தேசிய இளையர் சாதனையாளர் விருதும் ‘ஹெச்எஸ்பிசி’யும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுச்சூழலுக்கான இளையர் விருதை அதிகாரபூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளன.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைக் காக்க பாடுபடும் இளம் தலைவர்களை ஊக்குவிப்பது இந்த விருதின் நோக்கம். விருதின் 25ஆம் நிறைவாண்டுக் கொண்டாட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
விருதின் சிறப்பைக் கொண்டாடும் வகையில், சுற்றுச்சூழலுக்குக் குரல்கொடுக்கும் 25 பேரைப் பற்றிய நினைவுப் புத்தகம் வெளியிடப்படது. அவர்களில் ஒருவரான ராமநாதன் துரைாஜு, இந்த விருதால் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கான ஊக்கத்தைப் பெற்றதாகக் கூறினார்.
‘என்வைரே பீஸ்’ என்ற சுற்றுப்புற ஆர்வலர் அமைப்பை நிறுவிய திரு ராமநாதன், 2007ல் இந்த விருதைப் பெற்றார். 2005ல் திரு ராமநாதன் தம் சொந்த வட்டாரத்தில் அறிமுகம் செய்த தேசிய மறுபயனீட்டுத் திட்டம் விரிவாக்கம் கண்டுள்ளது.
“விருதின் மூலம் ஆஸ்திரேலியாவின் வட குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மழைக்காடுகளில் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டேன். ‘மைக்ரோஹைலிட்’ தவளைகளையும் முதுகெலும்பிகளையும் பற்றி ஆய்வு செய்யும் வாய்ப்புக் கிடைத்தது,” என்றார் அவர்.
காலப்போக்கில் சுற்றுச்சூழல் சார்ந்த முயற்சிகள் சிங்கப்பூரில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதைக் கண்கூடாகக் காண்பதாக திரு ராமநாதன் குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றம், குடிநீர் நிலைத்தன்மை, பசுமை சார்ந்த திறன்களை வளர்ப்பது உள்ளிட்ட துறைகளில் சிங்கப்பூர் முன்னேற்றம் அடைந்துள்ளதையும் அவர் சுட்டினார்.
கடந்த இருபது ஆண்டுகளில் பல குழுக்களும் தொடர்புக் கட்டமைப்புகளும் ஆர்வமிகு தனிமனிதர்களாலும் சங்கங்களாலும் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் வரையில் விருதுக்கான விண்ணப்பங்களை ஆர்வமுள்ளோர் சமர்ப்பிக்கலாம். 13 முதல் 17 வயது பிரிவைச் சேர்ந்த வெற்றியாளர்கள் சான்றிதழ்களையும் மின்னிலக்க கைக்கணினியையும் பெறுவர். 18 முதல் 25 வயது வரையிலான பிரிவைச் சேர்ந்த ஆகச் சிறந்த இரண்டு பேர், ‘எர்த்வாட்ச்’ ஆய்வு நிலையத்தைச் (Earthwatch Institute) சேர்ந்த ஆய்வாளர்களுடனும் விஞ்ஞானிகளுடனும் இலவசமாகப் பயணம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவர்.
சுற்றுச்சூழல் எதிர்நோக்கும் சிக்கலான சவால்களைப் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை இந்தப் பயணத்தின்மூலம் வெற்றியாளர்கள் பெறலாம்.

