உள்ளூர்க் காற்பந்தின் உயிர்மூச்சு, ரசிகரின் தொடர் ஆதரவு

3 mins read
15cae392-4920-40d6-8bf1-5378a90b3b77
ஆசியக் கிண்ணப் போட்டிகளில் சிங்கப்பூர் அணியின் சார்பில்  முன்கள ஆட்டக்காரர் இல்ஹன் ஃபாண்டி (இடது), இரண்டாவது கோல் அடித்து நம் நாட்டிற்கு வெற்றியை ஈட்டியுள்ளனர்.   - படம்: சிங்கப்பூர்க் காற்பந்து சங்கம்

ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதிபெற்றுள்ள சிங்கப்பூரின் தேசிய காற்பந்துக் குழு, மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளூர்க் காற்பந்து மீதான கவனத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இடைக்கால பயிற்றுவிப்பாளர் கேவின் லீ, குழுவை இந்த வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளதும் பெரிதும் பாராட்டப்பட்டது. உள்ளூர்ப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் வெற்றிக்கு வழிகாட்டியது, இங்குள்ள வளரும் காற்பந்தாளர்க்கு உற்சாகம் தந்திருக்கும். புதிய விளையாட்டாளர்களது வருகையை இந்த வெற்றி ஊக்குவிக்கலாம்.

ஆயினும், இந்தத் துறையை முன்னேற்றுவதற்கு முக்கிய உருமாற்றங்கள் தேவைப்படுகின்றன. சிங்கப்பூரில் இளையர்க் குழுவுக்கும் நிபுணத்துவ விளையாட்டுக் குழுவுக்கும் இடையே படிநிலைகள் இல்லை. உயரத் தாவ முடியாவிட்டால் வீழ்ச்சி. பிற நாடுகளில், இளம் விளையாட்டாளர்கள் இரண்டாவது அல்லது மூன்றாது நிபுணத்துவப் படிநிலைகளைக் கடந்த பின்னர் முழு நேர விளையாட்டு மன்றங்களுக்காகப் போட்டியிடும் பணியை ஏற்பர்.

சிங்கப்பூர் தேசிய அணி வீரர்கள் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டிக்கு முன் தேசிய கீதத்தைப் பாடினர்.
சிங்கப்பூர் தேசிய அணி வீரர்கள் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டிக்கு முன் தேசிய கீதத்தைப் பாடினர். - படம்: சிங்கப்பூர்க் காற்பந்து சங்கம்

இந்தக் கட்டமைப்பு இன்றி, திறனுள்ள சிங்கப்பூர் விளையட்டாளர்கள் பலர் போட்டித்தன்மையுடன் விளையாடுவதற்கான பயிற்சி வாய்ப்புகளை அதிகம் பெறுவதில்லை.

தாய்லாந்து அல்லது வியட்னாமிய லீக்குகளுடன் ஒப்புநோக்க, சிங்கப்பூரில் 140 பேர் மட்டுமே உள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் மிகவும் தாராளமாகச் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இளம் சிங்கப்பூரர்கள் வெற்றிபெறவேண்டுமானால் தங்களுக்குக் கிட்டும் மிகக் குறைவான வாய்ப்புகளில் கால்வரிசையை நிரூபிக்கவேண்டும்.

போட்டித்தன்மை மிக்க இந்தச் சூழல், ஊக்கத்தைக் குறைக்கலாம். முழுநேர விளையாட்டு ஒப்பந்தம் பெறாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

சம்பளத் தொகை முன்பைவிட தற்போது நன்றாக இருப்பது முன்னேற்றமே. சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, விளம்பர வாய்ப்புகள் என இளையர்கள், முன்னைய காலத்தைக் காட்டிலும் கூடுதல் ஆதரவைப் பெறுகின்றனர்.

இருந்தபோதும் நீண்ட கால நிலைத்தன்மைக்காகக் கூடுதல் தேவை இருக்கிறது. அரசாங்க நிதி மீதான சார்பும் போதிய வர்த்தக மதிப்பின்மையும் இதன் நிலைத்தன்மைக்கு அபாயத்தை விளைவிக்கிறது.

