தேசிய சேவையில் மின்னல் படை வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளவற்ற ஆனந்தம் அடைந்தார் த நவீன், 20.
72 கிலோமீட்டர் நடை, விமானத்திலிருந்து குதித்தல், காடு மேடுகளில் எண்ணற்ற நாள்கள் எனப் பல சவால்களையும் கடந்தபின், மின்னற்படைவீரருக்கே உரிய சிவப்புத் தொப்பியைப் பெற்று அணிந்தது வாழ்வில் ஆகப் பெருமைமிக்க தருணமாக உணர்ந்தார் நவீன்.
ராணுவத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் தனிநபர் வெற்றியல்ல; அணுக்கமாகச் செயல்படும் பிரிவின் வெற்றியே. பல சிரமங்களை எதிர்கொண்ட போதும், சக ராணுவ வீரர்கள் பக்கபலமாக இருந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தியதாகக் கூறினார் இரண்டாம் சார்ஜண்ட் பதவி வகிக்கும் நவீன்.
அந்த ஒற்றுமையையும் குழுவாற்றலையும் பறைசாற்றும் வகையில், அவருடைய பிரிவான முதலாம் மின்னல் படைப் பிரிவு தொடர்ச்சியாக 22வது ஆண்டாகவும் மொத்தம் 39 ஆண்டுகளும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறந்த பிரிவுப் போட்டியில், தலைசிறந்த போர்ப் படை பிரிவு விருதை வென்றுள்ளது.
“தலைசிறந்த போர்ப் படைப் பிரிவு விருது என்பது கெளரவமிக்க விருது. கடந்த ஆண்டில் நாம் செய்த கடும் முயற்சியின் பிரதிபலனே இது,” என்றார் நவீன்.
தற்போது கம்பெனியின் துணை சார்ஜண்ட் மேஜராகவும் மின்னல் படைத் தலைவராகவும் (Commando Leader) பணியாற்றுகிறார் நவீன்.
“மின்னல் படைத் தலைவராக, என் வீரர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் அதற்குத் தீர்வுகாண்பதும் வீரர்களை ஊக்குவிப்பதும் என் கடமையாகும்,” என்றார் நவீன்.
மின்னல் படைத் தலைவர் பதவிக்கு உயர அவர் சில மாதங்கள் மின்னல் படையின் சிறிய பிரிவுக்கான தலைவர் பயிற்சியை (Commando Small Unit Leader Course) மேற்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆயுதப் பிரிவு, வெடிவைத்துத் தகர்த்தல், மருத்துவம், சமிக்ஞை என நான்கு துறைகளில் ஏதேனும் ஒன்றில் மின்னல் படை வீரர்கள் நிபுணத்துவம் பெறுவர். ஆனால் மின்னல் படைத் தலைவராக அவை அனைத்திலும் நிபுணத்துவம் பெற வேண்டியிருக்கும். என் வீரர்கள் தம் நிபுணத்துவத்தில் பாதுகாப்பாக, சரியாகச் செயல்படுவதை நான் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார் நவீன்.
படைப்பிரிவின் திறனைச் சோதிக்கும் ராணுவப் பயிற்சி மதிப்பீட்டில் (ATEC) இவ்வாண்டு முதன்முறையாகப் பட்டாளம் அளவிலான இரு சவால்களைக் கடக்க வேண்டியிருந்தது. பாரத்தைத் தூக்கிக்கொண்டு வெகுதூரம் நடக்கவும் விமானத்திலிருந்து குதிக்கவும் வேண்டியிருந்தது.
“பல விஷயங்களும் எதிர்பார்த்ததுபோல் நடக்கவில்லை. மிகவும் களைப்பாக இருந்தாலும் சிந்தித்து சூழலுக்கேற்ப திட்டங்களை மாற்றினோம்,” என்றார் நவீன்.
இளையர்கள் தொழில்நுட்பத்தை விரைவாகக் கற்றுக்கொள்வதால் ஆளில்லா நுண்வானூர்திகளைக் கையாள முடிவதாகக் கூறினார் பட்டாளத்தின் ஆணை அதிகாரி லெஃப்டினண்ட் கர்னல் கோக் யி லோங்.
