கண்பார்வையற்ற நெருங்கிய குடும்பத் தோழர் ஒருவர், அன்றாடம் சந்திக்கும் சவால்களைக் கண்டு தங்களால் இயன்றதைச் செய்ய முடிவெடுத்தனர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களான ஸ்பார்ஷ், மானஸ்.
பொருள்களை அடையாளங்கண்டு, எழுத்துக்களைப் படித்து, காட்சிகளை விவரிக்கும் அறிவார்ந்த, கழுத்தில் அணியக்கூடிய கருவியை 19 வயது ஸ்பார்ஷ் மற்றும் 21 வயது மானஸ் உருவாக்கினர்.
சிங்கப்பூர்ப் பொறியாளர்கள் கழகம் ஜூலை 13ஆம் தேதியன்று மத்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் நடத்திய பொறியியல் புத்தாக்கச் சவால் பரிசளிப்பு விழாவில் அவர்கள் பல்கலைக்கழகப் பிரிவில் இரண்டாம் பரிசாக $5,000 காசோலையை வென்றனர்.
இந்த நிதியைக் கொண்டு சிங்கப்பூர் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத்தினரோடு இணைந்து இக்கருவியைச் சிறு வடிவமாக்கவும் மேம்படுத்தவும் உள்ளதாக அவர்கள் கூறினர்.
“பார்வையற்றோர் பலரும் பேருந்து எண்களை இக்கருவியால் அடையாளங்காண முடியுமா எனக் கேட்கின்றனர். அதனால் பொத்தானை அழுத்தும்போது மட்டுமல்லாது, தொடர்ச்சியாக சுற்றத்தை ஆராயும்படி இக்கருவியை மாற்ற விரும்புகிறோம். இதற்கான நிதியை மற்ற இடங்களிலும் நாடுகிறோம்,” என்றார் ஸ்பார்ஷ்.
பொறியியல் புத்தாக்கச் சவால்
204 மாணவ அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் மொத்தம் 40 அணிகள் காசோலை வென்றன.
“பொறியியல் வாயிலாகப் பொருள்களை மறுபயனீடுசெய்யும் பொருளாதாரத்தை (Circular Economy)” என்ற கருவில், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியும் பொருள்களும், மின்னிலக்க உருமாற்றம், சுகாதாரப் புத்தாக்கம் மற்றும் உணவு விநியோகச் சங்கிலி என்ற நான்கு பிரிவுகளில் அவர்கள் தீர்வுகளை முன்மொழிந்தனர்.
“பொறியியல் நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு அதிகம் துணைபுரிந்துள்ளது. உதாரணத்திற்கு, கண் தெரியாதவர்கள், கால்தடியும் வழிகாட்டி நாயும் இருந்தாலும் தம் தலைக்கு அருகிலிருப்பவற்றை உணரமுடியாது. ஐடிஇ ஈஸ்ட் மாணவர்கள் எதிரொலிமூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினர்,” என்றார் சிறப்பு விருந்தினரான போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்.
தொடர்புடைய செய்திகள்
“மோசமடைந்துவரும் பருவநிலையால் சிக்கல் அதிகரிக்கும் இன்றைய உலகில் மாணவர்கள் தாம் காணவிரும்பும் மாற்றங்களைத் தாங்களே உண்டாக்கலாம்,” என்றார் விழாவின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு ஷஃபிக் ஷாஹுல்.
மிளிரும் படைப்புகள்
உயர்நிலைப் பிரிவில் முதல் பரிசான $3,000 காசோலையை வென்ற யுவபாரதி அனைத்துலகப் பள்ளி மாணவிகள் உணவு, காய்கறிக் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும் உரத்தையும் தயாரித்தனர்.
யுவபாரதி பள்ளியின் மற்றோர் அணி, சிங்கப்பூரில் நிலத்துக்குப் பஞ்சம் இருப்பதால் கடலிலேயே செடிகளை வளர்ப்பது குறித்த திட்டத்தைப் படைத்தனர். கடல்நீரிலிருந்து உப்பைச் சுத்திகரித்துச் செடிகளுக்குக் குறிப்பிட்ட நேரங்களில் வழங்குவதற்கு ஒரு நுண்கட்டுப்படுத்தியையும் பயன்படுத்தினர்.
‘என்யுஎஸ்’ கணித, அறிவியல் கணித, அறிவியல் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் டுரியான் ஓடு, கரும்பு போன்றவற்றிலிருந்து தண்ணீரைச் சுத்திகரிக்கும் வடிகட்டிகளைத் தயாரித்தனர்.
மூட்டுப் பிரச்சினைக்கு உதவ முப்பரிமாணத்தில் அச்சடிக்கப்பட்ட கட்டமைப்போடு செயற்கை நுண்ணறிவோடு இணைந்த விளையாட்டையும் செயலியாக வழங்கிய தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி அதன் பிரிவில் முதல் பரிசை வென்றது.
பல்கலைக்கழகப் பிரிவில் முதல் நிலையில் $8,000 வென்றது ஹாங்காங் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். கட்டட வெளிப்புறங்களில் சூரியத் தகடுகளை அமர்த்தும் எந்திரமனிதரை இவ்வணி படைத்தது. இது உயரமான இடங்களில் பணியாற்றும் ஆபத்தையும் ஊழியர் சார்ந்த செலவையும் குறைக்கும்.

