வாழ்வில் அனைவரும் மகிழ்ச்சியைத் தேடிச் செல்கின்றனர். அந்தத் தேடலுக்கு வடிவமைப்பின்மூலம் எவ்வாறு ஓர் உருவம் கொடுக்கலாம் எனச் சிந்தித்துப் பார்த்தார் சுவேதா ராஜா, 28.
அதனால் அவர் உருவாக்கியதே ‘தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்’ (The Pursuit of Happiness) எனும் திட்டம்.
“ஆராய்ச்சிகளின்படி, நாம் அன்றாடம் நம் பாதகமான எண்ணங்களை எழுதி கிழித்தெறிந்தால் நமக்கு மனநிம்மதி கிடைக்கும். அதற்காக ஒரு கருவியை உருவாக்கினேன்.
“ஆயுர்வேதத் தாவரங்களான அஷ்வகந்தா, வெட்டிவேர் - போன்றவற்றைக் கொண்டு மன உளைச்சலைக் குறைக்கும் வாசனைத் திரவியத்தை உருவாக்கினேன். மகிழ்ச்சி மெழுகுவத்திகளையும் மகிழ்ச்சிக்காக உட்கொள்ளும் மருந்து ஒன்றையும் செய்துள்ளேன்.
“மகிழ்ச்சி தரும் ஒன்று, பிறருடன் புதிய அறிமுகங்கள் ஏற்படுத்துவது. அதனால், ‘தொடர்புகளை ஏற்படுத்தல்’ (Building Connections) எனும் தொழில்நுட்பத் தீர்வையும் உருவாக்கியுள்ளேன். இருவர் இருந்தால்தான் இந்தத் தீர்வு வேலைசெய்யும். அவர்கள் இருவரும் பேசி தம்மைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அது வழிவகுக்கும்,” என்றார் சுவேதா.
தான் உருவாக்கிய பொருள்களை ‘ஹேப்பியாலஜி’ (Happiology) எனும் பெயரில் அவர் விளம்பரப்படுத்துகிறார். “இது வெறும் பொருள்கள் மட்டுமல்ல; ஓர் ஒட்டுமொத்த அனுபவத்தையும் வழங்க விரும்புகிறேன்,” என்றார் சுவேதா.
சென்னையில் பிறந்து வளர்ந்த சுவேதா, இத்திட்டத்தை முதலில் சென்னையில் சோதித்துப் பார்த்து, பிறகு சிங்கப்பூருக்குக் கொண்டுவர முயற்சி செய்யவுள்ளார்.
“நான் சிங்கப்பூர் வந்ததிலிருந்து வடிவமைப்பு என்பது அனைவரது வாழ்விலும் உள்ளது. ஆனால் இந்தியாவில், குறிப்பாகச் சென்னையில், இன்னும் அந்த அளவுக்கு இல்லை. என் வயதில் இருக்கும் இளையர்கள் இப்போது மனநலத்தை நோக்கி முதல் அடியை எடுத்துவைக்கின்றனர். அதனால் எவ்வாறு அவர்களுக்கு உதவமுடியும் எனச் சிந்தித்தேன்,” என்றார் சுவேதா.
‘சென்னையில் நான் ஒரு ஹோட்டலில் மக்களுடன் ஒரு சோதனையையும் நடத்தினேன். அவர்கள் வேலை முடிந்த களைப்பில் வந்தனர். முழு அனுபவத்தை பெற்றதும் அவர்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
“சிங்கப்பூரிலும் நான் என் சக மாணவர்களிடம் இத்திட்டத்தைச் சோதித்துப் பார்த்தேன். சிங்கப்பூரில் வேகமான வாழ்க்கைச் சூழலினால் விரைவுத் தீர்வான ‘மகிழ்ச்சி மருந்தை’ பெரும்பாலோர் விரும்பினர்.
‘காஸ்மோ ஸ்டூடியோ’ எனும் நிறுவனத்தையும் (https://cosmostudio.in/) சுவேதா சென்னையில் சென்ற ஆண்டு முதல் நடத்திவருகிறார்.
வெவ்வேறு பொருள்களுக்கான பொதியாக்கம் (packaging) - எடுத்துக்காட்டாக, மிட்டாய்த் தாள் வடிவமைப்பு, புதிய நிறுவனங்களைச் சந்தைப்படுத்துதல், சமூக ஊடக விளம்பரப்படுத்தல், இணையத்தள வடிவமைப்பு போன்றவற்றை அந்நிறுவனம் செய்கிறது.
