புதுடெல்லி: இந்தோனீசியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ (Bintang Adipurna) வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
முன்னதாக, அந்நாட்டின் அதிபர் மாளிகைக்கு வருகைதந்த திரு மோடிக்குக் குதிரைப் படை வீரர்கள் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடிக்குப் பல்வேறு நாடுகள் இதுவரை 34 விருதுகளை வழஙகிச் சிறப்பித்துள்ளன. இந்நிலையில், 35வது விருதை இந்தோனீசியா வழங்கியுள்ளது. அந்நாட்டின் நிலைத்தன்மை, செழிப்பு, நீடித்த ஒற்றுமை ஆகியவற்றுக்குச் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.
விருது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா - இந்தோனீசியா உறவில் பொற்காலம் தொடங்குவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய இருநாடுகளின் கடலோரக் காவல்படைகளும் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.

