தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாத்தாவைப் பராமரித்த பேரனுக்குத் தாதிமைத் துறைமீது பேரார்வம்

2 mins read
cc9a0d63-9965-444e-ac93-567daf319723
டான் டோக் செங் மருத்துவமனையில் பல்கலைக்கழக மாணவர்களுடன் தேவேந்திரன் செல்வராஜு, 27. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டான் டோக் செங் மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றும் தேவேந்திரன் செல்வராஜு, 27, புற்றுநோய்ப் பராமரிப்பிலும் அந்திமகாலப் பராமரிப்பிலும் பணியாற்றி வருகிறார்.

அத்துறையின் மீதான இவரது ஆர்வமும் அனுபவமும் வீட்டிலேயே தொடங்கின. வளரும் பருவத்திலேயே தேவேந்திரன், தாதிமையின் சிறப்பைப் பற்றி தாயாரிடமிருந்து அறிந்துகொண்டார்.

“மனத்தை நெகிழவைத்த அனுபவக் கதைகள் பலவற்றை என் தாயார் என்னுடன் பகிர்ந்துகொள்வார். தொடக்கப்பள்ளி மாணவராக இருந்தபோதே நான் தாதியாகவேண்டும் என்று பிறரிடம் சொல்லியிருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

முதுமை மறதிநோயால் பாதிக்கப்பட்ட தம் தாத்தாவைப் பராமரிக்க அவரைத் தூய்மைப்படுத்துவது, குழாய் வழியாக உணவு புகட்டுவது, மருந்து மாத்திரை தருவது ஆகியவற்றைச் செய்யத் தொடங்கினார். 

தாத்தாவைப் பராமரிப்பதில் தன் எண்ணங்களையும் செயல்களையும் முழுமையாகச் செலுத்திய தேவேந்திரன், தாதிமைத் துறை தமக்கு ஏற்றதாக இருக்கும் என அந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துகொண்டார்.

2015ல் தொழில்நுட்பக் கல்விக் கழகக் கிழக்குக் கல்லூரியில் தேவேந்திரனின் தாதிமைக் கல்வி முறையாகத் தொடங்கியது. 

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயப்படிப்பு பயில போதுமான தகுதிப்புள்ளிகளை அவர் பெற்றிருக்கவில்லை. 

“ஆயினும், முன்கூட்டிய சேர்க்கை நடவடிக்கை (Early Admissions Exercise) மூலம் அங்கு படிப்பதற்கு இடம் கிடைத்தது. ஏட்டுக்கல்வியிலும் மனத்தளவிலும் என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள அது வகைசெய்தது,” என்று தேவேந்திரன் கூறினார்.

பட்டயக் கல்வி பயின்ற பின்னர், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்பில் இவர் தேசிய சேவையாற்றினார். பின்னர், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் தாதிமைப் பட்டக் கல்வி பயின்று, 2024 அக்டோபரில் முழுநேரமாகத் தாதிமைத் தொழிலில் இறங்கினார்.

முழுநேரமாக வேலைசெய்துகொண்டே தேவேந்திரன் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பகுதிநேர முதுநிலைப் பட்டப்படிப்பையும் மேற்கொள்கிறார்.

மற்றொரு பட்டயக்கல்விச் சான்றிதழைப் பெற்று, இறுதியில் தாதிமைத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே இவரது குறிக்கோள்.

“முதன்முதலாக வேலை செய்தபோது சவாலாக இருந்தது. சவால்கள் பெரிதாகத் தோன்றும்போது அவற்றைப் பகுதி பகுதியாக எதிர்கொள்வேன். நாம் விரும்பும் இலக்கை அடைவதற்குப் பாதைகள் பல உள்ளன என்பதை மனத்திற்கொண்டு நீக்குப்போக்குடன் செயல்படுவேன். அது எனக்கு இதமளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்