நன்யாங் பல்துறைத் தொழிற்கல்லூரியும் அமேசான் இணையச் சேவை நிறுவனமும் (AWS) இணைந்து, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஏதுவாக ‘செயற்கை நுண்ணறிவு இணைப்பு ஆய்வகம்’ (AI Nexus Lab) ஒன்றைத் தொடங்கியுள்ளன.
ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முயற்சியின்மூலம் ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமேசான் இணையச் சேவை (AWS) மூலம் நிகழ்நேர ‘ஏஐ’ தீர்வுகளை உருவாக்குவார்கள்.
இது உற்பத்தித்திறன் போன்ற வணிகச் சவால்களை எதிர்கொள்ளவும் மாணவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைக்கவும் உதவும்.
அதே போல, வரும் ஏப்ரலில் தொடங்கும் நன்யாங் பல்துறைத் தொழிற்கல்லூரியின் இன்னொரு திட்டமான ‘கோ பியாண்ட்’ (Go Beyond), மாணவர்கள் தங்கள் பட்டயக் கல்வி கற்றல் முறையைத் தாமே தேர்ந்தெடுக்க உதவுகிறது.
தொழில்முறைச் சான்றிதழ்கள், அனைத்துலக அனுபவங்கள் அல்லது பல்கலைக்கழகப் பாடங்கள் ஆகிய மூன்று வழிகளில் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இவை கூடுதல் நேரமின்றி பாடத்திட்டத்திலேயே இணைக்கப்பட்டு, மாணவர்களுக்குக் கூடுதல் கல்வி அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.
இந்தத் திட்டத்தின்மூலம் பயனடைந்த மாணவர்கள் இருவர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு
வங்கியியல், நிதித் துறையில் பட்டயப் படிப்பு பயின்ற குழந்தைவேல் அக்ஷய், 20, தமது முதல் ஆண்டிலிருந்தே வெளிநாட்டிற்குச் சென்று கற்கும் வாய்ப்பிற்காகக் காத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டத்தின் மூலம் ஜெர்மானியப் பல்கலைக்கழகம் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு அக்ஷய்க்குக் கிட்டியது.
அங்கு அவர் நான்கு மாதங்களாக அயராது உழைத்து தமது பாடங்களைக் கற்றார்.
“ஜெர்மனியில் கலாசார வேறுபாடுகள் மட்டுமல்லாது மாணவர்களின் உத்வேகமும் என்னைப் பாடம் குறித்து இன்னும் கூடுதல் கேள்விகள் கேட்க ஊக்குவித்தது.” என்றார் அக்ஷய்.
ஓராண்டு வேலைப் பயிற்சி
உள்ளூர் நிறுவனமான ஜேபி மோர்கன் தனியார் வங்கியில் ஓராண்டு காலமாகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார் வணிகம், நிதி தொழில்நுட்ப பட்டயப் படிப்பு மேற்கொண்ட மாணவி ஷுருத்தி மதுசுதன், 19.
பெரும்பாலும் மாணவர்கள் ஆறு மாதங்களுக்குத்தான் வேலைப் பயிற்சிக்குச் செல்வர். ஆனால், தமக்கு அளிக்கப்பட்ட ஓராண்டு வாய்ப்பை எண்ணி ஷுருத்தி மகிழ்கிறார்.
“இந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கியபோது நான் வேலையில் சிறந்து விளங்குவேனா என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால், எனது சக ஊழியர்கள் எனக்கு நிறைய ஊக்கமளித்தனர். அதனால் என்னால் சிறந்து பணியாற்ற முடிந்தது. கூடுதல் வேலைப் பயிற்சி பயனுள்ளதாக அமைந்தது,” என்று அவர் கூறினார்.

