தமிழ் முரசு உள்ளகப் பயிற்சியில் மாணவியர்

தமிழ் முரசு உள்ளகப் பயிற்சியில் மாணவியர்

2 mins read
43a2129a-d5de-4e29-aee5-f4f0d668f55f
பீட்டி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை 2 மாணவிகளான (இடமிருந்து) ஸ்ரீதர் ஹர்ஷிகா, இராஜ குமார் ரெஜினா கிறிஸ்டா, ராஜ்குமார் ரித்திகா, வேல்முருகன் நித்யஸ்ரீ, வினோத் மதுமிதா, வெங்கட்ராமன் ஜோவித்தா. - படம் த.கவி
Google News Preferred Icon

நல்ல வேலையில் சேரவேண்டும் என்ற கனவை நனவாக்க விரும்பும் பிள்ளைகள் பள்ளிகளில் நன்றாகப் படித்துவருகின்றனர்.

பள்ளிக்கும் வேலைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பதினான்கு வயதிலேயே ஆறு மாணவிகள் தமிழ் முரசு அலுவலகத்தில் அறிந்துகொண்டனர்.

உள்ளகப் பயிற்சிக்காக அவர்கள் தமிழ் முரசில் இருந்தது மொத்தம் ஐந்து நாள்கள்.

பீட்டி உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அந்த அறுவர், மூன்று குழுக்களாகப் பிரிந்து, செய்திக்கட்டுரைகளை இரண்டு நாள்களில் எழுதிக் காட்டினர்.

செய்தியாளர்களுக்கு மிக அடிப்படையான பண்பு நம்பகத்தன்மை என்பதை முதலில் கற்ற மாணவிகள், தங்களது தலைப்பின்கீழ் சேகரிக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறியப் பழகினர்.

செய்தித்தளங்களைப் படித்துத் துல்லியமாக மேற்கோள் காட்ட இவர்கள் கற்றனர். தலைப்புக்குத் தகுந்த நபர்களைப் பேட்டி எடுத்துத் தகவல்களைச் சேகரித்தனர்.  

மிகக் குறுகிய காலத்தில் திரட்டப்பட்ட தகவல்களை உள்வாங்கி கேமரா முன் கருத்துகளைத் தெளிவாகவும் அழகாகவும் படைத்தனர். 

நெறியாளர்கள் இன்றி மாணவிகள் தாங்களாவே அந்தக் கலந்துரையாடல்களைத் திறம்பட நடத்தினர்.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல, சொந்தமாகச் செய்திக் காணொளிகளைத் திறன்பேசிகளில் எடுத்துத் தொகுத்தனர்.

வயதுக்கு மீறிய பொறுப்புடனும் திறத்துடனும் இவர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து காட்டினர்.  

உயர்நிலை 2 மாணவர்களால் இவ்வளவு செய்ய முடியுமா என்று தொடக்கத்தில் சந்தேகப்பட்ட என் மனத்தை இந்த அறுவரின் கண்ணியம் மாற்றியது. 

2010க்குப் பிறகு பிறந்த இவர்கள், ‘ஜென் ஸி’ தலைமுறையைக் காட்டிலும் இளையவர்கள். 

மின்னிலக்கக் கடலில் விளையாடும் இந்த மீன்கள், வருங்கால விண்மீன்கள்.

‘ஜென் ஆல்ஃபா’ என இந்தப் புதிய தலைமுறை இளையர்களை அழைப்பதுண்டு. கற்கும் வேட்கை உள்ள இத்தகைய இளையர்களுக்கு எங்கள் கதவுகள் திறந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்
தமிழ் முரசுவேலைபயிற்சிசெய்தியாளர்