தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பார்வை குறைபாடுள்ளோருக்‌கு நண்பன் ‘யார்’

3 mins read
c5a2d8e3-4d87-4308-ad8e-e6d38d453b19
(இடமிருந்து வலமாக) 2024 ஜேம்ஸ் டைசன் விருதிற்கான இரண்டாவது இடத்தைப் பெற்ற யஜத் குலாட்டி, ஸ்பர்ஷ், மனஸ் பாம், ஸ்ரீவர்தன் கோயங்கா ஆகியோரும் ‘யார்’ என்ற தங்களது கண்டுபிடிப்பும். - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

பார்வைக் குறைபாட்டால் தங்களின் நண்பர் அஜய்க்கு ஏற்பட்ட அன்றாட சவால்களைக் கண்ணாரக் கண்டனர் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள்.

பார்வைக் குறைபாடுடையவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் அணிகலன்போல் அணிந்துகொள்ளும் கருவி ஒன்றை அதன் விளைவாக உருவாக்கியுள்ளனர்.

‘யார்’ (yaR) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சாதனம், இந்தி மொழியில் நண்பன் என்று பொருள்படும். பார்வை குறைபாடுள்ளோர் சுற்றுப்புறத்தை நன்கு உணர்ந்தவாறு நடமாட ஒரு நம்பிக்கையான நண்பனைப் போல துணைபுரியும் என்ற நோக்கத்துடன் இக்கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனத்தை, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினிப் பொறியியல் மாணவர் ஸ்பர்ஷ், 19, கணினி அறிவியல் மாணவர் மனஸ் பாம், 21, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினி அறிவியல் மாணவர்களான ஸ்ரீவர்தன் கோயங்கா, 20, யஜத் குலாட்டி, 19, ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.

இந்தச் சாதனம் தேசிய அளவில் நடத்தப்பட்ட 2024 ஜேம்ஸ் டைசன் விருதிற்கான இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஜேம்ஸ் டைசன் விருது என்பது ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக வடிவமைப்புப் போட்டியாகும். இது உயர்நாட்டமுள்ள பொறியாளர்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் தொழில்நுட்பத்தின்வழி மக்‌களின் வாழ்க்கையை மேம்படுத்தி உலகத்தில் ஒரு மாற்றத்தைக்‌ ஏற்படுத்த ஊக்குவிக்கிறது.

பதக்கம் போன்று வடிவமைக்கப்பட்ட ‘யார்’ சாதனத்தைக்‌ கயிற்றின் உதவியோடு கழுத்தில் அணிந்துகொண்டு ஒரு பொத்தானை அழுத்தி அல்லது குரல் கட்டளை கொண்டு இயக்கலாம்.

இந்தச் சாதனத்திலுள்ள புகைப்படக்கருவி, காட்சி ஒன்றைக் குறித்த தகவல்களைப் பதிவு செய்து, செயற்கை நுண்ணறிவின்வழி அதை அணிந்துள்ளவர் பொருள்களை அடையாளம் காணவும், எழுத்துகளை வாசிக்கவும், காட்சிகளை விளக்கவும் துணைபுரிகிறது.

பிறகு, பேச்சொலியாக மாற்றப்பட்ட தகவல்களைக்‌ கருவியிலுள்ள ஒலிபெருக்கி அல்லது செவியொலி கருவியின்மூலம் கருவியின் பயன்பாட்டாளர் கேட்கலாம்.

‘யார்’ கண்டுபிடிப்பின் முதல் கட்டமாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளம் பொறியாளர்கள் ஒன்றுகூடி கலந்துகொள்ளும் போட்டியான ‘ஹேக்கத்தான்’ (Hackathon) ஒன்றில் நான்கு கண்டுபிடிப்பாளர்களும் சேர்ந்து அட்டைப்பெட்டி வடிவில் முன்மாதிரி ஒன்றைத் தயாரித்தனர்.

“அதன் முதல் தோற்றம் எளிமையானதாக இருந்தாலும் அது நாங்கள் நினைத்தபடி செயல்பட்டபோது நாங்களும் நீதிபதிகளும் மகிழ்ச்சி அடைந்தோம்,” என்று மனஸ் நினைவுகூர்ந்தார்.

‘யார்’ சாதனத்தை மேம்படுத்த யஜத்தின் குடும்ப நண்பரும் டெல்லாய்ட் நிறுவனத்தின் ஆலோசகருமான அஜய் கூறியவையும் அவரின் அனுபவங்களும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறினர்.

“அஜய்யின் அன்றாட சவால்கள், தற்போதுள்ள தீர்வுகளிலுள்ள குறைபாடுகளை நாங்கள் அடையாளம் கண்டு அவற்றை நீக்குவதற்கும் மேம்பட்ட கருவி உருவாக்குவதற்கும் எங்களுக்கு ஊக்கமளித்தன,” என்று யஜத் கூறினார்.

‘யார்’ கருவியைப் பயன்படுத்துவோரின் கருத்துகளைத் துல்லியமாகச் சேகரிக்கப்பதற்கு சிங்கப்பூர் பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடுள்ள உறுப்பினர்களுடன் இணைந்து அவர்கள் செயல்பட்டனர்.

இதன் விளைவாக, பயன்பாட்டிலிருந்த கனமான கருவி அழகான, மெல்லிய பதக்கமாக உருமாறியதோடு அதில் அதிர்வலைகள்மூலம் எச்சரிக்கை தருதல், மேம்படுத்தப்பட்ட புகைப்படக்கருவி போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

உலகெங்கும் ‘யார்’ சாதனத்தைத் தேவைப்படுவோர் வாங்கிப் பயன்பெறும் வகையில் $500க்கும் குறைந்த விலையில் விற்பதற்குக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர்கள் ‘யார்’ திட்டப்பணி குறித்த தகவல்களை இதுபோன்ற சாதனங்களை உருவாக்க விரும்புபவர்களுக்குத் தேவைப்படும் வளங்களாக ‘ஓப்பன் சோர்ஸ்’வழி பகிர்ந்துள்ளனர்.

“21ஆம் நூற்றாண்டில் பார்வைக் குறைபாடுடையோருக்கு ஒரு புதிய பார்வையை வழங்குவதே எங்களது நோக்கமாகும். இதன் தொடர்ச்சியாக வருங்காலத்தில் நுண்ணறிவின்வழி தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறோம்,” என்று மனஸ் கூறினார்.

தேசிய அளவில் நடந்த போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான ‘யார்’ கருவி, ஜேம்ஸ் டைசன் விருது அனைத்துலகளவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றால் குழுவிற்கு S$50,500 பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.

அனைத்துலக அளவில் தேர்ந்தெடுக்‌கப்பட்ட சிறந்த 20 கண்டுபிடிப்புகள் அக்டோபர் 16 தேதியன்று அறிவிக்கப்படும். இதைத் தொடர்து அனைத்துலக அளவில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் 13ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.

குறிப்புச் சொற்கள்