தொடக்கக் கல்லூரிகளுக்கு இடையே காரசார விவாதப் போட்டி

தொடக்கக் கல்லூரிகளுக்கு இடையே காரசார விவாதப் போட்டி

3 mins read
தெம்பனிஸ் மெரிடியன் கல்லூரிக்கு வெற்றிக்கோப்பை; ஆண்டர்சன் சிராங்கூன் மாணவி ஸ்ரியாவுக்குச் சிறந்த பேச்சாளர் பரிசு
8b5fe72d-a69c-4bd1-b5b2-92664c540921
தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியின் தமிழ் ஆசிரியர் வீரமுத்து கணேசனுடன் (வலமிருந்து மூன்றாமவர்) கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள். - படம்: கி.ஜனார்த்தனன்

தொடக்கக் கல்லூரிகளுக்கு இடையிலான விவாதப் போட்டியின் இறுதிச் சுற்றில், ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியும் (ASRJC) தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியும் (TMJC) ஒன்றோடொன்று வலுவாக மோதின.

அவ்விருக் கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர் பட்டாளம் கைகளைத் தட்டி, தத்தம் அணிகளுக்காகக் கூச்சலிட்டு உற்சாகப்படுத்தினர். இறுதிப்போட்டியில் தெம்பனிஸ் மெரிடியன் அணியினர் வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றினர். இருப்பினும், சிறந்த பேச்சாளர் பரிசை ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் மாணவர் ஸ்ரியா ஸ்ரீதர் வென்றார்.

தேசியத் தொடக்கக் கல்லூரி 49ஆவது முறையாக ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் எட்டு கல்லூரிகள் பங்கு பெற்றன. காலிறுதி மற்றும் அரையிறுதிச் சுற்றுகளைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இறுதிச் சுற்று நடைபெற்றது. ‘செயற்கை நுண்ணறிவு மனித மாண்புகளைச் சீர்குலைக்கும்’ என்ற தலைப்பில் மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மனித அறநெறிகள் குறித்து விவாதித்தனர். சிண்டா (SINDA) அமைப்பின் தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மனித மாண்புகளைச் சீர்குலைக்கிறது என்ற நிலைப்பாட்டில் பேசிய ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி (ASRJC) அணி, தனது வாதங்களை ஆணித்தரமாக முன்வைத்தது.

தலைப்பை ஒட்டிப் பேசிய அந்த அணியின் முதல் பேச்சாளர் ப்ரித்தி ராஜா, கூகுள், அமேசான் போன்ற பெருநிறுவனங்கள் மனிதர்களின் தரவுகளைச் சேகரித்து அவர்களின் தனியுரிமையைப் பறிப்பதாகக் குறிப்பிட்டார். ஏஐ தொழில்நுட்பத்தால் மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய், மனிதர்கள் பொருளியல் ரீதியாக முடங்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் ஆசிரியர்கள் கமலவாணி, கலைவாணி இளங்கோ ஆகியோருடன் போட்டியில் பங்கேற்ற மாணவர் குழு.
ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் ஆசிரியர்கள் கமலவாணி, கலைவாணி இளங்கோ ஆகியோருடன் போட்டியில் பங்கேற்ற மாணவர் குழு. - படம்: கி.ஜனார்த்தனன்

அவரைத் தொடர்ந்து பேசிய இரண்டாம் பேச்சாளர் கார்த்திகா சரவணன், அமேசான் ஆள்சேர்ப்பு மென்பொருள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புக்கான மென்பொருள்களில் காணப்பட்ட பாரபட்சமான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டினார். நல்லது கெட்டது பகுத்தறியத் தெரியாத இயந்திரத்திடம் மனிதர்கள் தங்களை அடகு வைக்கத் தொடங்கிவிட்டதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

அணியின் மூன்றாம் பேச்சாளர் புகழினி முருகானந்தம், மனிதர்களுக்கிடையேயான நேரடித் தொடர்பு குறைந்து வருவதைக் குறிப்பிட்டார். உலகச் சுகாதார அமைப்பின் தரவுகளின்படி இளையர்களிடையே தனிமை உணர்வு அதிகரித்துள்ளதாகவும், சமூக ஊடக அல்காரிதம்கள் மக்களைப் பிரிப்பதாகவும் அவர் வாதாடினார்.

இறுதியாகப் பேசிய நான்காம் பேச்சாளர் ஸ்ரியா ஸ்ரீதர், சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்து, கட்டுரைகள் எழுதுவது முதல் அனைத்திற்கும் மாணவர்கள் இயந்திரங்களைச் சார்ந்திருப்பது விமர்சன ரீதியான சிந்தனையை மழுங்கடிக்கிறது எனக் கூறி வாதங்களை நிறைவு செய்தார்.

தலைப்பை மறுத்துப் பேசிய தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரி (TMJC) அணி, தொழில்நுட்பத்தைத் தற்காக்கும் வாதங்களை முன்வைத்தது.

அணியின் முதல் பேச்சாளர் சுரேஷ் ராகவர்த்தினி பேசுகையில், செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு தொழில்நுட்பக் கருவி மட்டுமே என்றும், அதை எப்படிக் கையாள்கிறோம் என்பது மனிதர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய இரண்டாம் பேச்சாளர் தான்யா ராமமூர்த்தி, சிங்கப்பூர் கல்வி முறையில் இத்தொழில்நுட்பம் நற்பண்புகளைக் கற்பிக்க உதவுவதாகக் கூறினார்.

அணியின் மூன்றாம் பேச்சாளர் வெங்கடேசன் ஜீவஜோதி, மருத்துவம் முதல் போக்குவரத்து வரை பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்குப் பெரிதும் உதவுகிறது என்றார். ஒவ்வோர் அறிவியல் கண்டுபிடிப்பும் மனித வாழ்க்கையை எளிதாக்கவே உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

விவாதத்தை நிறைவு செய்த இறுதிப் பேச்சாளர் விமோஹிதா ரவிக்குமார் விசாலாக்‌ஷி, பாரதியாரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற வரிகளை மேற்கோள் காட்டினார். புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை என கூறித் தனது அணியின் வாதத்தை முடித்தார்.

விவாதத்திற்காகத் தங்களைத் தயாரித்துக்கொண்ட அனுபவம் தங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக இரு அணி மாணவர்களும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்