இந்திய முஸ்லிம் இளையர்கள் ஏறக்குறைய 150 பேர், ஜூலை 19ஆம் தேதி (சனிக்கிழமை) இந்திய முஸ்லிம் அடையாளம், நிதி நிர்வாகம், திருமண வாழ்க்கை, மனநலச் சவால்களைச் சமாளித்தல் போன்ற முக்கிய அம்சங்களை ஆராய்ந்தனர்.
சிங்கப்பூர் இஸ்லாமிய மையத்தில் முதன்முறையாக நடைபெற்ற இந்திய முஸ்லிம் இளையர் மாநாட்டில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இரட்டை அடையாளம்
சமயம்வழி மற்ற முஸ்லிம் மக்களுடனும் மொழி, கலாசாரம்வழி தமிழ் மக்களுடனும் இணையும் ஆற்றல் இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்கு உள்ளது.
இதனால் இந்திய முஸ்லிம் மக்களின் இரட்டை அடையாளம் தனித்துவமானது என்று கூறினார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக்.
மாநாட்டில் நடைபெற்ற ஒரு குழுக் கலந்துரையாடலில் அவர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இத்தகைய இரட்டை அடையாளம் இந்திய முஸ்லிம் இளையர்கள் சிலருக்குச் சவாலாக உள்ளது என்று பலர் இந்தக் கலந்துரையாடல்களில் பகிர்ந்தனர்.
இதனால் தாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட குழுவிலும் இடம்பெறவில்லை என்றும் தங்களுக்கென்று ஓர் அடையாளம் இல்லை என்றும் அவர்கள் கருத்துரைத்தனர்.
இந்நிலையில், “நமது இந்த இரட்டை அடையாளம் நமது பலம்,” என்று உறுதிபடக் கூறினார் டாக்டர் ஹமீது.
தொடர்புடைய செய்திகள்
மணவாழ்க்கை
இல்லற வாழ்க்கையைத் தொடங்குவதற்குமுன் பணியிடத்தில் ஒரு நல்ல பதவி, மேற்கல்வி, நிதி வசதி போன்ற தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இக்கால இளையர்கள் விரும்புகின்றனர் என்றார் சையது முகமது அசீல், 26.
“இதனால் என் தலைமுறையைச் சேர்ந்த இளையர்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர்,” என்றார் அவர்.
தனிப்பட்ட ஆசைகள் தவிர, தனக்கான துணையைத் தேடுவதற்கும் தன் குடும்பத்திற்கு ஏற்ற துணையைத் தேடுவதற்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு என்றார் முகமது ராசத், 23.
“ஒரு சிலர் தன் விருப்பத்திற்கேற்ற துணையைக் கண்டுபிடிக்க விரும்புவதுண்டு. மற்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒத்துப்போகக்கூடிய துணையை விரும்புகிறார்கள்,” என்றார் அவர்.
மேலும், இல்வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க இளையர்கள் சிலர் பொருத்தமானவர்களுடன் பழக முற்படுவர். ஆனால் இந்த நடைமுறையில் தனக்கு உடன்பாடில்லை என்றார் நூருல் ஃபாத்திமா, 15.
“பலரிடம் பழகுவதைவிட எனக்கான ஒருவரைத் தேடவே விரும்புகிறேன்,” என்றார் அவர்.
தன் நண்பர்கள் சிலர் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதால் சில நேரங்களில் தனிமையை உணர்கிறார் ஃபாத்திமா.
“மணவாழ்க்கை பற்றிய இளையர்களின் கருத்துகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். இதுவும் ஒரு தனித்துவம்,” என்றார் ஃபாத்திமா.
இக்கால இந்திய முஸ்லிம் இளையர்கள் மிகவும் திறந்த மனப்பான்மை உடையவர்கள் என்றார் பாஹியா சலாவுத்தீன், 17.
“எனக்குத் தெரிந்த இந்திய முஸ்லிம் நண்பர்கள் சிலர் மற்றொரு கலாசாரம் சார்ந்தவர்களைத் திருமணம் செய்துள்ளனர். இரு கலாசாரங்கள் இணைவது மிக அழகான அம்சம் என்று கருதுகிறேன்,” என்றார் பாஹியா.

