தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உன்னத நிலையை ஊக்குவிக்கும் ராணுவ உபகாரச் சம்பளம்

2 mins read
8ce475e0-68e7-4349-b024-0c641e1a4683
உபகாரச் சம்பள விருது பெற்ற நரேன்கௌதம் கோவிந்தராஜ் (இடது), அர்ஷுல் கார்க். - படங்கள்: தற்காப்பு அமைச்சு

ஏட்டுக்கல்வியில் தலைசிறந்த மதிப்பெண்களுடன் ஒருவரது தலைமைத்துவப் பண்பையும் அடையாளம் கண்டு பாராட்டும் நோக்கில் சிங்கப்பூர் ஆயுதப்படை உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.

தெமாசெக் கிளப்பில் ஆகஸ்ட் 1ஆம் தேதி கிட்டத்தட்ட 105 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களில் இருவரைத் தமிழ் முரசு நேர்கண்டது.

போர்க்காலப் பொறியியல் அதிகாரியாகப் பணியாற்றும் இரண்டாம் லெப்டினன்ட் அர்ஷுல் கார்க், 20, கலிஃபோர்னியா பெர்க்கலி பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புறம், பொருளியல் மற்றும் கொள்கை வகுப்பில் பயிலவிருக்கிறார்.

தேசிய சேவையின் தொடக்கத்தில் கடின ராணுவப் பயிற்சிகளை எண்ணி அச்சம் கொண்டதாகக் கூறிய அர்ஷுல், சக சேவையாளர்களின் ஊக்கத்தால் ஆறுதல் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.

“பல்கலைக்கழகப் படிப்பைக் கொண்டு சிங்கப்பூர் ஆயுதப் படைகளில் நிலைத்தன்மை நடைமுறைகளை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்,” என்றார் அர்ஷுல்.

அர்ஷுல் போலவே ராணுவத் துறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோர் மற்றொரு விருதாளர் ‘எம்இ4’ நரேன்கௌதம் கோவிந்தராஜ், 21.

ஏஎஃப்டிசி எனப்படும் ஆகாயப்படை பயிற்சித் தளபத்தியத்தில் பொறியாளராகப் பணியாற்றும் நரேன்கௌதம், தேசிய பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் படிப்பைப் பயிலவுள்ளார்.

ஐந்து வயதிலேயே விமானங்கள்மீது ஆர்வம் கொண்ட நரேன்கெளதம், விமானக் கண்காட்சிகளுக்கு விரும்பிச் செல்வதாகக் கூறினார்.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அவரது கல்விப் பயணம் தொடங்கியது.

அதன்பிறகு அவர், பொறியியல் உற்பத்தி நிறுவனத்தில் வேலைப்பயிற்சி மேற்கொண்டார்.

“அந்தப் பயிற்சியின்வழி நான் ஆய்வுபூர்வமாக யோசிப்பது, ஒத்துழைப்பு நல்குவது, விவரங்களை நுணுகிக் கவனிப்பது போன்ற பண்புகளைக் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

தன் வாழ்வின் நோக்கத்தை அறிந்து, தன்னாற்றலை மேம்படுத்துவதே வெற்றியை ஈட்டித் தரும் எனக் கருதும் நரேன்கௌதம், அதனால் பிறரும் பயனடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்