சிங்கப்பூர்க் காற்பந்து சங்கத்தின் தலைவர் ஃபோரஸ்ட் லீ, காற்பந்துக் குழுவுடன் நாடு திரும்பியுள்ளார். 
சிங்கப்பூர்க் காற்பந்து சங்கத்தின் தலைவர் ஃபோரஸ்ட் லீ, காற்பந்துக் குழுவுடன் நாடு திரும்பியுள்ளார்.  - படம்: எஸ்பிஎச்

இந்தச் சவால்களைக் கையாளும் முயற்சியாக சிங்கப்பூர்க் காற்பந்து சங்கம், ‘அன்லீஷ் த ரோர்’ (Unleash the Roar!) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

உள்நாட்டு பயிற்சி மற்றும் சம்பள முறை, ஃஎப்ஏஎஸ் சான்றிதழ் முறை (ஏஏஎஸ்) உள்ளிட்டவற்றின்வழி ‘அன்லீஷ் த ரோர்’ திட்டம், நீடித்த நிலைத்தன்மையை அறிமுகப்படுத்த முனைகிறது.

இளையர்களுக்குப் பயிற்சிகளையும் வாய்ப்புகளையும் தந்து அவர்கள் மீது முதலீடு செய்பவர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்க திட்டம் முற்படுகிறது.

வருவாய், உள்கட்டமைப்பு, துடிப்பான ரசிகர் ஆதரவை நிறுவுவதற்கு நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்தத் திட்டத்தின் நல்ல விளைவுகளை நீட்டிக்க, சமூகப் பங்காளிகள் முன்வந்து இத்துறையை வலுப்படுத்த உதவவேண்டும்.

இளையர்கள் மனதுவைத்தால் இந்த வளங்களை விளையாட்டுத் துறையினருக்குப் பெற்றுத் தரலாம்.

சிண்டா, நற்பணிப் பேரவை உள்ளிட்ட இந்திய இளையர்கள் அமைப்புகளில் விளையாட்டுகள் குறிப்பிடத்தக்க அங்கம் வகித்தாலும் அங்குமே விளையாட்டுகளுக்கும் விளையாட்டாளர்களுக்குமான ஆதரவு மேம்படவேண்டும்.

மும்முரமாக நடைபெற்று வரும் காற்பந்தாட்டம் 
மும்முரமாக நடைபெற்று வரும் காற்பந்தாட்டம்  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இளையர்கள், தங்கள் பங்கிற்கு தாங்கள் விரும்பி விளையாடும் காற்பந்து பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்துவது நல்லது. ஒருவரையொருவர் ஊக்குவித்து உரிய வசதிகளுக்காகக் குரல்கொடுப்பது துணிச்சலான, புரட்சிகரமான செயலாகும்.

நாட்டுக்கு நல்லதைப் பயக்கும் இந்த முயற்சிக்கு காற்பந்து விளையாடாதவர்களும் பங்களிக்கலாம். இளையர்கள் தங்கள் குடியிருப்புகளின் அருகில் விளையாடும் குழுக்களைத் தொடர்பு கொண்டு ஆதரவு தந்து, உள்ளூர்க் காற்பந்தைக் கண்டு ரசிப்பதைப் பொழுதுபோக்காகத் தழுவலாம்.

பள்ளி, சமூக அமைப்பு, ஆலய அமைப்பு என எந்தக் குழுவிலோ துறையிலோ உங்களுக்கிடையே நீங்கள் வேறுபட்டிருந்தாலும், உள்ளூர்க் காற்பந்து விளையாட்டுகளை வாரயிறுதியின்போது காண அனைவரும் திரண்டு மகிழலாம். விளையாட்டுகளை ஒன்றாகப் பார்ப்பதும் சமூக நடவடிக்கை. கூட்டம் திரள்கிறது என்ற உற்சாகம், கூடுதல் விளையாட்டாளர்களையும் வெற்றியாளர்களையும் உருவாக்க இது வகைசெய்யும்.

குறிப்புச் சொற்கள்