“மகிழ்ச்சியைத் தரும் கட்டமைப்பை எவ்வாறு என் வடிவமைப்பில் உட்புகுத்தி என் வாடிக்கையாளர்களை இன்னும் மகிழ்விக்கலாம் என்பதை நான் இனி பார்ப்பேன்,” என்றார் சுவேதா.
சுவேதா ஏழு ஆண்டுகளுக்கு முன்பே லசால் கலைக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முயன்றார். ஆனால், அப்போது அவருக்கு இருந்த வேலை அனுபவம் போதவில்லை. “நான் அப்படியே வேலையுலகிலேயே மூழ்கிவிட்டேன். இப்போதுதான் முதுகலைப் பட்டம் பெற நேரம் கிடைத்தது,” என்றார் சுவேதா.
அவரது பட்டமளிப்புக்குப் பெற்றோர் இந்தியாவிலிருந்தும் தம்பி ஆஸ்திரேலியாவிலிருந்தும் வந்திருந்தனர். குடும்பத்தில் ஒரே வடிவமைப்பாளார் சுவேதாதான். “மருத்துவர், பொறியாளர் ஆவேன் என எதிர்பார்த்தனர். ஆனால் நான் வடிவமைப்பு படிப்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இன்று அவர்கள் பெருமைப்பட்டனர்,” என்றார் சுவேதா.
வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்
வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கு, தம் குழந்தைகள் அல்லது பொருள்களைப் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்ல வழிவகுக்கும் நாற்காலியை வடிவமைத்துள்ளார் வடிவமைப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற சுக்ரித்தி சிங்.
இந்த நாற்காலியை நீரில் செல்லும் மிதவையாக மாற்றலாம். இதுபோன்ற பல நாற்காலிகளை இணைத்து இன்னும் பெரிய மிதவையாகவும் மாற்றலாம்.
மறுசுழற்சிசெய்யப்பட்ட நெகிழி, துணி, வழக்கமான பொருள்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
“வெள்ளம் வரும்போது பிள்ளைகளைக் காப்பாற்றும்போது உடைமைகளை விட்டுவிட வேண்டியுள்ளது. இரண்டையும் ஒரே சமயம் காப்பாற்ற இது வழிவகுக்கிறது.
“என் தென்னிந்திய நண்பர்கள் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைப் பற்றி வருத்தப்பட்டனர். அதைக் கேட்டபோது, ஒரு வடிவமைப்பாளராக என்னாலும் ஏதேனும் செய்ய இயலும் எனத் தோன்றியது,” என்றார் சுக்ரித்தி.
“ஏற்கெனவே மிதக்கும் ஒன்றை - நீச்சல் குள மிதவை போன்றதை எடுத்து, அது பாரத்தைச் சுமக்கும் வகையில் மாற்றலாம் என எண்ணினேன். ஏன் நாற்காலி? சோஃபா போன்றதை எளிதில் நகர்த்தமுடியாது; நாற்காலியை எளிதில் நகர்த்தலாம்,” என்றார் அவர்.
இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் சுக்ரித்தி. அவர் சிங்கப்பூரைத் தன் மேற்படிப்புக்காகத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, சிங்கப்பூர் பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பே என்றார் அவர்.
மேலும், சுக்ரித்தியின் அபிமான வடிவமைப்பாளர், இஸ்ரேலி-அமெரிக்க-கனடிய கட்டட வடிவமைப்பாளர் மோஷ் சாஃப்டி. “அவர் வடிவமைத்த ஜுவெல் சாங்கி விமான நிலையம் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார் சுக்ரித்தி. கரையோரப் பூந்தோட்டங்களில் வடிவமைப்பும் அவர் மனத்தில் தனியிடம் பிடித்துள்ளது.
தற்போது முதுகலைப் பட்டம் பெற்று மீண்டும் இந்தியாவிற்கே சென்று பணியாற்றும் அதே சமயம் (அகமதாபாத்தில் அவருக்கு வடிவமைப்புக் கூடத்தில் வேலை கிடைத்துள்ளது), டிசம்பர் மாதம் சென்னை வெள்ளங்களில் இதைச் சோதித்துப் பார்க்கவும் உள்ளதாக அவர் கூறினார்.
“இந்த கலைப்பயணம் என்னை மாற்றியுள்ளது. எனக்குp பெருவளர்ச்சியை அளித்துள்ளது,” என உறுதியாகக் கூறினார் சுக்ரித்தி. இதையடுத்து, தொடர்ந்து கலைமூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்த அவர் விழைகிறார்.

