செவித்திறன் குறைபாடுள்ளவர்களும் சமூக உரையாடல்களில் பங்கேற்க உதவும்வண்ணம், பேசப்படும் சொற்களை வரிவடிவமாக மாற்றும் ‘சைலண்ட் கைடு’ (SilentGuide) எனும் அறிவார்ந்த மூக்குக்கண்ணாடியை வடிவமைத்துள்ளனர் ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப்பள்ளி மாணவர்கள்.
மாணவர்கள் கரண் கோபு பிள்ளை, ஐடன் லிம் இணைந்து வடிவமைத்துள்ள இந்த மூக்குக்கண்ணாடி, ‘சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் சிங்கப்பூர்’ நிறுவனம் நடத்திய ‘சால்வ் ஃபார் டுமாரோ’ (Solve for Tomorrow) 2024 போட்டியில் முதல் பரிசு பெற்றது.
மாணவர்களுக்கு 7,000 வெள்ளி ரொக்கமும் 10,000 வெள்ளி மதிப்புள்ள சாம்சுங் கருவிகளும் பரிசாக வழங்கப்பட்டன.
செவித்திறன் குறைபாட்டுள்ளோரில், குறிப்பாகக் குறைந்த அல்லது நடுத்தர வருமானமுள்ளோர் இடையே தற்போதுள்ள தகவல் தொடர்பு இடைவெளியைக் குறைக்கவும் சமூகத்தில் ஒன்றிணையவும் எளிதில் பயன்படுத்தக்கூடிய குறைந்த செலவிலான தீர்வை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் செவித்திறன் குறைபாடுள்ள ஏறத்தாழ 500,000 பேருக்கும் உலகளவில் அந்தக் குறைபாடுடைய 430 மில்லியன் பேருக்கும் இது பயனுள்ளதாக அமையும் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சாம்சுங் சிங்கப்பூர் நிறுவனம் கடந்த எட்டாண்டுகளாக நடத்திவரும் இந்த எதிர்காலத்திற்கான தீர்வுகாணும் போட்டியில் 240 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 75 குழுக்கள் பங்கேற்றன.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, உடல்நலம், விளையாட்டு, நல்வாழ்வு, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம், கற்றல், சிங்கப்பூரின் மின்னிலக்க எதிர்காலம் உள்ளிட்ட தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் தொழில்நுட்பப் படைப்புகளைச் சமர்ப்பித்தனர்.
சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், தொடர்புத்திறன் குறைபாடுள்ள பதின்ம வயதினருக்கான செயலியை வடிவமைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அறிவார்ந்த கைக்கடிகாரத்துடன் பயன்படுத்தக்கூடிய இந்த ஒருங்கிணைந்த செயலி, பயனரின் தகவல் தொடர்பு, உணர்வுகள், உணவுமுறை கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க உதவும்.
இரண்டாம் பரிசு பெற்ற இந்தத் திட்டத்திற்காக மாணவிகளுக்கு 5,000 வெள்ளி ரொக்கமும் 7,000 வெள்ளி மதிப்புள்ள சாம்சுங் கருவிகளும் பரிசாக வழங்கப்பட்டன.
ஹுவா சோங் கல்வி நிலைய மாணவர்கள், நன்யாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள், சிங்கப்பூர் அறிவியல் தொழில்நுட்பப் பள்ளி மாணவர்கள் இணைந்து வடிவமைத்த ‘ஸ்மார்ட் விஷன்’ மூன்றாம் பரிசு பெற்றது.
கண்பார்வை, தொடர்புத்திறன், வழியறிதல் ஆகிய கூறுகளில் மூத்தோருக்கு உதவ, இந்த மூக்குக்கண்ணாடி குரல்வழிக் கட்டளைகளைப் புரிந்துகொண்டு ஒலிவடிவத்தில் உரிய இடத்திற்கு வழி சொல்வதுடன், திரையிலும் வழிகாட்டும் சேவையை வழங்குகிறது.
இதனை வடிவமைத்த குழுவினருக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் 5,000 வெள்ளி மதிப்புள்ள சாம்சுங் கருவிகளும் பரிசாக வழங்கப்பட்டன.
விட்லி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த ‘ஹெல்த் பிளஸ்’ கைப்பேசிச் செயலி, பெருமொழி மாதிரியைப் (large language model) பயன்படுத்திச் சிக்கலான மருத்துவ அறிக்கைகளைப் படித்துணர்ந்து அவற்றுக்குரிய உணவுமுறைத் திட்டத்தை வழங்குகிறது. இது இணையவழி அதிக வாக்குகளைப் பெற்று மக்கள் தேர்வு விருதை வென்றது. மாணவர்களுக்கு ‘சாம்சுங் கேலக்சி பட்ஸ்3 புரோ’ செவிப்பொறி பரிசாக வழங்கப்பட்டது.