சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் முக்கிய அங்கம் வகிப்பது தேசிய தின அணிவகுப்பு.
இந்த ஆண்டு பாடாங்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை கண்டிராத அளவில் அதிக எண்ணிக்கையில் மொத்தம் 40 அணிவகுப்புப் படைகள் இடம்பெறவுள்ளன.
வெவ்வேறு பின்னணிகளிலிருந்து மொத்தம் 2,100 பேர் அணிவகுப்பிலும் கொண்டாட்டத்திலும் பங்குபெறுவர்.
தேசிய தின அணிவகுப்பில் பங்குபெறும் இந்தியர்களில் மூவர் அவர்களின் முதல்முறை அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை
இந்த ஆண்டு முதல் முறையாக தேசிய தின அணிவகுப்பில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மரியாதை அணிவகுப்பு படையில் இடம்பெறவுள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு மட்டுமல்லாது, 28 வயதாகும் தேன்மொழி செல்வதுரைக்கும் இது முதல் அனுபவம்.
இதில் பங்குபெற ஆர்வத்தை வெளிக்காட்டிய தேன்மொழி இதை நாட்டுக்கு திருப்பித் தரும் சேவையாகக் கருதுகிறார்.
எஸ்ஜி60 கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டு தனக்குத் தானே சவால் விடுக்க தேன்மொழி இதில் பங்குபெற முனைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடும் வெயிலில் பயிற்சி மேற்கொள்வதை ஒரு பெரிய சவால் என்ற தேன்மொழி, நீண்ட நேர ஒத்திகையின்போது தோரணையை நிலைநிறுத்தி நிற்பதையும் சவால்களில் ஒன்றாகக் கூறினார்.
இந்த அணிவகுப்புக்காக தேன்மொழி SAR21 செயல்பாட்டு உபகரணத்தைக் கையாள வேண்டும். இதில் நிறைந்துள்ள பெரிய சவால் என்னவென்றால், அந்த உபகரணம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பயன்படுத்தும் உபகரணங்களில் ஒன்றல்ல.
“அந்த உபகரணத்தைக் கையாள்வது புதிய அனுபவம் எனக்கு. என் குடும்பத்தில் நான்தான் முதல்முறையாக தேசிய தின அணிவகுப்பில் பங்குகொள்கிறேன். என் குடும்பத்தினர் பெருமிதம் கொள்கின்றனர்,” என்றார் தேன்மொழி.
சிங்கப்பூர் ஆகாயப்படை
முதல் தேசிய தின அணிவகுப்பு அனுபவத்தை நினைத்துப் பெருமையில் திளைக்கும் மற்றொருவர் ஸ்டாஃப் சார்ஜண்ட் ஜெனரல் ஶ்ரீ ஞானவேல், 28.
கடந்த ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூர் ஆகாயப்படையில் இருக்கும் அவர் அணிவகுப்பில் இடம்பெறுவதை பெற்றோரிடம் பகிர்ந்துகொண்டபோது அது பெருமிதம் அளித்ததாக சொன்னார்.
பல ஆண்டுகளாக அணிவகுப்பில் கலந்துகொள்ள பயிற்சி மேற்கொண்டு வந்த ஸ்ரீ ஞான வேல், இந்த ஆண்டு எஸ்ஜி60 கொண்டாட்டம் என்பதால் அது மறக்க முடியாத அனுபவத்தை அள்ளித்தரும் என்று நம்புகிறார்.
சிங்கப்பூர் ஆகாயப் படை அணியில் இடம்பெறும் அவர் தனது படையில் நேரத்தை பதிவு செய்பவராக உள்ளார்.
படை ஒரே நேரத்தில் ஒத்திசைத்தவாறு அணிவகுக்க முக்கியப் பங்காற்றுகிறார் ஸ்ரீ ஞான வேல்.
பயிற்சி மே மாதம் தொடங்கியதாகச் சொன்ன அவர், வெப்பம் அதிகமாக இருந்ததை சவாலாகக் கருதுகிறார்.
“என்னைப் பொறுத்தவரை அணிவகுப்பு என்றாலே தேசிய தின அணிவகுப்புதான் பெரிது. சிங்கப்பூரர்களுக்கு அப்பாற்பட்டு உலகமெங்கும் பலரும் அதைப் பார்ப்பார்கள். இது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவம்,” என்று குறிப்பிட்டார் ஸ்ரீ ஞான வேல்.
சிங்கப்பூர் கடற்படை
சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையில் முழு நேர தேசிய சேவை புரியும் கார்ப்பரல் மெஹர் சிங் போகல், 19, முதல் தலைமுறை சிங்கப்பூரராக அணிவகுப்பில் பங்கேற்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறார்.
கடற்படை முக்குளிப்புப் பிரிவில் முக்குளிப்பாளராக இருக்கும் மெஹர், தொடக்கத்தில் தம் குடும்பத்தினர் அச்சமாக இருந்ததாக பகிர்ந்துகொண்டார்.
“எஸ்ஜி60 ஒரு குறிப்பிடத்தக்க கொண்டாட்டம். என் சகோதரரும் முன்னர் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். அதனால் எனக்கு இது உற்சாக மூட்டும் அனுபவமாக இருக்கும்,” என்று கூறினார் மெஹர்.
முக்குளிப்பாராக நான் இருப்பதை நினைத்து என் பெற்றோர் பயந்து போயிருந்தாலும் அவர்கள் இப்போது என்னைக் கண்டு பெருமைப்படுகின்றனர்.
தாம் பிறக்கும் முன்னரே பெற்றோர் சிங்கப்பூருக்கு வந்ததாகச் சொன்ன மெஹர் பெற்றோருக்கு முக்குளிப்பாளர் பணியை பற்றி தொடக்கத்தில் பெரிதும் தெரியவில்லை என்றார்.
அது கடினமான தேசிய சேவை பணி என்பதால் தன்னால் அதில் தாக்குப்பிடிக்க முடியுமா என்று பெற்றோர் சந்தேகம் கொண்டிருந்ததாகச் சொன்னார் மெஹர்.
“எஸ்ஜி60, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை நினைவூட்டுகிறது. இந்த முக்கியமான ஆண்டில் நான் மரியாதை அணிவகுப்புப் படையில் இடம்பெறுகிறேன்,” என்று குறிப்பிட்டார் மெஹர்.