சிங்கப்பூர் ஆயுதப் படையில் தளவாட நிபுணராகப் பயிற்சி பெற்றபோது பெருங்குடல் புற்றுநோயால் தம் தாயாரை இழந்தார் ரேஷ்மா புலந்திரதாஸ், 23.
நவம்பர் 21ல் பாசிர் லாபா ராணுவ முகாமில் பயிற்சி ராணுவ வல்லுநர்களின் பதவி நியமன அணிவகுப்பில் இடம்பெற்ற 877 பேரில் ரேஷ்மாவும் ஒருவர். பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் அணிவகுப்பைச் சிறப்பித்தார்.
பெருமைமிகு இந்தத் தருணத்தைக் காண தன் தாயார் உயிருடன் இல்லை என்ற வருத்தம் ரேஷ்மாவுக்கு. ஐந்தாண்டுகளாகப் புற்றுநோயால் அவதியுற்றார் அவருடைய தாய்.
“என் தாயார் மகேஸ்வரி காசாளராக வேலை செய்து என்னையும் என் அக்கா, அண்ணனையும ஆதரித்து வந்தார். அவருக்குப் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தபோது எனக்கு 19 வயது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
இளம் வயதில் தேசிய தின அணிவகுப்புக்காகத் தாம் தொண்டூழியம் புரிந்தபோது சிங்கப்பூர் ஆயுதப் படையினர் தம்மை நட்பார்ந்த முறையில் நடத்திய இனிய நினைவு[Ϟ]களைப் பகிர்ந்துகொண்டார் ரேஷ்மா.
நோய்வாய்ப்பட்ட தாயாரால் முன்புபோல் வேலை செய்ய இயலாத நிலையில் ரேஷ்மா இடையிடையே பகுதிநேரமாக வேலை செய்து குடும்ப நிதிச்சுமையைச் சமாளிக்க உதவினார்.
“அந்நேரத்தில் நான் தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மத்தியக் கல்லூரியில் மனிதவளத்துறையில் உயர் நைட்டெக் படிப்பை மேற்கொண்டிருந்தேன்,” என்றார் ரேஷ்மா.
ஆயதப்படைகளில் பணியாற்றும் ரேஷ்மாவின் அக்கா கணவர், படைகளில் சேர ரேஷ்மாவுக்கு ஊக்கமளித்தார். இருந்தபோதும், பெண்பிள்ளையை அங்கு வேலை செய்ய அனுப்புவதற்குத் தம் தாயார் முதலில் தயங்கியதாக ரேஷ்மா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால், நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். சிங்கப்பூர் ஆயுதப் படையில் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் ஏராளம். நிலையான ஒரு வேலையைச் செய்யப் போகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது,” என்றார் அவர்.
வேலையில் சேர்ந்த பிறகு அடிப்படை ராணுவப் பயிற்சி முதலான உடற்கட்டுப் பயிற்சிகளையும் தளவாடத் திறன்கள் சார்ந்த பயிற்சியையும் அவர் மேற்கொண்டார். ராணுவ முகாமிலேயே தங்கிய ரேஷ்மா, சில நேரங்களில் காடுகளில் முகாமிட வேண்டியிருந்தது.
சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படும்போது மனவுறுதியுடன் தொடரும்படி தாயார் ஊக்குவித்ததாக ரேஷ்மா கூறினார்.
இதனால் நாளைய பொழுதின் மீதான நம்பிக்கை, ரேஷ்மாவுக்கு என்றுமே உண்டு. தாயார் கவலைக்கிடமாக இருந்தபோதும் அவர் உயிரிழந்தபோதும் குடும்பத்தாரும் வேலையிடத்தில் அதிகாரிகளும் உறுதுணையாக இருந்ததை நன்றியுணர்வுடன் அவர் சுட்டினார்.
வேலையிலும் வாழ்க்கையிலும் எத்தகைய சோதனைகள் வந்தாலும் துணிச்சலுடன் இருக்குமாறு வலியுறுத்திய தம் தாயாரின் அறிவுரையை மற்ற இளம்பெண்களுக்கும் கூற விரும்புகிறார் ரேஷ்மா.
“பெண்ணாக இருக்கும் நாம், நம் இடத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது. பகைமை பாராட்டும் ஒருவரைத் தவிர்க்க எண்ணி நாம் ஒரு வேலையை விட்டு விலகினோமானால் மற்றோர் இடத்தில் மற்றொருவர் நம்மை வீழ்த்த முயற்சி செய்யலாம். நம் மீதும் நம் திறமை மீதும் நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். நம்மால் முடியும் என்ற துணிச்சலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்த வேண்டும்,” என்கிறார் ரேஷ்மா.