சதுரங்க வரலாற்றில் ஓர் இளம் தமிழரின் நம்பிக்கையூட்டும் அத்தியாயம்

3 mins read
a565458f-0e5f-43b3-b681-5749b0474eb8
விஸ்வநாதன் ஆனந்தின் வெற்றிக்குப்பின் அவரது வழியைப் பின்பற்றி குகேஷ் (படம்) உள்ளிட்ட தமிழ்ச் சதுரங்க வீரர்கள் பலர் சதுரங்க உலகில் தொடர்ந்து சாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சதுரங்க விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் உலகளவிலான போட்டிகளை உன்னிப்பாக நான் கவனித்ததில்லை. முதன்முறையாக, நான்கு மணி நேரமும் இடைவிடாது விளையாடிய வீரர்களை, கண்ணாடிக்குப்பின் அமர்ந்து நேரடியாகப் பார்த்தது எனக்குப் பிரமிப்பாக இருந்தது. 

உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் இறுதி ஆட்டமான பதினான்காம் சுற்றுக்கு முன்னர், குகேஷ் தொம்மராஜு, வெற்றியாளராவதுபோல ஓரளவு எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனால், ‘இன்று விளையாட்டு முடிவுறாது’, ‘முந்தைய ஆட்டத்தைப் போலவே சமநிலையில் முடிந்திடும்’, ‘வெள்ளிக்கிழமை விறுவிறுப்பான குறுகியநேர விளையாட்டுகள் இடம்பெறும்’ எனப் பலரைப்போல என்னுடன் அங்கிருந்த நண்பரும் கூறினார். அதற்கேற்ப நான் எழுதியதை மாற்றியமைக்கலானேன். 

இதற்கிடையே, கூடியிருந்த தமிழ்க் குடும்பங்களை நான் நேர்கண்டதில் நான்காம் வகுப்பில் படிப்பை இடைநிறுத்தியதாலேயே குகேஷால் இத்தனை சிகரங்களைத் தொட முடிந்தது என்ற கருத்து அவர்களிடையே நிலவுவதை உணர்ந்தேன். சிங்கப்பூரில் அத்தகைய முடிவெடுப்பது அபாயகரமானதாகக் கருதப்படக்கூடும்.

இரு வீரர்களின் காய்களும் மெல்ல நடுக்கட்டங்களை நெருங்கின. ‘எண்ட்கேம்’ (endgame), அதாவது பலகையில் ஓரிரு காய்களே எஞ்சியுள்ளதைக் குறிக்கும் நிலை இது என்று என் நண்பர் கற்றுத்தந்தார். இந்தக் கட்டத்தில் ஒவ்வொரு நகர்விலும் பொதிந்திருக்கும் கணிதமும் தொலைநோக்குப் பார்வையும் மிக சுவாரசியமாக இருந்தன.

யானைக் காய் பரிமாற்றத்தைக் குறிவைத்த டிங், ஒன்பது நிமிடங்களே எஞ்சியிருந்தபோது அதனைப் பிசகாய் நகர்த்தினார். உடனே, கணினிக் கணக்கு அடிப்படையில் நேரலையாகக் காட்டப்பட்ட கறுப்புத் தரப்பு வெற்றி சாத்தியக்கூறு 95 விழுக்காட்டைத் தாண்டியது.

ஒட்டுமொத்த ரசிகர்கள் அறையிலும் ஒரே பரபரப்பு. கருத்துரைப்போரில் முதல் ரசிகர் கூட்டத்திலிருந்த சிறுவர்கள் வரை அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக, வெள்ளைக் காய்களைக் கொண்டு விளையாடுபவருக்கு வெற்றி வாய்ப்பு சற்றே மேலோங்கி இருக்கும் என்பதால் இவ்வெற்றி கூடுதல் வியப்பு அளித்தது. 

உடனே, விளையாட்டு அரங்கத்துக்கு விரைந்த நாங்கள், குகேஷ் உலகச் சதுரங்க வெற்றியாளராக உணர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நேரடியாகக் கண்டோம். அதிர்ச்சி, ஆச்சரியம், பேரானந்தம் என குகேஷின் உணர்ச்சிகளும் நடவடிக்கைகளும் மாறிக்கொண்டிருந்தன. உணர்ச்சிப் பெருக்கில் இருக்கையிலிருந்து குதித்து அங்குமிங்கும் அவர் நடமாடினார்.

சோர்ந்து காணப்பட்ட டிங் லிரன், 58ஆம் நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டபோது அரங்கமே எழுந்து கைதட்டி ‘குகேஷ்’ என ஆரவாரித்தது மெய்சிலிர்க்க வைத்தது. 

சீன கிராண்ட்மாஸ்டரும் கடந்த ஆண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளரும் ஆவார் 32 வயது டிங். அவரை முறியடித்து 18 வயதில் 18ஆம் உலகச் சதுரங்க வெற்றியாளராக வாகைசூடிய குகேஷ், அரங்கத்திலிருந்து வெளியேறியதும் ஆனந்தக் கண்ணீருடன் இருந்த தந்தையைக் கட்டித் தழுவிக்கொண்டார். ‘குகேஷ்’, ‘பாரத் மாதா கி ஜே’ என அவரைச் சுற்றியிருந்தோர் முழக்கமிட்டனர்.

உலக கிராண்ட்மாஸ்டர்கள் மேக்னஸ் கார்ல்சன், விஸ்வநாதன் ஆனந்த் முதலியோருக்கு இணங்க உலகச் சதுரங்கச் சமூகமும் இவ்வெற்றி மனநிறைவு அளிப்பதாக இல்லை எனக் கூறி வருகிறது.

மனநலச் சிக்கல்களோடு போராடிக் கொண்டிருந்த டிங் ஒருபுறம், 18 வயதில் உலகமே தன் ஒவ்வோர் அசைவையும் கவனித்துக்கொண்டிருந்த உளைச்சலில் குகேஷ் மறுபுறம்.

இருப்பினும், இருவரும் வெளிப்படுத்திய போட்டி அறப்பண்புகளும் ஒருவர் மீது ஒருவர் காட்டிய மரியாதையும் உலக மக்களால் பேசப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, வெற்றிக்குப்பின் செய்தியாளர் கூட்டத்தில் தமது வெற்றியைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் டிங்கின் அசாத்தியத் திறன், விடாமுயற்சியைப் பாராட்டினார் குகேஷ்.

விஸ்வநாதன் ஆனந்தின் வெற்றிக்குப் பின்னர் பல தமிழக இளையர்கள் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளனர்.

அவரது தடத்தைப் பின்பற்றி குகேஷ் உள்ளிட்ட தமிழ்ச் சதுரங்க வீரர்கள், 20ஆம் நூற்றாண்டில் அசைக்க முடியாதிருந்த ரஷ்யாவைப் போல உலகச் சதுரங்கத்தைக் கூடிய விரைவில் ஆட்டிப் படைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பயணத்தின் வெற்றிக்கனிகளைக் காலமே ஈன்றெடுக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்