத் தம் தாயார்தான் தமக்குள் விதைத்ததாக பிரணாவ் பிராயன் கூறினார். 
பிறரது மகிழ்ச்சியின்வழி இன்பம் துய்க்கும் மனப்பான்மையைத் தம் தாயார்தான் தமக்குள் விதைத்ததாக பிரணாவ் பிராயன் கூறினார்.  - படம்: பிரணாவ் பிராயன்

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மனிதவள நிர்வாகத்துடன் மனோவியல் துறைக்கான பட்டயப்படிப்பை இறுதி ஆண்டு பயிலும் மாணவர் பிரணாவ், இவ்வாண்டுக்கான தேசிய இளையர் சாதனை விருதின்கீழ் தங்க விருதைப் பெற்ற கிட்டத்தட்ட 300 மாணவர்களில் ஒருவர்.

விருது பெற்றதில் தமக்கு மகிழ்ச்சி என்றாலும் உதவி செய்வதன் மூலம் பெறும் நிறைவு அதைவிட அதிக மகிழ்ச்சியைத் தருவதாக பிரணாவ் கூறினார்.

பிறரது மகிழ்ச்சியின்வழி இன்பம் துய்க்கும் மனப்பான்மையைத் தம் தாயார்தான் தமக்குள் விதைத்ததாக பிரணவ் கூறினார்.

“ஒருமுறை, எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள துப்புரவுப் பணியாளர் ஒருவரைக் கண்ட என் தாயார், அவரை வீட்டுக்கு அழைத்து உணவையும் நீரையும் தந்து உபசரித்தார். இது எனக்குச் சேவை செய்யும் உந்துதலைத் தந்தது,” என்றார் பிரணாவ்.

தேசிய சேவைக்காகக் காத்திருக்கும் அவர், தமக்கு நேரம் கிடைக்கும்போது சமூக நலப் பணித்திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட விரும்புகிறார்.

“நேரப் பற்றாக்குறைக்கு இடையிலும் கெட்டிக்காரத்தனமாக அதனைச் சமாளித்து செயலாற்றுவது என் நோக்கமாக உள்ளது. எந்தெந்த வழிகளில் மக்களுக்குச் சேவையாற்ற முடியுமோ அந்தந்த வழிகளைக் கையாள ஆர்வமாக இருக்கிறேன்,” என்று கூறினார் பிரணாவ்.

குறிப்புச் சொற்கள்