தலைசிறந்த தேசிய சேவைப் போர்ப் பொறியாளர் பிரிவு விருது
சிங்கப்பூர் ஆயுதப்படையின் சிறந்த தேசிய சேவைப் பிரிவுப் போட்டியில் தலைசிறந்த தேசிய சேவை போர் பொறியாளர் பிரிவு விருதை 391 SCE எனப்படும் 391வது பட்டாளம் வென்றது. ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூர் ஆயுதப்படை தின அணிவகுப்பில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் அவ்விருதை வழங்குவார்.
அப்பட்டாளத்தைச் சார்ந்த போர்க்காலப் படைவீரர்கள் (NSMen) சிறந்து விளங்குவதால் அவர்களுக்கு இவ்விருது கிடைத்துள்ளது.
அதற்கு முக்கியக் காரணங்கள், வலுவான தலைமைத்துவமும் வீரர்களின் உத்வேகமும் என்றார், தன் ஏழாவது ‘ரிசர்விஸ்ட்’ தவணையிலுள்ள முதலாம் சார்ஜண்ட் (தேசிய சேவை) கேப்ரியல் டேரன் லூவிஸ், 31.
அவர் ரெஜிமெண்டல் குவார்ட்டர்மாஸ்டர் சார்ஜண்ட், கம்பெனி சார்ஜண்ட் மேஜர் ஆகிய பொறுப்புகளை வகிக்கிறார்.
“எங்கள் ஆணை அதிகாரி காலைப் பயிற்சிகள் முதல் முக்கிய நடவடிக்கைகள்வரை அனைத்திலும் எங்களுடன் கலந்துகொள்கிறார். அதனால் அனைவரும் இன்னும் சிறப்பாகச் செய்ய உந்துதல் பெறுகின்றனர். இந்த ஒற்றுமையே எங்கள் வெற்றிக்கு வித்திட்டுள்ளது,” என்றார் கேப்ரியல்.
தன் தேசிய சேவையை வேறு படைப்பிரிவில் செய்திருந்ததால், ‘ரிசர்விஸ்ட்’டுக்காக 391வது பட்டாளத்துக்கு வந்தபோது தம் தலைமையில் செயல்படும் வீரர்களின் நம்பிக்கையைப் புதிதாகப் பெற வேண்டியிருந்தது என்றார் கேப்ரியல்.
“ஆனால் இப்பொழுது எந்தச் சவாலாக இருப்பினும் கேப்ரியல் இருப்பதால் அதைக் கடக்க முடியும் என வீரர்கள் கூறும்போது மனநிறைவடைகிறேன்,” என்றார் கேப்ரியல்.
பட்டாளத்தில் கிடைத்த தலைமைத்துவ அனுபவம், தன் பேச்சாற்றலை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “நான் சிறுவயதிலிருந்து அமைதியானவர். ஆனால் வீரர்களிடம் நம்பிக்கையுடன், அழுத்தம் கொடுத்துப் பேசினால்தான் அவர்கள் என்னைத் தலைவராகப் பார்ப்பார்கள்,” என்றார் கேப்ரியல்.
தன் வேலையிடத்திலும் குழுச் செயல்பாட்டுக்கு இத்திறன்கள் உதவியுள்ளன என்றார் டிபிஎஸ் வங்கியில் தரவுப் பொறியாளராகப் பணிபுரியும் கேப்ரியல்.
அதேவேளை தேசிய சேவையில் கிடைக்கும் வெற்றிகளுக்குக் குடும்பத்தினர், சக வீரர்களின் பங்கும் அளப்பரியது என்றார் கேப்ரியல்.
“ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் முகாமுக்குச் செல்லவேண்டியிருந்தபோதெல்லாம் என் தந்தை என்னை காரில் அழைத்துச் செல்வார். நான் புதிய பிரிவில் சேர்ந்தபோது சக வீரர்கள் பெரிதும் ஆதரித்தார்கள், நண்பர்களாக அன்போடு பழகினார்கள்,” என்றார் கேப்ரியல்.

