தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்துறையில் புத்தாக்கத் தீர்வுகள்

3 mins read
சிங்கப்பூர் கடல்துறை வாரம் மார்ச் 24 முதல் 28ஆம் தேதிவரை சன்டெக் சிட்டி மாநாட்டு நிலையத்தில் நடைபெற்றது. அதில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் சிலரின் இறுதியாண்டுத் திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
c91f9f3a-efac-407b-9d56-b2e6d499c0ee
ஆளில்லா வானூர்திமூலம் கடலில் விழுந்தோரைக் காப்பாற்றுவது, ஆளில்லா நீரூர்தி மூலம் ஆழமான கடலை ஆராய்வது அகிய இரு இறுதியாண்டுத் திட்டங்களைப் படைத்த மாணவர்கள். அவர்களில் முருகன் சிவகுமார் (வலமிருந்து மூன்றாவது), குவேந்திரா நாயர் (இட்மிருந்து மூன்றாவது). - படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

சிறுவயதில் அன்புக்குரியவர் கடலில் விழுந்தபோது நீச்சல் தெரியாமல் சிரமப்பட்டது முருகன் சிவகுமாரின் மனத்தில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது.

“அப்போது அவரைக் காப்பாற்ற முடியாமல் தவித்தேன். அதுபோன்ற சூழல் யாருக்கும் வரக்கூடாது,” என்ற முருகனின் இறுதியாண்டு ஒப்படைப்பு கடலில் விழுந்தவரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை மையமாகக்கொண்டு அமைந்தது.

தவறுதலாக ஒருவர் கடலிலோ வேறு நீர்நிலைகளிலோ விழுந்துவிட்டால் ஆளில்லா வானூர்திகள் மூலம் அவர் இருக்குமிடத்திற்கு மிதவையைக் கொண்டுசெல்வதே முருகனுடைய குழுவின் ஒப்படைப்பு.

கடலில் விழுந்தவரைக் காப்பாற்றும் நோக்கில் ஆளில்லா வானூர்தியை இயக்கும் குழு உறுப்பினர் குவேந்திரா நாயர்.
கடலில் விழுந்தவரைக் காப்பாற்றும் நோக்கில் ஆளில்லா வானூர்தியை இயக்கும் குழு உறுப்பினர் குவேந்திரா நாயர். - படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

உலகளவில் கடலில் விழும் அசம்பாவிதங்கள் அவ்வப்போது நேர்வதே முருகனின் ஒப்படைப்புக்கு மற்றொரு காரணம்.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 19 பேர் சொகுசுக் கப்பல்களிலிருந்து கடலில் தவறுதலாக விழுந்தனர். அப்படி விழுந்தவர்களில் கிட்டத்தட்ட 72 விழுக்காட்டினரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக அனைத்துலக சொகுசுக் கப்பல் சங்கத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

“மீட்புப் படகுகள் வருவதற்குள் நீருக்குள் விழுந்தவர்கள் பெரும்பாலும் காணாமல்போய் விடுகிறார்கள் அல்லது இறந்து விடுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற விரைவான ஓர் உத்தி தேவைப்படுகிறது,” என்று தமது ஒப்படைப்பின் அடிப்படையை முருகன் எடுத்துச்சொன்னார்.

“கடலில் விழுந்தவர் அணிந்திருக்கும் உயிர்க்காப்புச் சட்டை (Lifejacket) விழுந்தவர் சரியாக எங்கிருக்கிறார் என்ற தகவலைக் காட்டும். அதையடுத்து ஆளில்லா வானூர்தி உயிர்மிதவையை விழுந்தவர் தத்தளிக்கும் இடத்திற்குக் கொண்டு செல்லும்,” என்றார் குழு உறுப்பினர் குவேந்திரா நாயர், 20.

மீட்புப் படகுகள் வருவதற்குள் நீருக்குள் விழுந்தவர்கள் பெரும்பாலும் காணாமற்போய்விடுகிறார்கள் அல்லது இறந்துவிடுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற விரைவான ஓர் உத்தி தேவைப்படுகிறது.
முருகன் சிவகுமார், 24

சிறிய மிதவையை முப்பரிமாண முறையில் அச்சிட்ட குழுவினர் அதைச் சோதனை செய்து வருகின்றனர். நாளடைவில் குரல் எச்சரிக்கைக் கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, கூடுதல் மின்கல சக்தி போன்றவற்றை அதில் அவர்கள் சேர்க்கவுள்ளனர்.

