உயர்தரமான பிரெஞ்சு உணவுக் கடையை கேண்டன்மண்ட் வட்டாரத்திலுள்ள ஓர் அக்கம்பக்க உணவங்காடியில் நடத்துகிறார் 33 வயது விஸ்மன் செல்வம்.
‘ஸ்வாக் & சிஸ்ஸல்’ (swag and sizzle) உணவுக்கடை பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் கடையில் விற்கப்படுவது விலையுயர்ந்த உணவு வகையாகக் கருதப்படும் பிரெஞ்சு பிஸ்ட்ரோ உணவு வகைகள்.
பிரெஞ்சு உணவகங்களில் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த உணவாகக் கருதப்படும் ‘பிஸ்ட்ரோ’ வகை உணவை கட்டுப்படியாகும் விலையில் விற்கிறார் விஸ்மன்.
பிரஞ்சு பிஸ்ட்ரோ உணவு வகைகளைச் சமைத்து வரும் விஸ்மன், வேரா சியோன் என்ற தம் நண்பருடன் கடையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கினார்.
மூன்று பிள்ளைகளில் மூத்தவரான விஸ்மன் எளிய உணவுகளைச் சிறுவயதிலிருந்து சமைத்துப் பழகியவர். பெற்றோரின் ஊக்குவிப்பால் சமையல் துறையில் நுழைந்தார் விஸ்மன்.
அதையடுத்து சன்ரைஸ் குளோபல் செஃப் கழகத்தின், ‘லே என்ரகோட்’ (le entrecote) என்ற ஐந்து நட்சத்திர உணவகத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றி தலைமைச் சமையல் வல்லுநராக விஸ்மன் உயர்ந்தார்.
இறைச்சிகளை பக்குவத்துடன் சமைப்பது, ‘லே என்ரகோட்’ கலையுடன் பிரெஞ்சு ஸ்டேக், கோல்டன் ஃப்ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளைத் தயாரிப்பது என பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தார் விஸ்மன்.
விலையுயர்ந்த பிரெஞ்சு உணவைத் தரம் குன்றாமல், அதேநேரத்தில் அனைவருக்கும் கட்டுப்படியான விலையில் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற விருப்பம் விஸ்மானுக்கு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“அந்த எண்ணத்தில் உதித்ததுதான் ‘ஸ்வாக் & சிஸ்ஸல்’. உயர்தர பிரெஞ்சு பிஸ்ட்ரோவிலிருந்து ஒருவர் எதிர்பார்க்கும் உணவை அதே நுணுக்கத்துடன் சமைக்கிறேன்,” என்றார் விஸ்மன்.
கடை உரிமையாளராக முதல்முறை கால் பதிப்போருக்கான தேசிய சுற்றுப்புற அமைப்பின் ஆதரவுத் திட்டத்தில் சேர்ந்து வாடகை உள்ளிட்ட செலவுகளை விஸ்மன் குறைக்க முற்படுகிறார்.
சவால்மிக்கச் சூழலிலும் நிலைகுலையாமல் தம் உணவு வர்த்தகத்தை மேன்மேலும் வளர்த்து துடிப்புமிக்க இந்தத் துறையில் முத்திரை பதிக்க விரும்புகிறார் விஸ்மான்.

