தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைகடத்தி உற்பத்தித் துறையில் சாதிக்க விரும்பும் லாவண்யா

2 mins read
ce519a54-9448-4ffa-814a-dc499bd1ff83
கண்காட்சி சாவடியில் சி. லாவண்யா, 27. - படம்: GlobalFoundries

தொழில்நுட்ப ஆற்றலில் சுழலும் இன்றைய நவீன உலகுக்கு அதிகம் தேவைப்படும் குறைகடத்தி உற்பத்தித் (semiconductor manufacturing) துறையில் 27 வயது சி.லாவண்யா தமக்கென ஓர் இடத்தை அமைத்துக்கொண்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்ற லாவண்யா, ‘குளோபல்ஃபவுண்ட்ரிஸ்’ (GlobalFoundries) நிறுவனத்தில் உற்பத்தித் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக மூத்த ‘லித்தோகிராஃபி’ செயல்முறைப் பொறியாளராக (senior lithography process engineer) பணியாற்றி வருகிறார்.

“உயர்நிலைப் பள்ளியில் எலுமிச்சம்பழங்களைப் பயன்படுத்தி மின்விளக்கை எரிய வைக்கும் படம் ஒன்று எங்களது வேதியியல் பாடப் புத்தக அட்டையில் இருக்கும். அது என்னை மிகவும் கவர்ந்ததால், அதை ஆராய்ச்சி செய்து பார்க்க ஆசைப்பட்டேன்,” என்றார் லாவண்யா. இந்த ஆராய்ச்சியே பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் அத்துறையில் பணிபுரியவும் முக்கிய அடித்தளமாக அமைந்தது என்றார் அவர்.

இன்று, லித்தோகிராஃபி (lithography) எனப்படும் ஒரு செயல்பாட்டின் மூலம் மில்லியன் வெள்ளி இயந்திரங்களைப் பயன்படுத்தி நுண்ணிய வடிவங்களைச் சிலிக்கான் செதில்களில் அச்சிடுகிறார். இவை, கைப்பேசிகள் முதல் வாகனங்கள் வரை அனைத்திற்கும் ஆற்றல் வழங்கும் கருவியாகச் செயல்படுகின்றன.

அண்மையில் குளோபல்ஃபவுண்டரிஸ் நிறுவனத்தின் மின்னிலக்க உற்பத்திக் குழுவிற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒரு செயல்முறைப் பொறியியலாளராக, லாவண்யா பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுடன் சேர்ந்து சிக்கல்களுக்குத் தீர்வுகாணுதல், மேம்படுத்துதல் போன்ற கூறுகளில் பங்களித்து வருகிறார்.

“தினமும் கற்றுக்கொள்வதற்கு ஏதேனும் ஒன்று புதிதாக உள்ளது,” என்றார் அவர்.

‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் (STEM) இளம் பெண்களை வழிநடத்துவதிலும் அவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்க ஸ்டெம் அறிமுக நிகழ்ச்சிகளில் பங்குபெற்று உதவுவதிலும் லாவண்யா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

இத்துறைகளில் பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்குதல், ஒருங்கிணைப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் லாவண்யா, 2023ம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் குறைகடத்தி தொழில்துறைச் சங்கத்தின் மகளிர் கருத்தரங்கில் (Singapore Semiconductor Industry Association Women’s Forum) உரையாற்றிய ஆக இளம் பேச்சாளர்களில் ஒருவராவார்.

“பன்முகத்தன்மையே பலம்,” என்று கூறிய அவர், சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் திறமைசாலிகளை உருவாக்குவதற்கு மூத்த ஊழியர்களின் வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் குறைகடத்தி தொழில்துறைச் சங்கத்தின் இளையர் வழிகாட்டல் திட்டத்தில் (Singapore Semiconductor Industry Association’s Youth Mentoring Program) வழிகாட்டியாகவும் லாவண்யா செயல்படுகிறார். எதிர்காலத்தில் தாம் வழிகாட்டும் இளையர்களில் பலர் தம்முடன் ஒரே வேலையிடத்தில் சக ஊழியர்களாக சேர வேண்டும் என்று தமது விருப்பத்தையும் தெரிவித்தார்.

“எந்தவொரு தொழிலிலும் பணிபுரிய வேண்டுமென்றாலும் அதில் பேரார்வம் கொள்ளவேண்டும். எனவே தன்னம்பிக்கையுடன், உங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து துணிச்சலுடன் செயல்படுங்கள்,” என்று எதிர்காலத்தில் பொறியியல் துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எந்தவொரு தொழிலிலும் பணிபுரிய வேண்டுமென்றாலும் அதில் பேரார்வம் கொள்ளவேண்டும். எனவே தன்னம்பிக்கையுடன், நமக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.
சி. லாவண்யா, 27
குறிப்புச் சொற்கள்