பாரம்பரியக் கலை எதுவாக இருந்தாலும் அது பலராலும் கற்கப்பட்டு புதிய பரிமாணங்களை எட்டுவது அக்கலையின் ஆரோக்கிய வளர்ச்சியே என்பது இளம் கலைஞர்களின் எண்ணப்போக்காக உள்ளது.
மற்றொரு கலையிலும் தேர்ச்சி அடைய முயன்று அதனிலிருந்து பெறப்படும் திறன்களைக் கொண்டு முதன்மையாக ஈடுபடும் கலைக்குச் செறிவூட்ட விரும்புகின்றனர் மீரா பாலசுப்ரமணியன் போன்ற புத்தாக்கம் சார்ந்த கலைஞர்கள்.
தற்போது பலருக்கு ஆசிரியராக இவர் இருந்தாலும், முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களைப் பெறுவதற்குத் தொடர்ந்து தாமும் ஒரு மாணவராக இருந்து தம் கலைத்திறனை மேம்படுத்திக் கொள்கிறார்.
‘தில்லானா’, ‘1943’ உள்ளிட்ட தொலைக்காட்சி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். நாடக நடிப்புத்திறன்களையும் நடனத்திற்குக் கொண்டுவந்து புதுமையை மேலும் ஏற்படுத்தித் தனித்துவத்தை எய்த முனைந்துள்ளார் இவர்.
“நாட்டியத்திற்கும் நாடகத்திற்கும் தனித்தனி இலக்கணங்கள் இருந்தாலும் அவற்றை ஒன்றோடு ஒன்று சார்ந்து படைக்கலாம். ஆனால், அதற்கு முன்னதாக அத்துறைகளைப் பற்றிய சரியான, நுணுக்கமான புரிதல் தேவை,” என்று அவர் கூறினார்.
நாட்டியத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அதில் அனுபவமும் பெற்றிருப்பதால் மேடையில் அச்சமின்றிப் படைத்துக்காட்டுதல், உணர்ச்சிகளை வெளிக்கொணர்தல் போன்ற திறன்களை நாடகச் சூழலுக்கும் கொண்டுவர இவரால் முடிகிறது.
“நாட்டியத்தில் கதாபாத்திரத்தை ஏற்று அதன் கூறுகளை உள்வாங்குவது எனக்கு எளிதாக இருந்தது. இருந்தபோதும் நடிகர் என்பவர், கதாபாத்திரமாக மாறுவது மட்டுமல்லாது அந்தக் கதாபாத்திரமாக வாழ்கிறார். தமது உடல், முகம், குரல் ஆகியவற்றின் மூலம் தம் கதாபாத்திரத்தை அதிக வீச்சுடன் வெளிப்படுத்திக் காட்டவேண்டும். இந்தத் திறமை, பரதநாட்டியத்தை ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் என எனக்குத் தோன்றுகிறது,” என்றார் மீரா.
‘தந்தையும் நாடகக் கலைஞர்’
நான்கு வயதிலேயே நாட்டியம் கற்கத் தொடங்கினார் இவர். நடனத்தின் மீது தமக்கு இருந்த இயல்பான ஈர்ப்பைக் கண்டு தாயார் தம்மை நடனத்தில் சேர்த்ததாக 40 வயது திருவாட்டி மீரா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பெரும்பாலோர் பாட்டு கற்கும் வீட்டில் திருவாட்டி மீராதான் நாட்டியம் கற்ற முதல் நபர். தம் தந்தை ஒரு மேடை நாடகக் கலைஞர் என்பதனாலும் வீட்டில் அடிக்கடி வசனம், பயிற்சி, ஒத்திகை ஆகிய சொற்களை இவர் கேட்டார். அவையே இவரது விழுமியங்களாகவும் மாறின.
சென்னையில் வளர்ந்த அவர், சரஸ்வதி கான நிலையத்தில் ஸ்ரீமதி லலிதா, ரங்கநாயகி ஜெயராமன் ஆகியோருடன் பிரபாகினி என்பவரிடமிருந்து கற்றார். 2009ல் சிங்கப்பூருக்கு வந்த பிறகு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக்கழத்தில் தொடர்ந்து பயிற்சி பெற்றார். கல்பவிருக்ஷா கலைப்பள்ளியை 2016ல் தொடங்கி அதற்கான தலைமை ஆசிரியராகச் செயல்படும் அவர், நடன குரு பி. என். விகாஸிடம் தற்போது நடனம் பயின்று இன்றும் தமது திறன்களை மெருகேற்றி வருகிறார்.
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘சிவகாமி சபதம்’ நாவலைத் தழுவிய அவான்ட் தியேட்டர் நாடகத்தில் முன்னணி இடம்பெற்றதைப் பெருவாய்ப்பாகக் கருதுவதாகத் திருவாட்டி மீரா கூறினார்.
நாட்டியப் பாரம்பரியத்தில் ‘சாந்த ரசம்’ எனப்படும் அமைதி உணர்வின் நீட்சியாக நவரசத்தினுள் மற்ற ரசங்களை வெளிப்படுத்த ருக்மிணி அருண்டேலின் கலாஷேத்ரா பாணி முற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கோயில் தேவதாசிகள் ஆடிய சிருங்கார பாவங்கள் குறைக்கப்பட்ட வடிவமாகத் தற்கால பரதநாட்டியம் உருவெடுத்துள்ளது.
இருந்தபோதும், புதிய தலைமுறை ரசிகர்களுடன் பரதநாட்டியத்தை உணர்வளவில் மேலும் இணைப்புகளை ஏற்படுத்த நாடக உத்திகள் பெருகிவந்துள்ளன. கதைகளையும் கருப்பொருள்களையும் ஒட்டிய நாட்டியப் படைப்புகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. அந்த வகையைச் சேர்ந்தது திருவாட்டி மீராவின் ‘யஜ்னசேனி’ என்ற நடன-ஓரங்க நாடகப் படைப்பு.
மகாபாரத திரெளபதியின் வரலாறு பற்றிய இந்த நடனப்படைப்பு, சிங்கப்பூரின் தீமிதித் திருவிழாவையும் நாட்டியம் வழியாக நூதனமாகச் சித்திரிக்கவுள்ளது. நடனக் கலைஞர்கள் ஹரிபத்னு, பாடகர் ஓ.எஸ் அருண் இருவரும் இதில் படைப்பாளிகளாக இடம்பெறுகின்றனர்.
“இந்நாடகத்தைப் பிப்ரவரி 14ஆம் தேதி தமிழிலும் பிப்ரவரி 15ஆம் தேதி ஆங்கிலத்திலும் சித்திரிக்கவுள்ளேன்,” என்று மீரா கூறினார்.