தாய்மொழி சார்ந்த விளையாட்டுகளை உருவாக்குவதில் ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்கிறது, இளையர்கள் வழங்கும் புதிய ‘எடுவில்’ இணையத்தளம்.
தற்போதுள்ள தளங்கள் பலவற்றிலும் ஆசிரியர்கள் தாமே வினாக்களை உட்புகுத்தி புதிர்களை உருவாக்க வேண்டியுள்ளது. ஒரு சில தளங்களே தாய்மொழிக்கென தனிப்பயனாக்கப்பட்டவை. அதனால், வெவ்வேறு தாய்மொழிப் புதிர்களை உருவாக்க அதிக நேரமாகிறது.
‘எடுவில்’ தளமோ, ஆசிரியர் குறிப்பிடும் தலைப்புக்கு ஏற்றவாறு தாய்மொழியில் விருப்பத்தெரிவுகளை உடனடியாக வழங்குகிறது. அவற்றில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்து விதவிதமான புதிர்களை உடனுக்குடன் உருவாக்கலாம்.
‘நினைவேடு’, ‘காளை ஓட்டம்’, ‘தட்டச்சு ஓட்டம்’, ‘விவாத மேடை’ எனத் தமிழில் நான்கு விளையாட்டுகளுடன் இத்தளம் தொடங்கியுள்ளது. தமிழ்ச் சொற்களின் பொருளைப் புரிந்துகொள்ளல், தமிழில் விவாதித்தல், தட்டச்சு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் இவை அமைந்துள்ளன.
“தமிழர் மரபை மாணவர்கள் பாராட்டும் வகையில் பண்பாட்டுக் கூறுகளையும் விளையாட்டுகளில் இணைத்துள்ளோம்,” என்றார் ‘எடுவில்’ இணை நிறுவனர் சஞ்சய் முத்துகுமரன், 23.
வரும் ஏப்ரல் மாதம் ‘எடுவில்’ தளத்தின் முதற்கட்டம் வகுப்பறைச் சோதனைக்காக வெளியிடப்படவுள்ளது.
‘எடுவில்’ பயணம்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) வர்த்தகப் பள்ளி மூன்றாம் ஆண்டு மாணவரான சஞ்சய், கடந்த மூன்று ஆண்டுகளாக ‘ஸ்டோரிலேப் அகடமி’ எனும் நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மின்னிலக்கக் கேலிச்சித்திரம், மின்னிலக்கப் பொம்மலாட்டம் உள்ளிட்ட தாய்மொழிப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.
“இதுபோல ஒவ்வொரு பாடமும் இருந்தால் நன்றாக இருக்குமே!” என மாணவர்கள் கூறியதை அடுத்து, என்யுஎஸ் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர் வே வர்ஷா, 21, உடன் இணைந்து ‘எடுவில்’ தளத்தை உருவாக்கத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (எஸ்ஐடி), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) ஆகியவற்றில் பயிலும் மாணவர்களும் இதில் இணைந்துள்ளனர்.
வெற்றிப்பாதையில் ‘எடுவில்’
‘எடுவில்’ தளம் உருவான சில மாதங்களிலேயே வெற்றிக் கனியைச் சுவைத்துள்ளது.
அது, 46 அணிகளுடன் போட்டியிட்டு ‘என்யுஎஸ் வளாக’ வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்துலகப் போட்டியான ‘ஹல்ட்ஸ் பரிசு’ அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தின் கணினியியல் பள்ளியின்கீழ், என்யுஎஸ் தொழில்முனைவுத் தொடக்கத் திட்டம்வழி (VIP@SoC) $10,000 மதிப்பிலான மானியத்தையும் பெற்றுள்ளது. ‘என்யுஎஸ் என்டர்பிரைஸ்’ வழங்கும் ‘புளோக்71’ திட்டம்வழி ஆகஸ்ட் 2024 முதல் ஆதரவும் வழிகாட்டுதலும் கிடைத்துள்ளன.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளது.
“பல்கலைக்கழக மாணவர்கள் தமிழுக்காகத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது,” என்றார் சங்கத்தின் தலைவர் தனபால் குமார்.
இந்த ஆண்டின் வணிக வேட்டையிலும் ‘எடுவில்’ முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
தொடரும் பயணம்
தமிழுடன் தொடங்கியுள்ள தளத்தை மற்ற மொழிகளுக்கும் புதிய விளையாட்டுகளுக்கும் விரிவுபடுத்த திட்டங்கள் உள்ளன.
வருங்காலத்தில் பெற்றோரும் இச்செயலியைத் தம் பிள்ளைகளின் கற்றலை மேம்படுத்தப் பயன்படுத்தலாம்.
“தமிழ்மொழி சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆங்கிலத்திற்கு இணையாக இல்லாவிட்டாலும் இச்சவாலை எதிர்கொள்ளத் தரவுகளைச் சேகரித்து, மொழி வல்லுநர்களுடன் கலந்துரையாடி வருகிறோம்,” என்றார் வர்ஷா.