மணமக்கள் வாழ்வில் ஒன்றிணையும் முக்கியத் தருணத்தை நேரில் கண்டு சித்திரமாக்குகிறார் 28 வயது கஸ்தூரி சஞ்சய் நாயர்.
இக்கலையில் ஈடுபட கஸ்தூரியை ஊக்குவித்தவர் அவரது தங்கை ஆரணி சஞ்சய் நாயர், 25.
வெளிநாட்டில் ஒரு பெண் திருமணங்களை ஓவியமாக வடிப்பதை சமூக ஊடகத்தில் கண்ட அவரது தங்கை, திருமணப் பரிசாக அவரது திருமண தருணத்தை வரைந்து தருமாறு கஸ்தூரியிடம் கேட்டார்.
“முதலில் தயக்கமாக இருந்தது. எனினும், என் குடும்ப நிகழ்ச்சி என்பதால் ஏதாவது பிழைநேர்ந்தாலும் பின்னர் சரிபார்த்துக்கொள்ளலாம் என்று என் தங்கைக்காகச் செய்தேன்,” என்றார் கஸ்தூரி.
தங்கை அவரது கணவருடன் இணைந்த அந்த மறக்கமுடியாத கணத்தை எழிலான ஓவியமாகத் தீட்டியிருந்தார் கஸ்தூரி.
“என் அக்காவின் ஓவியத்தைக் கண்டு நான் மெய்மறந்து போனேன். அவரது ஓவியம் உயிரோட்டத்துடன் இருந்தது. என்னதான் புகைப்படங்கள் எடுத்தாலும் ஓவியம்போல வராது,” என்று நெகிழ்ந்தார் ஆரணி.
மணமக்களுடன் திருமண மண்டபத்தின் தோற்றத்தையும் அலங்காரத்தையும் தனது ஓவியத்துக்குள் படம் பிடிக்கிறார் கஸ்தூரி.
மணவிழா தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே கஸ்தூரி திருமண இடத்திற்குச் சென்று விடுவார். திருமணம் நடக்கும் இடம், அலங்காரங்களைப் பார்வையிடுவார். 20 நிமிடங்களில் ஓவியம் வரையத் தயாராகிவிடுவார்.
தொடர்புடைய செய்திகள்
திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுடன் உரையாடிக்கொண்டே ஓவியத்தில் கவனம் செலுத்துவார் கஸ்தூரி. சிங்கப்பூர் திருமணங்களில் ஓவியம் வரைவது என்பது பார்த்திடாத ஒன்று என்பதால் பலர் தம்மிடம், தமது ஓவியங்களைப் பற்றி விசாரிப்பதாகக் கஸ்தூரி சொன்னார்.
“பிள்ளைகளும் மிக ஆர்வத்துடன் என்னிடம் வந்து வண்ணம் தீட்ட விரும்புவதாகச் சொல்வார்கள். விருந்தினர்களுடன் பேசிக்கொண்டே, ஓவியத்திலும் கவனம் செலுத்த கற்றுக்கொண்டுள்ளேன்,” என்றார் கஸ்தூரி.
மணமக்கள் மேடைக்கு வருவதற்கு முன்னரே ஓவியத்தில் இடம்பெறும் அம்சங்கள் பெரும்பாலானவற்றை முடிக்க முற்படுவார் கஸ்தூரி. மணமக்கள் வந்ததும் அவர்களுக்குப் பிடித்தவாறு நிற்கச் சொல்லிப் படம் எடுத்துக்கொள்வார். அப்படத்தைக்கொண்டு, அவர்களுக்கு ஓவியத்தில் உயிர்கொடுப்பார்.
“நேரில் பார்த்து வரையும்போது என்னுள் பல உணர்ச்சிகள் வழிந்தோடும். மணமக்களுக்குப் பிடித்தவாறு என் படைப்பு இருக்க வேண்டும். அதனால் திருமணத்தில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் செலவிட்டாலும் வீட்டிற்குச் சென்று ஓவியத்தை மேலும் மெருகூட்டி, அதன்பின்னரே மணமக்களிடம் ஒப்படைப்பேன்,” என்று கூறினார் கஸ்தூரி.
இந்தியத் திருமணங்களை ஓவியம் ஆக்கும் கஸ்தூரி, பிற இன திருமணங்களிலும், வெளிநாட்டு திருமணங்களிலும் தனது கைத்திறனை வெளிப்படுத்த விரும்புகிறார்.
கலையார்வம் கஸ்தூரிக்கு உயர்நிலைப் பள்ளி பருவத்திலேயே தொடங்கிய ஒன்று. முன்னர் பென்சிலால் உருவப்படம் வரைந்து வந்தார்.
“அப்போது, என் படங்களை சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றுவேன். பலர் என்னிடம் அவர்களுக்கு வரைந்து தருமாறு கேட்பார்கள். வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தவாறு வரைந்து வந்தேன்,” என்றார் கஸ்தூரி.
தமது பெற்றோரும் கலையார்வம் மிகுந்தவர்கள் என்ற கஸ்தூரி, தமது தாயார் மருதாணி இடுபவர் என்றார். தமது குடும்பத்தின் கலை ஆர்வம், தமது கலை ஈடுபாடு வளரக் காரணமாக அமைந்தது என்றார் அவர்.

