சிங்கப்பூரில் 35 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் தங்களின் மூத்த சக ஊழியர்களைவிட வேலையிடங்களில் மிகவும் குறைவான ஈடுபாட்டைக் காட்டுகின்றனர்.
அவர்கள் அன்றாடம் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும் ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘சிங்கப்பூர் வேலையிட அறிக்கை 2026’ குறிப்பிடுகிறது.
வேலையிட ஆலோசனை நிறுவனமான ‘கேலப்’ இவ்வாண்டு கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களிடம் நடத்திய உலகளாவிய பணியிட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.
அந்த ஆய்வின்படி, இளைய ஊழியர்களில் 10 விழுக்காட்டினர் மட்டுமே பணியில் முழு ஈடுபாட்டுடன் உள்ளனர். அதேவேளை, 35 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களிடையே இந்த அளவு 16 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்த சிங்கப்பூர் ஊழியரணியில் வெறும் 14 விழுக்காட்டினர் மட்டுமே ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். இவ்விகிதம் 2019ஆம் ஆண்டிலிருந்து எவ்வித முன்னேற்றமும் இன்றி ஒரே நிலையில் உள்ளது. தென்கிழக்காசிய வட்டாரச் சராசரியான 25 விழுக்காட்டையும் உலகளாவிய சராசரியான 20 விழுக்காட்டையும்விட சிங்கப்பூரின் நிலைமை பின்தங்கியுள்ளது.
பணியில் ஈடுபாடற்ற சிங்கப்பூர் ஊழியர்கள் மற்றவர்களைவிட அன்றாடம் இருமடங்கு அதிக மன அழுத்தத்தையும், மூன்று மடங்கு அதிகக் கோபத்தையும் அனுபவிப்பதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. உலகளாவிய சராசரியைவிட மூன்று மடங்கு அகன்ற தலைமுறை இடைவெளி சிங்கப்பூர் ஊழியர்களிடையே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
வேலையிட ஈடுபாடு குறித்துப் பல்வேறு துறைகளைப் பணிபுரியும் இளையர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
திட்டமிடலும் வழிகாட்டலும்
“பணியில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்போது, முன்னுரிமை அடிப்படையில் பணிகளை வரிசைப்படுத்தி, நாளின் இறுதிக்குள் முடிந்தவரை முடிக்க உழைக்கிறேன்,” என்றார் மனிதவளத் துறையில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றும் 24 வயது சா.ஆர்த்தி. குறைவான இடையூறுகள் கொண்ட அமைதியான சூழல் தமக்குச் சிறந்த ஈடுபாட்டை உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
“அலுவலகத்தின் பொதுவான விதிமுறைகளைவிட, எங்களுடன் நேரடியாகப் பணிபுரியும் மேலாளரின் அணுகுமுறையே எங்களின் ஈடுபாட்டைத் தீர்மானிக்கிறது. வெறும் வேலை வாங்குவது மட்டுமல்லாமல், எங்களின் திறமைகளை வளர்க்கும் ஒரு பயிற்றுநராகவும் மேலாளர் செயல்படும்போது, எங்களின் மன அழுத்தம் குறைந்து, வேலையில் ஈடுபாடும் பல மடங்கு அதிகரிக்கிறது,” என்றார் நிதித்துறையில் பணிபுரியும் 26 வயது ஆயிஷா அலி.
அர்த்தமுள்ள பணிகள்
“அர்த்தமுள்ள பணிகளைச் செய்வதாக உணரும்போது வேலையின் தரமும் அளவும் கூடுகிறது,” என கட்டடக்கலைத் துறையைச் சேர்ந்த 21 வயது அடலின் மரியா ஜேக்கப் தெரிவித்தார். ஈடுபாடு இல்லாத தருணங்களில் நடைமுறைக்கு ஏற்ற மனநிலையைக் கையாண்டு, ‘வேலை என்பது வேலை மட்டுமே’ என்ற கருத்தை மனத்தில் வைத்துகொண்டு செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“நான் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்போது, எனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, நல்ல முடிவுகளை எட்ட உழைப்பேன்,” என்று மாணவர் பராமரிப்பு ஆசிரியரான 23 வயது வனெசா ஜாய்ஸ் கூறினார். தன்னிடம் எதிர்பார்க்கப்படும் பணிகள் தெளிவாக இருக்கும்போதும், சவால்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும்போதும் ஈடுபாடு அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
தலைமுறை இடைவெளி
“மூத்தோர்க்கும் இளையர்களுக்கும் இடையே வேலை-வாழ்க்கைச் சமநிலை (work-life balance) குறித்த பார்வையில் இடைவெளி உள்ளது. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து கடினமாக உழைப்பதைவிட, குறிப்பிட்ட நேரத்திற்குள் புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் உழைப்பதையே நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 28 வயது கார்த்திக் ராஜேந்திரன்.
நவீன உழைப்புமுறையை மூத்த அதிகாரிகள் புரிந்துகொள்ளாதபோது, பணியிடங்களில் இளையர்களின் ஈடுபாடும் ஊக்கமும் இயல்பாக குறைய வாய்ப்புண்டு என்று அவர் சொன்னார்.
மனநலமும் நீக்குப்போக்கும்
“அன்றாட வேலைப்பளு, கடுமையான போட்டி காரணமாக ஏற்படும் மன அழுத்தம் இளையர்களைப் பெரிதும் பாதிக்கிறது. ஊழியர்களின் மனநலத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், அதற்கு உண்மையான முன்னுரிமை அளித்து, நீக்குப்போக்கான வேலை நேரத்தை வழங்கும் நிறுவனங்களில் மட்டுமே எங்களால் தொய்வின்றி முழு ஈடுபாட்டுடன் நீடிக்க முடியும்,” என்று சந்தைப்படுத்தல் துறையில் பணிபுரியும் 32 வயது ரம்யா கோபால் கூறினார்.

