பேசப்படாத உண்மைகளைப் பேசும் ‘மணிமேகலை’ நாடகம்

பேசப்படாத உண்மைகளைப் பேசும் ‘மணிமேகலை’ நாடகம்

படம்: ஜெசிகா ஜீவா

31 Aug 2025 - 5:51 am

2 mins read

தமிழா அமைப்பின் மேடை நாடகமான ‘மணிமேகலை - அழியாத சுவடுகள்’, ஐம்பெரும்காப்பியங்களில் அடங்கும் ‘மணிமேகலை’யின் மறுவடிவமாக ஆகஸ்ட் 15, 16ஆம் தேதிகளில் மேடையேறியது. ஆடல், பாடல், நடிப்பு என பல கூறுகள் நிறைந்த ‘மணிமேகலை’ நாடகம் குட்மன் கலை மையத்தில் நடைபெற்றது.

பெற்றோரின் பிரிவால் இளம் வயதிலேயே பெரும் தாக்கமடைந்த பெண்ணாக, நவீன உலகத்தில் வளரும்போது அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அதனால் நேரிடும் பாதிப்புகளையும் மையக் கருவாக வைத்து தமிழாவின் ‘மணிமேகலை - அழியாத சுவடுகள்’ நாடகம் மேடை ஏறியது.

இதை வெளிப்படுத்தும் விதமாக மேடையில் ‘மணிமேகலை’ கதாபாத்திரமாகவே உருமாறினார், இந்நாடகத்தின் கதாநாயகியான சாரு யுவராஜ், 19.

“இன்றைய இளையர்கள் எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொண்டாலும், தன்னம்பிக்கையோடும் மீள்திறனோடும் அவற்றை கையாளவேண்டும் என்ற முக்கியக் கருத்தை இந்நாடகத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குக் கடத்த முயன்றோம். அதுவே எங்கள் முக்கிய நோக்கம்,” என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக அரங்கிற்குச் செல்லும் நுழைவாயில், மக்களை ஈடுபடுத்தும் வகையில் ‘மணிமேகலை’யின் அறை ஒன்றை ‘தமிழா’ அமைப்பின் உறுப்பினர்கள் வடிவமைத்திருந்தனர்.

அதில் ‘மணிமேகலை’ கதாபாத்திரத்தின் வாழ்வில் அவள் உபயோகித்த முக்கியப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பொருள்களுள் ‘மணிமேகலை’யின் நடனத்திற்கு உயிர்கொடுத்த சலங்கை, அவளுக்குப் பிடித்த பொம்மைகள், ஆபரணங்கள் ஆகியவை அடங்கும்.

“சமுதாயத்தில் பேசப்படாத நிலையற்ற சூழல்களை நாடகம்வழி மக்களிடம் கொண்டுசேர்க்க முற்பட்டோம். இது, இளையர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.” என்றார் நாடக இயக்குநர் ஹரி நாராயணன்.

“ஐம்பெரும் காப்பியத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களான கோவலன், மாதவி, உதயகுமரன், ‘மணிமேகலை’ ஆகியோரின் குணாதிசயங்களைக் கருத்தில்கொண்டு, அவர்களின் ஆளுமையை நயம்பட வெளிப்படுத்தும் விதத்தில் இந்த நாடகத்தின் கதையை எழுதினோம்,” என்றார் இந்நாடகத்திற்கு திரைக்கதை எழுதிய கிருஷ்மிதா ஷிவ்ராம்.

குறிப்புச் சொற்கள்