சிங்கப்பூர்க் கடற்படையில் முழுநேர வீரராகச் சேரவுள்ள முருகன், தமது ஒப்படைப்பை கடற்படையிடமும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

கடல்துறையில் பெண்களுக்கு சமத்துவம்

கடல் துறையில் பெண்களுக்குச் சமத்துவம் நாடும் கணேசன் அஞ்சனா (வலம்) தம் குழுவினருடன்.
கடல் துறையில் பெண்களுக்குச் சமத்துவம் நாடும் கணேசன் அஞ்சனா (வலம்) தம் குழுவினருடன். - படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

அனைத்துலக அளவில் கடல் மாலுமிகளில் (seafarers) ஏறக்குறைய 2 விழுக்காட்டினரே பெண்கள். ஒட்டுமொத்தக் கடல்துறையில் 29 விழுக்காட்டினரே பெண்கள்.

இதை அனைத்துலகக் கடல்துறை அமைப்பும் பெண்களின் அனைத்துலகக் கடல்துறை, வர்த்தகச் சங்கமும் 2022ல் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையை மாற்ற விரும்புகிறார் கணேசன் அஞ்சனா, 19.

“கடலில் நெடுநாள் பயணம் செய்தால் பெண்களால் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களின் மனநலமும் பாதிப்படைகிறது,” என்றார் அஞ்சனா.

இதற்குத் தீர்வளிக்க வேலையிடங்களுக்கான பன்முகத்தன்மை, சமபங்கு, அனைவரையும் உள்ளடக்குதல் (Diversity, Equity, Inclusion) நெறிமுறைகளையொட்டி அவரது குழு பல ஆலோசனைகளை வழங்கியது.

கப்பலில் ஒரு பெண்ணை மட்டும் தனியாக அனுப்பாமல் இரு பெண்களைச் சேர்த்து அனுப்பலாம் என பரிந்துரைத்தது அஞ்சனாவின் குழு.

“இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு அதிகரிக்கும். கப்பலில் தொலைக்காட்சி போன்ற இளைப்பாறும் வசதிகள் இருந்தாலும் மனநலம் மேம்படும்,” என்றார் அஞ்சனா.

வரும் 2030க்குள் வேலையிடத்தில் முன்னணிப் பொறுப்புகள் வகிப்போரில் 40 விழுக்காட்டினர் பெண்களாக இருக்கவேண்டும் என்பதை ‘விஸ்தா நோர்வே’ நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளதை முன்னுதாரணமாகச் சுட்டிய அஞ்சனா, அதுபோல் பல நிறுவனங்களும் முன்வரவேண்டும் என்றார்.

“நான் கடல்துறையில் வேலைக்குச் சேரும்போது முன்மாதிரிகளாக எனக்கு வழிகாட்டப் பல பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும்,” என்று கூறினார் அஞ்சனா.

கண்ணாரக் காணமுடியாத ஆழத்தையும் கண்முன் நிறுத்தும் கருவி

ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு உதவும் நோக்கில் மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா நீரூர்தியை இயக்கும் மாணவர் குவேந்திரா நாயர்.
ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு உதவும் நோக்கில் மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா நீரூர்தியை இயக்கும் மாணவர் குவேந்திரா நாயர். - படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

கடலின் ஆழத்தில் கடல்துறை ஆராய்ச்சிக்கு உதவும் பல வி‌‌ஷயங்கள் பொதிந்துள்ளன. ஆனால் மனிதரால் தமக்கிருக்கும் உயிர்வாயு அளவுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கே பாதுகாப்பாகச் செல்லமுடிகிறது. சில நீர்நிலைகளில் ஆபத்துகளும் நிலவுகின்றன.

மனிதர் காணும் கடலடி உலகத்தையும் தாண்டி உள்ளவற்றைக் கண்டறிய மாணவர்கள் ஓர் ஆளில்லா நீரூர்தியை உருவாக்கியுள்ளனர். அதில் இருட்டில் காணும் புகைப்படக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நீரூர்தியைக் கூடுதல் ஆழத்தில் செலுத்தவும் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தவும் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்