வெற்றிக்கனி பறித்த கடல்துறை மாணவர்கள்

வெற்றிக்கனி பறித்த கடல்துறை மாணவர்கள்

- வித்யா வெங்கடேசன்
1 of 3
படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி
படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி
படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

08 Jun 2026 - 9:00 am

3 mins read

பிடித்த வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய இளையர்கள் இருவர் வெற்றிக் கனியை எட்டிப்பறித்தனர். 

முரளிகிருஷ்ணன் தர்மேஷ், 19, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண நிலைத் தேர்வுகளின் முடிவுகளைப் பெற்ற பிறகு, பலதுறைத் தொழிற்கல்லூரியில் வணிகப் பட்டயப்படிப்பு மேற்கொள்ள விரும்பினார்.  

ஆனால், விரும்பிய பாடம் அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக, சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடல்துறை வணிகம் படிப்பதற்கான வாய்ப்பு கிட்டியது.

படிப்பின் முதல் ஆண்டில், தர்மேஷ் தம் கல்விமீது ஓரளவு கவனம் செலுத்தி நண்பர்களுடன் ஓய்வு நேரத்தில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்தார்.

ஆயினும், கருத்து வேற்றுமை காரணமாக நண்பர்கள் தம்மிடமிருந்து விலகிச் சென்றதால் அவர் நிலைகுலைந்தார். படிப்பின் மீதான கவனமும் சிதறத் தொடங்கியது. 

எதிர்காலத்தைப் பிறர்க்காக விரயம் செய்ய வேண்டாம் எனத் தோழி ஒருவர் தக்க நேரத்தில் கொடுத்த அறிவுரை தர்மே‌‌ஷை நெறிப்படுத்தியது. முழுமூச்சுடன் செயல்பட்டு அவர், கல்வியில் சிறக்கத் தொடங்கினார். 

கடும் முயற்சிக்குக் கிடைத்த பலனாக, பட்டயமளிப்பு விழாவில் சிறந்த மாணவர் விருதைத் தட்டிச் சென்று, விழாவில் பிரியாவிடை உரையை ஆற்றினார். 

“இந்த அனுபவம் இன்னும் எனக்குக் கனவு போல இருக்கிறது. என் பெற்றோர் பெருமை அடைவதைக் காண்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி,” என்று தர்மேஷ் கூறினார். 

பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தியதோடு தேசிய தின அணிவகுப்பிலும், சிங்கே அணிவகுப்பிலும் பங்கேற்று தமது நேரத்தை ஆக்கபூர்வமான வழியில் அவர் செலவிடுகிறார். 

இது போன்ற வாய்ப்புகளின் மூலம், பிறரிடம் பழகும் திறன், நேர மேலாண்மை போன்ற பல திறன்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததாகப் பகிர்ந்தார். 

தர்மேஷைப் போல் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடல்துறையில், குறிப்பாக சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கப்பல் செலுத்துவதற்கான பட்டயப்படிப்பு மேற்கொண்ட 21 வயது ரவீன் சந்திரனுக்குத் தொடக்கத்தில் அந்தத் துறைமீது ஆர்வம் இல்லை. 

சிறு வயதிலிருந்தே, மருத்துவராக வேண்டும் என்ற ஆசை ரவீனுக்கு இருந்தபோதும் மாலுமியாகப் பணிபுரியும் அவரது தந்தை, கடல்துறை தனித்துவம் வாய்ந்தது என்பதால் அதில் ரவீனைச் சேரும்படி ஊக்குவித்தார். 

இருந்தபோதும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஏற்பாட்டில், சிங்கப்பூர்க் கடல்துறைப் பயிற்சிக்கழகத்திற்கு ரவீன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள கப்பல்களின் அழகையும் கம்பீரத்தையும் கண்டு மெய்மறந்து போனதாக ரவீன் கூறினார்.

இந்தப் படிப்பின் அங்கமாக, கடலில் பயணம் செய்ய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற திறன்களைப் பழகிக் கொள்ள அவர்கள் பயணமும் செய்யவேண்டும்.

அத்தகைய பயணம் ஒன்றின்போது, கிறிஸ்துமசுக்கு முந்திய நாளில், ரவீனும் அவரது குழுவினரும் மெடிட்டரேனியன் கடலில் சிக்கித் தவித்துகொண்டிருந்த 89 பேரைக் காப்பாற்றினர். சொந்த நாட்டிலிருந்து வெளியேறி அவர்கள் கடல்வழியாக மற்றொரு நாட்டுக்குச் செல்ல முற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடல்வழியாகக் கப்பல் செலுத்துவதற்கான பட்டயப் படிப்பை 21 வயது ரவீன் சந்திரன் வெற்றிகரமாக மேற்கொண்டார். 
கடல்வழியாகக் கப்பல் செலுத்துவதற்கான பட்டயப் படிப்பை 21 வயது ரவீன் சந்திரன் வெற்றிகரமாக மேற்கொண்டார்.  - படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

நடுக்கடலில் தவித்திருந்த 89 பேருக்கும் உணவு, தண்ணீர் போன்றவற்றை வழங்கி ரவீனும் அவரது குழுவினரும் மனிதநேயத்தோடு செயல்பட்டனர்.

அதற்காக, ‘பீபி-டலோ சாண்டலர்ஸ்’ தொழில் பழகுநர் விருதையும் உன்னத சான்றிதழையும் 2025ஆம் ஆண்டில் ரவீன் பெற்றார் .

இந்த உன்னத விருதைப் பெற்ற முதல் சிங்கப்பூரர் அவர்.

இணைப்பாட நடவடிக்கையாக அவர், பள்ளியின் கடல்துறை சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயலாற்றுகிறார்.

பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில், நடுக்கடலில் இருந்தாலும், துணைத் தலைவர் என்ற முறையில் ரவீன் தம் பொறுப்புகளைச் செவ்வனே செய்தார்.

சில நேரங்களில், கடலில் பயணம் செய்யும்போது, தாம் இருக்கும் நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் பல மணி நேர வேறுபாடு இருந்தாலும் இணையம்வழி சங்கத்தின் நடவடிக்கைகளில் ரவீன் கலந்துகொண்டார்.

சிங்கப்பூரின் கடல்வழிக் கழகத்தின் (Singapore Nautical Institute) ஒரே இளம் தூதுவராகவும் ரவீன் சேவையாற்றுகிறார்.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியிலிருந்து அண்மையில் பட்டயம் பெற்ற அவர், தேசியச் சேவையை முடித்தவுடன், கப்பல் தலைவராகும் வரை தொடர்ந்துகப்பலை ஓட்டப்போவதாகத் தெரிவித்தார்.

அதே நேரம், கடல்சார் வணிகத்தில் உள்ள ஆர்வத்தை அடுத்து, அதிலும் ஈடுபட விரும்புவதாகக் கூறினார்.

ஒரு கதவு மூடினால், எல்லாக் கதவுகளும் மூடியுள்ளதாக நினைக்க வேண்டாம் என்றார் இந்த இளையர். 

பலரிடம் பேசிப் பழகி, உலகப் பார்வையை விரிவுப்படுத்துவது நல்லது என்றும் தர்மேஷ், மற்ற இளையர்களிடம் சொல்ல விரும்புகிறார்.

“சவால்கள் நேருவது வழக்கமே. அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல், மீண்டெழ முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்,” நமது குறிக்கோளை நாம் உறுதிசெய்த பின்னர், பின்வாங்காமல் அதை நோக்கிச் செயல்பட வேண்டும்,” என்றார் ரவீன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்