இனிதே தொடரும் இளையர்களின் இசைப் பயணம்

இனிதே தொடரும் இளையர்களின் இசைப் பயணம்

2 mins read
c47e4314-6a41-4ca2-b9f7-47685c3ae203
இசைக்கலைஞர்கள் நால்வரும் இணைந்த இசைக்குழு. - படம்: காமினி ஹஷ்வின்

‘யார் அந்த ஸ்டார்’ எனும் தொலைக்காட்சி பாடல்திறன் போட்டியின்மூலம் சந்தித்த அகிலேஷ் தத்தசாயி பிரசாத், 25 மற்றும் மாதவன் மணிமாறன், 27 ஆகியோரின் நட்பு இன்று ஒரு கலைப்பயணமாக உருவெடுத்துள்ளது.

இசைக்கலைஞர்களான அந்தோணி ஹஷ்வின், 28, மு கோபி, 31 ஆகியோருடன் இணைந்து அவர்கள் ‘பெட்வீன் எவ்ரி பிரீத்’ (Between every breath) எனும் இசை நிகழ்ச்சியைப் படைத்தார்கள்.

அந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் ஏறக்குறைய அதிக பார்வையாளர்களுடன் சன்ரூம் ஸ்டூடியோசில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பாடகர்கள் இருவரும் அவர்கள் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களைப் பாடியது அனைவரின் மனத்தையும் நெகிழ வைத்தது.

இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே தமிழ் பேசிப் பழகியதால் ஆழமான உணர்ச்சிகளை எனது தாய்மொழியில் வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் எளிதாக இருந்ததாக பகிர்ந்தனர்.

“இசை வழியாக இயல்பாக சொல்லப்படாத அம்சங்களைச் சொல்வதும் கனமான உணர்வுகளைக் கையாள்வதும் எனக்கு ஓர் அதிகாரமிக்க உணர்வைத் தருகிறது,” என்கிறார் அகிலேஷ்.

இன்ஸ்டகிராம் பாடல் படைப்புகள்மூலம் கவரப்பட்ட மாதவன், தனது நிகழ்ச்சியின்மூலம் நெருக்கமான, உணர்வுபூர்வமான ஒரு சூழலை உருவாக்க விரும்பினார்.

“உணர்வுகளை நான் கட்டுப்படுத்துவதில்லை; அவற்றை என்னுள் உணர அனுமதிப்பதன் மூலம் என் ரசிகர்களுடன் ஓர் ஆழமான பிணைப்பை என்னால் ஏற்படுத்த முடிகிறது,” என்று மாதவன் கூறுகிறார்.

தாளவாத்தியக் கலைஞர் கோபி, பாடல்களின் உணர்ச்சிக்கு ஏற்ப கடம், கஞ்சிரா மற்றும் ஆப்பிரிக்க டிஜெம்பே (Djembe) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான ஒலியை உருவாக்கினார்.

“நமது கர்நாடக இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புறத் தாளங்கள் மூலம் வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களை வெளிப்படுத்த என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்,” என கோபி குறிப்பிடுகிறார்.

அந்தோணி ஹஷ்வின் தனது ‘கீபோர்டு’ மற்றும் ‘கித்தார்’ இசைமூலம், பாடகர்களின் கதைக்கு உயிர் கொடுக்கும் வகையில் பாடல்களை மிக எளிமையாகவும் அதே சமயம் ஆழமாகவும் மாற்றியமைத்தார்.

“பாடகர்கள் தொழில்நுட்ப விஷயங்களைவிட, பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்துமாறு நான் எப்போதும் அறிவுறுத்துவேன்,” என்கிறார் அந்தோணி.

தங்கள் கதைகளை பகிரும் பாடகர்கள். 
தங்கள் கதைகளை பகிரும் பாடகர்கள்.  - படம்: காமினி ஹஷ்வின்

இந்த முயற்சியைப் பாராட்டிய பாலமுருகன் திருநாவுக்கரசு, 25, “பாடல்களுக்கு ஒரு பின்னணிச் சூழலைக் கொடுப்பது அதை மிகவும் சுவாரசியமாக்கியது,” என்று நெகிழ்ந்தார்.

கணேசானந்தன் யாழினி, 23 இந்த அனுபவம் குறித்துக் கூறுகையில், “பாடல்களின் வரிசையும் கதையோட்டமும் மிகவும் புதுமையாகவும் ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்