மாறுபட்ட காதல் கதை: மீடியாகார்ப் வசந்தத்தின் புதிய நிகழ்ச்சி

மாறுபட்ட காதல் கதை: மீடியாகார்ப் வசந்தத்தின் புதிய நிகழ்ச்சி

2 mins read
03e8ae3b-c328-4c83-be6e-c13c2141b402
மீடியாகார்ப் வசந்தத்தின் ‘மஸ்ட் டேட் த பிளேபாய்’ தொடரில் நடித்துள்ள (மேல்வரிசை இடமிருந்து) மழைமேகன், பிரகதீஷ் பிரகாஷ், முஜம்மில் இலியாஸ்; (கீழ் வரிசை) கங்கா கண்ணன் மற்றும் சாந்தினி நாகதுர்கா. - படம்: பே. கார்த்திகேயன்
Google News Preferred Icon

இன்பம் சுரக்கும் இளங்காதல், எதிர்பாராத் திருப்பங்கள், நட்பின் ஆழம் எனச் சுவையூட்டும் கதைக்கூறுகளை உள்ளடக்கும் காதல் தொடரொன்று தொலைக்காட்சித் திரைகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

மீடியாகார்ப் வசந்தத்தின் ‘மஸ்ட் டேட் த பிளேபாய்’ (Must Date The Playboy) என்ற அந்த நாடகம், அதே பெயரிலுள்ள ‘வாட்பேட்’ (Wattpad) நாவலின் தழுவலாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சைச் சேர்ந்த எழுத்தாளர் இம்மா டெலோஸ் சாண்டோஸ் புனைந்த கதையைத் தழுவிய இந்நாடகத்தை உள்ளூர் இயக்குநர் டி. சூரியவேலன் படைக்கிறார்.

சிங்கப்பூர்ச் சூழலில் இளையர்களின் அனுபவங்கள், உணர்வுகள், சவால்கள் போன்றவற்றை எடுத்துரைக்கும் தொடராக இது இருக்கும் என்று நாடகத்தைத் தயாரிக்கும் ‘360 என்டர்டைன்மென்ட் புரொடக்‌ஷன்ஸ்’ தெரிவித்தது.

பெண்களை எளிதில் கவரும் வித்தையில் கைதேர்ந்த இளையரிடம் தமது உயிர்த் தோழியின் மனம் பறிபோகக்கூடாது என்பதற்காக, அவருக்குப் பதிலாகத் தாமே அந்த இளையரைக் காதலிப்பதுபோல நடிக்கும் ஒரு பெண்ணை இந்த நாடகம் மையப்படுத்துகிறது.

இவ்வாறு செய்ததால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் பற்பல தருணங்களில் திசைமாற்றம் ஏற்படுகிறது. இதுவே, இத்தொடரின் சுவையான கதைக்களம்.

சேற்றில் முளைத்த செந்தாமரைபோல, போலியான உறவுக்குரித்தான பொய் புரட்டுகளுக்கிடையே உண்மையான காதல் எப்படித் தோன்றி, வளர்கிறது என்பதையும் இத்தொடர் விளக்குகிறது.

முஜம்மில் ‘சைன்’ என்ற கதாபாத்திரமாக நடித்தார்.
முஜம்மில் ‘சைன்’ என்ற கதாபாத்திரமாக நடித்தார். - படம்: பே. கார்த்திகேயன்

தொடரின் நாயகனாக இடம்பெறும் 22 வயது முஜமில் இலியாஸ், தமது கதாபாத்திரம் குறித்துப் பேசுகையில், தமது உண்மையான குணத்திற்கு முரணான விதத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளது சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“நானும் ‘சைன்’ என்ற என் கதாபாத்திரமும் சமூகத்தால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதுதான் எங்களுக்கிடையிலான ஒரே ஒற்றுமை,” என அவர் சிரித்தவாறு கூறினார்.

நாடகத்தில் தாராவாக நடித்த சாந்தினி நாகதுர்கா.
நாடகத்தில் தாராவாக நடித்த சாந்தினி நாகதுர்கா. - படம்: பே. கார்த்திகேயன்

கதாநாயகி 26 வயது சாந்தினி நாகதுர்கா, தமது கதாபாத்திரம் குறித்துப் பகிர்கையில், “தாரா தன்னைத்தானே நேசிக்கும் ஒரு பெண். இன்றைய கலாசாரம் மாறினாலும், தனக்காக ஒருவர் எங்கோ இருக்கிறார் என்று அவர் நம்புவது மிகவும் தனித்துவமானது,” என்றார்.

இன்றைய இளையர்கள் இத்தொடரைப் பார்க்கும்போது தாங்கள் செய்யும் தவறுகளையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

இத்தொடர் வெளிவருவதற்கு இது சரியான தருணமா என்று கேட்கப்பட்டபோது, “சரியான நேரத்தை நம்மால் ஒருபோதும் கணிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற கதைகள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை,” என இயக்குநர் டி. சூரியவேலன் கூறினார்.

மொத்தம் 26 பாகங்களைக் கொண்ட இத்தொடர், திங்கள்முதல் வியாழன்வரை இரவு 10 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பாகும். மேலும், ‘மீவாட்ச்’ (meWATCH) தளத்திலும் யூடியூபில் உள்ள ‘மீடியாகார்ப் டிராமா’ (Mediacorp Drama) தளத்திலும் ரசிகர்கள் இதனைக் காணலாம்.

குறிப்புச் சொற்கள்