இளம் வாக்காளர்கள் எதிர்பார்க்கும் இந்தியர் குரல், கொள்கை மாற்றம்

3 mins read
1dc07c2f-1db4-4e61-8c1c-d31249983c7d
தமிழ்முரசு இளையர்களுக்காக ஏப்ரல் 6ஆம் தேதி நடத்திய ‘வாங்க இப்போ பேசலாம்’ அமர்வில் 100க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்கேற்று பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் கலந்துரையாடினர். இடமிருந்து கலந்துரையாடலை வழநடத்திய தமிழ் முரசு செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மது, பிரதமர் வோங், மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி. - படம்: த.கவி

உலக அளவில் நிகழும் மாற்றங்களையும் சமூகம் சார்ந்த கேள்விகளையும் மனத்தில் கொண்டு வாக்களிக்கவிருப்பதாக இளையர்கள் சிலர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். சிங்கப்பூரின் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற தீர்வுகளையும் அவர்கள் கருத்தில் வைத்துள்ளனர்.

“நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய தளமாக இருக்கும் இந்தத் தேர்தலில் நான் வாக்களிக்கவிருக்கிறேன்,” என்றார் 22 வயது ஷா.தர்ஷினி. பொதுத் தேர்தலில் அவர் வாக்களிக்க இருப்பது இது முதல் முறை.

எக்னெஸ் பிரியா, 23,” தேர்தல் பிரசாரங்கள், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைப் பொறுத்து நான் வாக்களிப்பேன்,” என்றார்.

இளையர்களின் கவலைகள்

சிங்கப்பூரில் உள்ள இந்திய இளையர்களுக்கும் வேலைவாய்ப்பு, வீடமைப்பு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், கல்வி, சமமான வாய்ப்புகள் ஆகியவை முக்கிய கவலைகளாக உள்ளன.

வேலை செய்துகொண்டே படித்துவரும் 25 வயது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் சுதன் ஷ்யாம் லால், “மாறிவரும் பொருளியல் சூழலில் எதிர்காலம் அச்சமாக உள்ளது. புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்குமா என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது,” என்றார்.

மனநல ஆதரவும் இளையர்களுக்கு முக்கியம் என்ற 21 வயது தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவி லக்‌ஷ்மி ரவிச்சந்திரன், “கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் அது இடம்பெறுவதில் மகிழ்ச்சி,” என்றார்.

இந்தியர் குரல்

சமூக நலனுக்கான கொள்கைகளையும் இளையர்கள் விரும்புகின்றனர். அதோடு உடனடி தேவைகளையும் நீண்டகாலத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் தலைவர்களை அவர்கள் தேடுவதாகத் தெரிவித்தனர்.

இந்தியர்களைப் பிரதிநிதித்து அவர்களுக்கான பிரச்சினைகளுக்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் அணி இளையர்களின் தேடலில் அங்கம் வகிக்கிறது.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 21 வயது தர்வின் அசோக், நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

மக்கள் பிரதிநிதிகள் இளையர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துரைத்து, மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார் 20 வயது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மித்ரா.

பாகுபாடு களைய நடவடிக்கை

முதல் முறை வாக்களிக்கும் பாலர் பள்ளி ஆசிரியை கரிஷா முருகன், இத்தேர்தலின் மூலம் இனப் பாகுபாடுகளைச் சமாளிக்கும் வண்ணம் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

வேலை வாய்ப்பு, வீடு விற்பனை, வாங்குவது போன்ற அம்சங்களில், குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய உலக அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் சிங்கப்பூரர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வாய்ப்பு உண்டு என்றார் தர்வின்.

உலகெங்கும் நடந்த அரசியல், பொருளியல் நெருக்கடிகளால் சிங்கப்பூருக்கும் அச்சுறுத்தல்கள் வரக்கூடிய வாய்ப்புண்டு. இளையர்களின் எதிர்காலத்தை மையமாகக்கொண்ட மேம்படுத்தப்பட்ட கொள்கைகளை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

ஊக்குவிக்கும் திட்டங்கள்

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இவ்வாண்டு பல இளையர்களை தேர்தல் களத்தில் நிறுத்தியதை எண்ணி மகிழ்ந்தார் 18 வயது மாணவி ஓவியா ரோவிந்தரன்.

தற்போது, பெர்த் நகரத்தில் உள்ள முர்டோக் பல்கலைக்கழகத்தில் பயிலும் அவர் சிங்கப்பூரின் பொதுத் தேர்தலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்தார். இவ்வாண்டு பல கட்சிகளில் பல இந்திய முகங்களைக் காண முடிவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர் இந்திய இளையர்களைப் பல்வேறு துறைகளில் ஊக்குவிக்கும் திட்டங்களை அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்பது அவரது கருத்து.

சிங்கப்பூரின் அரசியல் நிலவரம் சூடுபிடிக்கும் இக்கட்டத்தில், பல கட்சிகளின் கொள்கைகளும் உறுதிகளும் சிங்கப்பூரின் அரசியலமைப்பில் பல்வேறு குரல்கள் இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது என்றார் ஓவியா ரோவிந்தரன்.

பெர்த் நகரில் இருந்தவாறே தேர்தல் நடவடிக்கைகள், பிரசாரங்களை அறிய முடிவதாகக் கூறிய அவர், இத்தேர்தலில் சமூக ஊடகங்களை நன்கு பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈர்க்கும் இணையப் பயன்பாடு

சமூக ஊடகங்களில் மீம்ஸ் வடிவத்தில் வரும் தேர்தல் பற்றிய செய்திகள் இணையவாசிகளான இளைய தலைமுறையைச் சிந்திக்க வைக்கிறது என்பது பிரியாவின் கருத்து.

அதேநேரத்தில், இணையம் வழி பகிரப்படும் தகவல்கள் தேர்தலின் முடிவைப் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.

மாற்றத்திற்கான குரலாக, சிங்கப்பூரின் அரசியலை முன்னெடுக்க உதவுவதற்கு இளம் தலைமுறை ஒரு முக்கிய அங்கமாகத் திகழ வேண்டும்.

தம்முடைய வாக்கு, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக மாறும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார் சுதன்.

குறிப்புச் சொற்கள்