தவறுகளைத் தட்டிக் கேட்க இளையர்க்கு ஊக்குவிப்பு

‘ஹார்மனிவொர்க்ஸ்!’ நல்லிணக்க மாநாடு

தவறுகளைத் தட்டிக் கேட்க இளையர்க்கு ஊக்குவிப்பு

3 mins read
bd4fe0be-ce3e-4c1e-afee-6f132048c493
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஹார்மனிவொர்க்ஸ்! 2026 (HarmonyWorks! Conference 2026) மாநாட்டின் நிறைவில், 200க்கும் மேற்பட்ட இளம் பங்கேற்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகத் தலைவர்கள் ஒன்றுகூடினர். - படம்: ஒன்பீப்பள்.எஸ்ஜி
multi-img1 of 5

 ‘ஹார்மனிவொர்க்ஸ்! மாநாடு 2026’க்காகச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இளையர்கள் பலர் ஒன்றுகூடி நல்லிணக்கத்தைச் சிறப்பித்தனர்.  

‘ஒன்பீப்பள். எஸ்ஜி’ (OnePeople.sg) அமைப்பு ஏற்பாடு செய்த இந்த வருடாந்தர இளையர் மாநாடு, இன்றைய மின்னிலக்கக் காலகட்டத்தில் இணையவழி இனவாதம், செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகக் கணிப்புநெறி (algorithm), இளையர்களின் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கல்களை ஆழமாக விவாதித்தது.

ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்கேற்றனர். வெவ்வேறு இனங்களைப் பற்றிய பொதுப்படையான கருத்துகளின் அடிப்படையில் எடைபோடுவது, கடுஞ்சொற்களை வீசுவது உள்ளிட்டவற்றை இளையர்கள் மின்னிலக்கத் தளங்களில் எதிர்கொள்கின்றனர்.

‘கவனிக்காமல் கடந்து சென்றுவிடாதீர்கள்’ (Don’t Just Scroll Past) என்ற கருப்பொருளில் இவ்வாண்டின் மாநாடு அமைந்தது.

தீய கருத்துகளைப் புறந்தள்ளி ஒன்றும் பேசாமல் செல்வது நல்லது என்ற கருத்திற்கு மாறாக, அத்தகைய செயல்களை ஆக்ககரமான முறையில் தட்டிக் கேட்க இந்தக் கருப்பொருள் ஊக்குவிக்கிறது.

பகைமையை வளர்க்காமல் புரிதலை ஊக்குவிக்கும் வகையில் இளையர்கள் எவ்வாறு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என அந்தக் கருத்தரங்கு ஆராய்ந்தது.

‘ஒன்பீப்பள். எஸ்ஜி’ அமைப்பின் தலைவரான கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, ஆக்ககரமான இணையச் சூழலை உருவாக்குவதில் இளையர்களுக்குப் பங்கு இருப்பதைச் சுட்டினார்.  

“இளையர்கள் இந்தப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்றும் நம் உலகைச் சிறந்த இடமாக மாற்றுவதில் அவர்கள் பங்கெடுக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.

புரிதல் மேம்பட மிளிரும் தெளிவு

மாநாட்டின் கலந்துரையாடல்கள் புதுமையாகவும் கருத்துச்செறிவு மிக்கதாகவும் இருந்த்தாக அதில் பங்கேற்ற மாணவர்கள் தமிழ் முரசிடம் கூறினர்.

கிரீன்டேல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 வயது மாணவி க.சிவதுர்கா, மாநாட்டில் மற்ற இனத்தவரின் பண்பாடுகள் பற்றி அறிந்தபோது மனத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் பிறந்ததாகக் கூறினார்.

இந்த மாநாட்டை வழிநடத்திய குழுவில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழக மாணவரான 21 வயது துரை மாணிக்கம் நிஷாந்த், இளையர்களின் பங்களிப்பு குறித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 “இன்றைக்கு இத்தனை பேர் வந்துள்ளனர். நாங்கள் பேசும்போது செவிசாய்த்துத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். இத்தகைய ஈடுபாடு, ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில்  எங்களை மகிழ்விக்கிறது,” என்று அவர் கூறினார்.

கலாசார, சமூக இளையர்துறை அமைச்சு, ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள், ‘மிர்செக்ஸ்’ உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவோடு இம்மாநாடு நடைபெற்றது.

பகுத்தாயும் திறனே முக்கியம் 

ஜூலை 27ஆம் தேதி முதல் மனிதவளத் தற்காலிக அமைச்சராகவும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சராகவும் பொறுப்பேற்கும் திருவாட்டி ஜாஸ்மின் லாவ், மாநாட்டின் இறுதிப் பகுதியில் இளையர்களுடன் கலந்துரையாடினார்.

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் ஆகியவற்றால் கல்வி, தனிமனித அடையாளம், சமூக வாழ்க்கை, சமுதாய ஒருங்கிணைப்பு போன்றவற்றின் பாதிப்பை மாணவர்கள் ஆராய்ந்தனர்.  தொழில்நுட்ப வளர்ச்சி மனிதப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஜாஸ்மின் லாவ், அதேவேளையில், சமூக நன்மைகளுக்காகச் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

தாங்கள் வாழ விரும்பும் சமுதாயத்தை உருவாக்குவதில் இளையர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதை இம்மாநாடு வலியுறுத்த விரும்புவதாக மாநாட்டின் தலைமை வழிநடத்துநர்  ‌ஷுகுல் ராஜ் குமார், 30, தெரிவித்தார்.

“மின்னிலக்கத் தளங்களிலிருந்து படைப்புகளைப் பெறுவது மட்டுமன்றி நம்மைச் சுற்றியுள்ள தளங்களையும் சமுதாயங்களையும் வடிவமைப்பதில் பங்கேற்பாளர்களாகச் செயல்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இளையர்சமூகம்கல்வி