இளையரின் பார்வையில் உளவியல் முதலுதவி

மனநலப் பிரச்சினைக்குத் தீர்வுகாண கூட்டு முயற்சி தேவை என்கிறார் ஸ்டீபன் மாணிக்கம்

இளையரின் பார்வையில் உளவியல் முதலுதவி

3 mins read
183ad97b-46bc-482d-b970-8a79b2f6c133
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், இயந்திரப் பொறியியல் துறை, இளநிலை நான்காம் ஆண்டு மாணவரான ஸ்டீபன், உளவியல் முதலுதவி பயிற்சியில் ஈடுபட்டார். - படம்: வெங்கடேசன் வித்யா லட்சுமி

மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்கள், இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவு தேடுபவர்கள் போன்றவர்களுக்கு உளவியல் முதலுதவி வழங்கி வருகிறார் இளையர் ஸ்டீபன் மாணிக்கம். மனநலத்தைக் காக்க கருணையும் கனிவான அணுகுமுறையுமே அடிப்படையான தேவை என நம்பும் இவர், மனநலப் பிரச்சினைகளை அனுபவித்தவர். அதன் பாதிப்புகளையும் விளைவுகளை உணர்ந்தவர்.

எதிர்கொண்ட மனநலப் பிரச்சினைகள், அவரை பாதித்த மனிதர்கள் எல்லாம் 23 வயது ஸ்டீபன் மாணிக்கம் மனநலன் மீது ஆர்வம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணங்கள்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு), இயந்திரப் பொறியியல் துறையில் பயிலும் மாணவர் ஸ்டீபன் உளவியல் முதலுதவி பயிற்சியை மேற்கொண்டார்.

தாயின் உடல்நிலை பாதிப்பு, பலதுறைத் தொழிற்கல்லூரியில் மதிப்பெண்கள் குறைந்தபோது எழுந்த பதற்றம் போன்ற காரணங்கள் ஸ்டீபனுக்கு மன நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தியன.

17 வயதாக இருந்தபோது மகளிர் இல்லத்துக்குச் (Women’s Shelter) சென்ற ஸ்டீபன், அங்கு ஒரு பெண் அமைதியாகக் கண்ணீர் வடிப்பதைப் பார்த்தார்.

அருகில் சென்றவுடன், அப்பெண் அதனை மறைத்து இயல்பாகப் பேசத் தொடங்கியதும் மனநலப் பிரச்சினையை யாரும் வெளிக்காட்டுவதில்லை என்பதையும் மனத்துக்குள்ளே வைத்துப் புழுங்குகிறார்கள் என்பதையும் ஸ்டீபன் உணர்ந்தார்.

அச்சம்பவம், இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ளும் எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது.

உளவியல் முதலுதவி பயிற்சியைத் தொடர்ந்து, அதனைக் குறித்து நண்பர்களுடன் பகிர்ந்த ஸ்டீபன் மாணிக்கம் (இடது).
உளவியல் முதலுதவி பயிற்சியைத் தொடர்ந்து, அதனைக் குறித்து நண்பர்களுடன் பகிர்ந்த ஸ்டீபன் மாணிக்கம் (இடது). - படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ‘இன்ஸ்டகிராம்’ பக்கம்

வியட்னாமில் தொண்டூழியம் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது, சிங்கப்பூரில் தரமான வாழ்க்கை நிலை இருந்தாலும் அங்கு பரவலாகக் காணப்படும் மகிழ்ச்சி இங்கு குறைவாக உள்ளது என்பது ஸ்டீபனைச் சிந்திக்க வைத்தது. மனநல ஆதரவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை அது வலுப்படுத்தியது.

கருணையே மனநல ஆதரவுக்கு அடிப்படை என்ற ஸ்டீபன், உளவியல் முதலுதவி குறித்தும், தாம் மேற்கொண்ட பயிற்சி குறித்தும் பேசினார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆக அதிகமானோர்க்கு உளவியல் முதலுதவிப் பயிற்சி அளித்து தேசிய அளவில் சாதனை படைத்ததை அங்கீகரிக்கும் விழா.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆக அதிகமானோர்க்கு உளவியல் முதலுதவிப் பயிற்சி அளித்து தேசிய அளவில் சாதனை படைத்ததை அங்கீகரிக்கும் விழா. - படம்: என்டியு

“ஒருவர் இக்கட்டான சூழலில் இருக்கும்போது, அவரது மனநலத்தைப் பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சியே உளவியல் முதலுதவி. அதில் பயிற்சிபெற்ற ஒருவரிடம், பாதிக்கப்பட்டவர் தாம் எதிர்நோக்கும் சிக்கல், வருத்தம், மனஅழுத்தம் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும்போது, மனத்தில் இருக்கும் சுமையை இறக்கி வைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது,” என்றார் அவர்.

“எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் எனக்கூறி என்னிடம் உதவி நாடிய ஒருவர், போதைப் பொருள் உட்கொண்டதை ஊகித்தேன். அதை வேறுவிதமாகக் கையாண்டிருக்கலாம் என்பதைப் பயிற்சிக்குப் பின் உணர்ந்தேன்,” என்றார் ஸ்டீபன்.

ஒருவர் தமது பிரச்சினைகளைப் பற்றி பகிரும்போது, ஒரு சில தகவல்களைப் பகிராமல் விடுவது வழக்கமானது. அவரை எடைபோடுவது, பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்குவது உள்ளிட்டவற்றைவிட அவருக்கு ஆதரவாக இருப்பதே அவசியம் என்பது இவரது கருத்து.

போட்டியில் ஆறுதல் பரிசை தட்டிச் சென்ற ஸ்டீபன் மாணிக்கம் குழு.
போட்டியில் ஆறுதல் பரிசை தட்டிச் சென்ற ஸ்டீபன் மாணிக்கம் குழு. - படம்: நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

உளவியல் முதலுதவிப் பயிற்சி

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு மாணவர்கள், ஊழியர்கள் உட்பட 232 பேருக்கு உளவியல் முதலுதவி வழிகாட்டுதல் பயிற்சி வழங்கி, சாதனை படைத்தது. ‘Empathy One’ எனும் செயலியின் மூலம், அந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.

பாவனை சம்பவங்களில் பங்கேற்றவர்கள், தங்களுடைய பிரச்சினைகளைப் பகிர, அதற்கு பங்கேற்பாளர்கள் வழங்கும் பதில்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.

உலக மனநல தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட அச்சாதனை நிகழ்வில் ஸ்டீபனும் பங்கேற்றார்.

“அந்தப் பயிற்சியில், பலவிதமான பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது என்று கற்றுக்கொண்டேன்,” என்றார் ஸ்டீபன்.

தம் நண்பரோடு பள்ளியின் மனநல இயக்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்டீபன் மாணிக்கம்.
தம் நண்பரோடு பள்ளியின் மனநல இயக்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்டீபன் மாணிக்கம். - படம்: ஸ்டீபன் மாணிக்கம்

அப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள், ‘Be a PFA Champion’ போட்டியின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினர். ஸ்டீபனும் அவரது அணியும் இறுதிச் சுற்றுவரை சென்று, ஆறுதல் பரிசை வென்றனர்.

இதனைப் பயிற்சியோடு நிறுத்திவிடாமல் அன்றாட வாழ்வில் சக மாணவர்கள், இளையர்களுக்கு உதவுவதாகச் சொன்ன ஸ்டீபன், இதனைத் தொடர்ந்து செய்ய ஆர்வமிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒருவர் மனஅழுத்தத்தில் இருப்பதை கவனித்தால்…

ஸ்டீபன் வழங்கும் எளிய வழிகாட்டுதல்கள்:

  1. ஒருவர் தனிப்பட்ட முறையில் அவர் சார்ந்த வி‌ஷயங்களைப் பகிர்வது இருவருக்குள்ளேயே இருக்கும் என்றும், அடுத்தவர் உதவி நாட வேண்டிய கட்டாயம் இருந்தால் அன்றி, பிறருக்குத் தெரியாதென்றும் உத்தரவாதம் வழங்க வேண்டும்.
  2. அழுத்தத்தில் இருப்பவர் கூறுவதைக் கவனமாகக் கேட்பதே முக்கியம்; ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
  3. ஆறுதல் அளிப்பதற்கு முன்னதாகவே, தீர்வுகளை வழங்கக் கூடாது.
  4. முழு விவரம் தெரியாதபோது, அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. 
  5. தம்மைப் பாதிக்கக்கூடிய செயலில் ஈடுபடப்போகிறார் என்று தெரிந்தால், அவர் ஒரு பாரம் அல்ல என்று கூறி, மனத்திற்கு ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவது முக்கியம்.
  6. நிபுணர் உதவியை நாடும்படி அறிவுறுத்துவது முக்கியம்.

“இவற்றைக் காட்டிலும், அனுதாபம் இருப்பதே ஒருவருக்கு உதவி செய்வதற்கு, மிக அவசியமானது. மற்றவர்களின் நிலைமையில் உங்களைக் கற்பனை செய்துப்பாருங்கள். அப்பொழுது, உங்களால் அவர்களை நன்கு புரிந்துகொள்ள இயலும், மற்ற திறன்கள் எல்லாம் இயல்பாகவே வந்துவிடும்,” என்றார் ஸ்டீபன்.

குறிப்புச் சொற்கள்