விளையாட்டு, கைவினைப்பொருள் சார்ந்த நடவடிக்கைகள்வழி மாணவர்களின் புலன்களை ‘பார்வை’ எனும் நிகழ்ச்சி முழுமையாக ஈடுபடுத்த முனைந்தது.
தமிழ்மொழி விழாவின் அங்கமாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்மொழி மன்றம் நடத்திய இந்நிகழ்ச்சி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் தமிழை விளையாட்டுகள்வழி கொண்டுசேர்க்க முற்பட்டது.
ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ‘பார்வை’ நிகழ்ச்சி, இம்முறை ‘சங்க இலக்கியம்’ எனும் கருப்பொருளுடன் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 30க்கும் மேம்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
விளையாட்டு வழி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை வளர்க்க பல்வேறு அங்கங்கள் இடம் பெற்றன.
முதல் அங்கம், ஐவகைத் திணைகளை மையமாகக் கொண்டிருந்தது.. பாலைத் திணையை ஒட்டி கண்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவர்களின் தமிழை அறிவியலோடு தொடர்புபடுத்தும் அங்கமாக ‘அறிவியல் மேதாவி’ எனும் புதிர்ப் போட்டியும் இடம்பெற்றது.
மேலும், பாரம்பரிய விளையாட்டுகளுக்காக ‘விளையாட்டு சகாப்தம்’, பொம்மை களிமண்ணைக் கொண்டு வாழையிலையில் இருக்கும் உணவு வகைகளைச் செய்யும் ‘ரகசியக் கலைகள்’ எனும் நடவடிக்கை ஆகியவையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
மற்றோர் அங்கத்தில் மாணவர்கள் கரகாட்டம் ஆடிப்பார்த்தனர்.
தொடர்புடைய செய்திகள்
‘மாணவர்களுக்குச் சங்க இலக்கியத்தை விளையாட்டுவழி சொல்லிக் கொடுத்து அவர்களிடத்தில் தமிழார்வத்தைத் தூண்டுவது நோக்கம்,” என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சூசை சகாய அன்னா அண்டோராஜ் தெரிவித்தார்.
“இது போன்ற போட்டிகளில் வருங்காலத் தலைமுறையினரான இக்கால மாணவர்களின் ஈடுபாடு அவசியம்,” என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்மொழி மன்றத்தின் தலைவர் ஸ்ரீசக்தி நெடுஞ்செழியன் கூறினார்.
விளையாட்டு வடிவில் தமிழ் மொழிக்கூறுகளை மேலும் ஆழமாகக் கற்றது மாறுபட்ட அனுபவமாக இருந்ததாக பூன் லே உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கார்த்திக் ஹரிஷ் பிரணாவ், 13, தெரிவித்தார்.
“ஐவகை நிலங்களைப் பற்றியும் கற்றுக்கொண்டேன். தமிழர்களின் வாழ்வியல் முறை பற்றியும் தெரிந்துகொண்டேன்,” என்று ஹரிஷ் கூறினார்.

