சட்டம் பயின்று சமுதாயத்திற்குச் சேவை

சட்டம் பயின்று சமுதாயத்திற்குச் சேவை

2 mins read
7a83513d-1a13-4eaf-adf8-43d2fcaec75a
உள்துறை அமைச்சின் உபகாரச் சம்பளம் பெற்றவர்களில் ஒருவரான முகமது ஃபவாஸ் பின் முகமது ஃபைசல், 20. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை
Google News Preferred Icon

தமது தேசிய சேவையின்போது விமான நிலையக் காவல் பிரிவில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது முகமது ஃபவாஸ் பின் முகமது ஃபைசல் ஒரு காவலராக இருப்பதன் உண்மையை நேரடியாக அறிந்துகொண்டார்.

“பொதுமக்களில் ஒருவர் என்னை அணுகி, தம்முடைய 15 வயது மகள் காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்தார்,” என்று நினைவுகூர்ந்தார் ஃபவாஸ்.

காணாமல் போன இளம்பெண் தொடர்புடைய விவரங்களைச் சேகரித்து, செயல்பாட்டு அறை மற்றும் கண்காணிப்புக் கருவிச் சான்றுகளுடன் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க ஃபவாஸ் முன்வந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு ஃபவாஸ் அவரைக் கண்டுபிடித்தார்.

“தன் மகளைக் கண்டுபிடித்ததற்காக அந்தத் தந்தை என் கையைக் குலுக்கி எனக்கு நன்றி தெரிவித்தார். ஒரு காவல்துறை அதிகாரியின் பொறுப்பு, சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்று, பொதுமக்களுக்கு உதவியாக இருப்பதும்கூட என்பதை அந்தத் தருணம் எனக்கு உணர்த்தியது,” என்றார் 20 வயதான ஃபவாஸ்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி திரு ஃபவாஸ் உட்பட 40 பேருக்கு உள்துறை அமைச்சின் உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு இவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலவுள்ளார்; அதன்பிறகு சிங்கப்பூர்க் காவல்துறையில் பணியாற்றுவார்.

இந்த வாய்ப்பு தமக்கு ஒரு பெரிய தொடக்கமாக அமையும் என்று நம்புவதாகக் கூறினார் ஃபவாஸ்.

காவல்துறைப் பணியும் சட்டமும் அடிப்படையில் ஒன்றே என்பதால் தாம் சட்டப் படிப்பைத் தேர்ந்தெடுத்ததாக இவர் குறிப்பிட்டார்.

“களத்தில் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கும், செயல்முறைகளுக்குப் பின்னால் உள்ள சட்ட அடிப்படையைப் புரிந்துகொள்வதற்கும், அந்த முடிவுகளைப் பொதுமக்களுக்கும் சக அதிகாரிகளுக்கும் தெளிவாக விளக்குவதற்கும் என் பட்டக்கல்வி உதவும்,” என இவர் நம்புகிறார்.

மனிதநேயமும் நிதானமும் ஒரு காவல்துறை அதிகாரியின் சிறந்த குணங்கள் என்பதைத் தமது தேசிய சேவை அனுபவத்திலிருந்து அறிந்துகொண்டதாக ஃபவாஸ் சொன்னார்.

சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, பொறுப்புடனும் விவேகத்துடனும் மனிதநேயத்துடனும் செயல்படும் ஓர் அதிகாரியாக இருக்க இவர் விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்
சட்டம்உபகாரச் சம்பளம்உள்துறை அமைச்சுகாவல்துறை