ஜெயாவின் கைமணத்தில் ‘மசாலா மறுமலர்ச்சி’

தாஷாயனி சுகேந்திரன்

ஜெயாவின் கைமணத்தில் ‘மசாலா மறுமலர்ச்சி’

2 mins read
ffee65d4-3c73-49ab-935c-9019c10c4e09
மசாலா தூளைப் பொட்டலமிடும் ‘ஜெயா ஸ்பைசஸ்’ கடை உரிமையாளர் ஜெயசீலன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அன்றாட சமையல் பொருள்களை வாங்கப் பேரங்காடிகளுக்கு மக்கள் பெருவாரியாகச் சென்றாலும், தாளிப்புப் பொருளின் சுவை நுட்பங்களை அறிபவர்கள், ஈரச்சந்தைக் கடைக்காரர்களை இன்றளவும் நாடுகின்றனர்.

பழஞ்சுவைக்காக நாடப்படும் மசாலா தூள் கடைக்காரர் ஜெயசீலன் தயாரிக்கும் தூள் கலவைகள் புதிய தலைமுறையினராலும் நாடப்படுகின்றன.

இந்தப் பயணத்தில் பல்லாண்டுகளாகப் பெருமிதத்துடன் வீறுநடை போடும் திரு ஜெயசீலன், உணவு மரபின் காவலராகத் தன்னைக் கருதுகிறார்.

“நமது பாரம்பரியத் தொழிலை நாம்தான் பாதுகாக்க வேண்டும். நாமே செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?” என்ற கேள்வியை அவர் ஆணித்தரமாக முன்வைக்கிறார்.

1947ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்த அவரது தாத்தா தொடங்கிய இந்த மசாலா வியாபாரம், பின்னர் சிராங்கூன் சாலையிலும், அதன்பிறகு 1970களில் சோங் பாங் ஈரச்சந்தையிலும் இயங்கி வந்தது.

தொடக்கத்தில் இந்த வியாபாரத்தின் மீது அதிக ஆர்வம் இல்லாத ஜெயசீலனுக்கு அவரது தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் சிறு வயதில் கடையில் வேலை செய்யத் தொடங்கினார்.

“ஆரம்பத்தில் எனக்கு இதில் கொஞ்சம்கூட விருப்பமில்லை. காலை 5.30 மணிக்கு எழுந்து ஈரச்சந்தையிலுள்ள கடைக்குச் செல்வது, வாடிக்கையாளர்களிடம் பேசுவது என எல்லாமே எனக்குக் கடினமாக இருந்தது,” எனத் திரு ஜெயசீலன் கூறினார்.

காலப்போக்கில் வியாபாரம் வளர வளர, வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட பிணைப்பு அவருக்கு இந்தத் தொழிலின் மீதான பிடிப்பையும் தந்தது.

ஈரச்சந்தைக் கடைகளுக்கு உள்ள தனித்துவத்தைச் சென்று பார்க்கும்படி திரு ஜெயசீலன் இளையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இளையர்கள் பலர் பேரங்காடிகளுக்கே செல்ல விரும்புகிறார்கள். அங்கு குளிர்சாதன வசதி உள்ளது. 24 மணி நேரமும் திறந்திருக்கும், எல்லாமே வசதியாக இருக்கிறது. ஆனால், ஈரச்சந்தையில் கிடைக்கும் புத்துணர்வு வேறு எங்கும் கிடைக்காது,” என்றார் திரு ஜெயசீலன்.

ஈரச்சந்தையிலிருந்து வாங்குபவர்கள் துல்லியமாக வேண்டிய அளவிற்கு உணவுப் பொருள்களை வாங்க முடிவதால் உணவு விரயத்தைக் குறைப்பதுடன் பணத்தைச் சேமிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஈரச்சந்தையில் இயங்கும் கடைகள் இணையத்தின் மூலம் தங்கள் வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“பாரம்பரிய வியாபாரங்களை இணைய விற்பனைத் தளங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் வர்த்தகம் செயல்படும் சுற்றுவட்டாரத்தைக் கடந்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும்,” என்றும் திரு ஜெயசீலன் கூறுகிறார்.

சீரகம், சோம்பு, மஞ்சள் தூள் போன்ற மசாலாப் பொருள்களை இளையர்கள் பலருக்கும் வேறுபடுத்தத் தெரிவதில்லை எனக் கூறும் அவர், தாளிப்புப் பொருள்கள் பற்றிய அறிவைப் பரப்ப, பல பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.

“மசாலாப் பொருள்களின் தன்மைகளைப் பற்றிய அறிவும் உணவுக்குச் சுவையூட்டும் பாங்கும் முன்னைய காலங்களில் மக்களிடையே பரவலாகக் காணப்பட்டிருந்தன. இப்போதுள்ள மக்கள், குறிப்பாக இளையர்கள், இது பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

“நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது கடமை. நான் என் மகனை இதற்காகக் கட்டாயப்படுத்த மாட்டேன், ஆனால் அவனுக்கு விருப்பம் இருந்தால் எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பேன்,” என்று திரு ஜெயசீலன் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்