தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களுக்கு அதிகாரமளித்தல்: தேவையை உணர்த்த நடனம்

3 mins read
fbb9b981-2ae6-44a9-9cd1-bc83ba946651
இறுதி ஆண்டு சட்டத்துறை மாணவியான சுஜா குணசேகரன் (நடுவில்), 23, தான் முதன்முறையாகத் தயாரித்த நடன நிகழ்ச்சியை அண்மையில் படைத்தார். - படம்: க்ளெண்டா வீ

யேல்-என்யுஎஸ் கல்லூரியில் சட்டம் பயிலும் 23 வயது சுஜா குணசேகரன் இயக்கி, வடிவமைத்து, தயாரித்து வழங்கிய ‘டு பி சீன்’ (To Be Seen) என்ற 30 நிமிட நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது.

இறுதியாண்டு மாணவியான சுஜா, அந்த நிகழ்ச்சியில் அவர் நடனமும் ஆடியுள்ளார்.

படிப்பு, வேலைப்பயிற்சிகளுக்கிடையே கலை ஈடுபாட்டிலும் அக்கறை செலுத்தி வரும் சுஜாவின் நடனம், பெண்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதன் அவசியத்தையும் அது தொடர்பான பல அம்சங்களையும் ஆராய்ந்தது.

யேல்-என்யுஎஸ் கல்லூரியின் ‘பிளாக்பாக்ஸ்’ அரங்கில் சனிக்கிழமை (மார்ச் 15) மாலை 6 மணிக்கும் இரவு 8 மணிக்கும் இரு முறை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல இனங்களைச் சேர்ந்த 18 பெண்கள் நடனமாடினர்.

“பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது ஒற்றைப் பிரதிநிதித்துவமாக இருக்காது. ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். அந்த வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது முக்கியம். அதை நடனம்மூலம் வெளிப்படுத்தினோம்,” என்று சுஜா கூறினார்.

பரதநாட்டியம், குத்து, ‘ஹிப் ஹாப்’, சமகால நடனம், ‘டான்ஸ்ஹால்’, ‘ஆப்ரோபீட்ஸ்’, ‘ஸ்ட்ரீட் ஜாஸ்’ போன்ற பல்வேறு நடன வடிவங்களை ஒன்றிணைத்த அந்தப் படைப்பு, சுஜாவின் நீண்ட கால நடன பயணத்தைப் பிரதிபலித்தது.

நிகழ்ச்சியில் இடம்பெற்ற குத்து நடன அங்கம்.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற குத்து நடன அங்கம். - படம்: க்ளெண்டா வீ

நான்கு வயதில் பரதநாட்டியம் பயிலத் தொடங்கிய சுஜா, பின்னர் ‘யூடியூப்’ ஊடகத்தின் வழியாக உலகளாவிய நடனக் கலைஞர்கள், குழுக்களின் காணொளிகளைப் பார்த்து மற்ற நடன வடிவங்களையும் கற்றார்.

“13 வயதிலிருந்தே நடன நிகழ்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்தேன்,” என்ற அவர், இந்த நடன நிகழ்ச்சி தனது தெற்காசிய பாரம்பரியத்தை நவீன நடன பாணிகளுடன் இணைத்து அந்தக் கனவை நனவாக்கியதாகவும் சொன்னார்.

நடன நிகழ்ச்சியில் ஒன்றாக நடனமாடிய பல்லினத்தைச் சேர்ந்த நடனமணிகள்.
நடன நிகழ்ச்சியில் ஒன்றாக நடனமாடிய பல்லினத்தைச் சேர்ந்த நடனமணிகள். - படம்: க்ளெண்டா வீ

கல்விச் சுமை இருந்தாலும், சுஜா நிகழ்ச்சிக்கான திட்டமிடுதலைப் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கினார்.

நிகழ்ச்சியை மேடையேற்றியது சற்று சவாலாக இருந்தாலும் நண்பர்கள் தன்மேல் கொண்டுள்ள நம்பிக்கையும் அவர்களின் உதவியும் நிகழ்ச்சியைச் சிறப்பாக அரங்கேற்ற உதவியதாக சுஜா குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடனக் கலைஞர்களில் பலர் உயர்நிலைப்பள்ளி, தொடக்‌கக்‌கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சுஜாவுடன் படித்த தோழிகள்.

‘டு பி சீன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த 30 நிமிட நடன நிகழ்ச்சியில் பல்லினத்தைச் சேர்ந்த மொத்தம் 18 பெண்கள் ஒன்றிணைந்தனர்.
‘டு பி சீன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த 30 நிமிட நடன நிகழ்ச்சியில் பல்லினத்தைச் சேர்ந்த மொத்தம் 18 பெண்கள் ஒன்றிணைந்தனர். - படம்: க்ளெண்டா வீ

அவர்களில் சிலர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருப்பவர்கள். தனது தனிப்பட்ட வளர்ச்சியைக் கண்டு வரும் அவர்களுடன் இணைந்து நிகழ்ச்சி படைக்க முடிந்தது அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது என்றார் சுஜா.

நடனக் கலைஞர்கள் அனைவரும் வெவ்வேறு நடன பாணிகளில் திறன் பெற்றவர்களாக இருந்தாலும், புதிய நடன வடிவங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு ஒரு கதையை நடனத்தின்வழி படைத்தார்கள்.

இவ்வாண்டு மூடப்பட உள்ள யேல்-என்யுஎஸ்ஸின் இரண்டாவது இறுதி நடன நிகழ்ச்சி ‘டு பி சீன்’.

“பரபரப்பான வாழ்க்கையில், பெண்களின் போராட்டங்களைப் பெரும்பாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இச்சூழலில் இந்த நிகழ்ச்சி, தற்கால உலகில் ஒரு பெண்ணாக வாழ்வதன் உயர்வையும் சிரமங்களையும் ஓரளவு பார்வையாளர்களுக்கு உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்,” என்றார் சுஜா.

நடன நிகழ்ச்சியை வெற்றிகரமாக மேடையேற்றினார் சுஜா.
நடன நிகழ்ச்சியை வெற்றிகரமாக மேடையேற்றினார் சுஜா. - படம்: க்ளெண்டா வீ

சுஜாவுக்கு நடனம் என்பது கனவுகள், கடின உழைப்பு, சுதந்திரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் களம். அக்களம், இந்திய மரபுடன் இணைக்கும் ஒரு பாலமாகவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாகவும் இருந்து வருகிறது.

“இது வெறும் தொடக்கம்தான். நடனத்தில் நான் அடைய வேண்டிய இலக்குகள் பல,” என்று பூரிப்புடன் கூறினார் சுஜா.

குறிப்புச் சொற்கள்