மர்மப் பெட்டிகளும் இளையர்களின் மோகமும்

மர்மப் பெட்டிகளும் இளையர்களின் மோகமும்

3 mins read
ff704783-9ed3-4ca0-b108-0e36fe55cd1c
காட்சிக்கு வைக்கப்பட்ட மர்மப் பெட்டிகள். - படம்: பாப் மார்ட்

கத்தி போன்ற கூர்மையான காதுகள், பற்பல உணர்ச்சிகளை வெளிக்காட்டும் பெரிய கண்கள், பற்களை வரிசையாகக் காட்டும் குறும்புச் சிரிப்பு - இந்தக் குணாதிசயங்களைக் கொண்ட ‘லபுபு’ (Labubu) பொம்மைகள் உலக மக்களைத் தங்கள் வசம் ஈர்த்துள்ளன.

காசிங் லங்க் எனும் ஹாங்காங் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட லபுபு பொம்மை, ‘பாப் மார்ட்’ என்ற நிறுவனத்தால் முதன்மையாக விற்கப்படுகிறது.

காட்சிக்கு வைக்கப்பட்ட லபுபு பொம்மைகள்.
காட்சிக்கு வைக்கப்பட்ட லபுபு பொம்மைகள். - படம்: ரியூட்டர்ஸ்

லபுபு பொம்மைகள் பற்பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு, மர்மப் பெட்டிகளில் (mystery boxes) விற்கப்படுகின்றன. 

இப்பொம்மைகளின் அபார வெற்றிக்குக் காரணியாக மர்மப் பெட்டிகள் அமைந்ததால், ‘சோனி ஏஞ்சல்ஸ்’ (Sony Angels), ‘கிரைபேபி’ (Crybaby) உள்ளிட்ட பொம்மைகளும் அந்தப் பெட்டிகளுக்குள் வைத்து விற்கப்படுகின்றன. 

மர்மப் பெட்டிகள்

பொதுவாக, கடைக்குச் சென்று நமக்குப் பிடித்த பொருளை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். மாறாக, ஒரு வாடிக்கையாளர் மர்மப் பெட்டியை வாங்கி, அதைத் திறந்த பிறகே எதை வாங்கியுள்ளார் என்று அவருக்குத் தெரியவரும்.

தமக்குப் பிடித்த பொம்மை கிடைக்குமா, கிடைக்காதா என்ற மர்மமும் உற்சாகமும் ஒருவரின் வாழ்க்கைக்குச் சுவை சேர்க்கின்றன. இவ்வுணர்வுகள் ஒருவரை மர்மப் பெட்டிகளைத் தொடர்ந்து வாங்கத் தூண்டுகின்றன என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். 

இவற்றைப் பெறவும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

அயோன் பேரங்காடியில் (Ion shopping mall) அமைந்துள்ள ‘பாப் மார்ட்’ கிளையில் மக்கள் கூட்டம் 
அயோன் பேரங்காடியில் (Ion shopping mall) அமைந்துள்ள ‘பாப் மார்ட்’ கிளையில் மக்கள் கூட்டம்  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மர்மப் பெட்டிகளை வாங்கக் காரணம்

“சமூக ஊடகங்களும்,  பிரபலங்களும், மர்மப் பெட்டிகளை விமர்சனம் செய்வதால், மக்கள் இதை வாங்கியே தீரவேண்டும் என்றெண்ணி, முடிவில் வாங்கிவிடுகின்றனர்,” என்றார் மாணவி இனியா கொண்டாரெட்டி, 18. 

ஒரு பொம்மைத் தொகுப்பில் ஏறத்தாழ 10 பொம்மைகள் இருக்கும். அவை அனைத்தையும் வாங்கி தங்களுடைய பொம்மைத் தொகுப்பை முழுமையடையச் செய்யவேண்டும் என்ற இயல்பினால், ஒருவர் அளவிற்கு அதிகமாகச் செலவுசெய்ய நேரிடும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். 

அதோடு, சில பொம்மைகள் வரையறுக்கப்பட்ட பதிவுகள் என்பதால், விலை அதிகமாக இருந்தாலும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவேண்டும் என்று அவற்றை வாங்குகின்றனர்.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 20 வயது நாதன், ‘ஹேரி பாட்டர்’ பொம்மைகளை மர்மப் பெட்டிகளில் வாங்கியுள்ளார்.

“பிரிட்டனிலிருந்து நான் இந்த பொம்மைகளை வாங்கினேன். ஒவ்வொரு மர்மப் பெட்டியிலும் விதவிதமான பொருள்கள் அடங்கியிருக்கும். அவற்றை திறப்பது உற்சாகமாக இருக்கும்,” என்றார் அவர்.  

சாதகமா, பாதகமா

‘”இந்தப் பொம்மைகளை வாங்குவது எனக்கு என்னுடைய குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்தும். சின்னக் குழந்தைகளுக்கு இருக்கும் ஆசைகள், வயதானாலும் நம்மிடம் இருக்கும். இந்த மர்மப் பெட்டிகளை வாங்கி, எனக்குள் இருக்கும் அந்தச் சிறு ஆசைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று பகிர்ந்தார் நாதன். 

மர்மப் பெட்டிகளைத் திறந்து பார்க்கும்பொழுது, உடனடியாக டோப்பமின் அதிகளவில் சுரக்கிறது. பிடித்தமான செயலிலோ நமக்கு சாதகமாக அமைந்த செயலிலோ ஈடுபடும்போது டோப்பமின் சுரக்கிறது. இச்செயல் சிறந்தது, இதில் மீண்டும் ஈடுபட வேண்டும் என்று நம் மூளைக்குத் தெரிவிக்கும் ஓர் அறிகுறியாக இந்த டோப்பமின் சுரப்பு திகழ்கிறது என்கிறது ஆய்வு. 

இந்த டோப்பமின், ஒன்றோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மர்மப் பெட்டிகளை வாங்கத்தூண்டும். பிடித்தது கிடைக்கும்வரை செலவுசெய்யச் சொல்லும். 

“மர்மப் பெட்டிகளை வாங்கும்போது அனுபவிக்கும் உணர்ச்சிகளும், சூதாட்டத்தில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சிகளும் ஒத்த தன்மையுடையவை என்று கூறுவதுண்டு. வாடிக்கையாளர்கள்தான் கட்டுப்பாட்டோடு செயல்படவேண்டும்,” என்று அறிவுறுத்தினார் நாதன்.

காச்சப்போன் (Gashapon) விற்கும் தானியங்கி விற்பனை இயந்திரங்கள்
காச்சப்போன் (Gashapon) விற்கும் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்பு, காச்சப்போன் (Gashapon), போக்கிமோன் (Pokemon) போன்றவை வயது வரம்பின்றி அனைவரையும் கவர்ந்தன. இன்று, மர்ம பெட்டிகளும் லபுபு பொம்மைகளும் மக்களின் மனங்களைக் கொள்ளைக்கொண்டுள்ளன. 

இவ்வாறு, நம் ஆசையைத் தூண்டும் விதமாக தினந்தோறும் வர்த்தகங்கள் புதுபுது பொருள்களை வடிவமைத்துக்கொண்டே இருப்பார்கள்.

அவற்றை நாம் அவ்வப்போது வாங்கி வாழ்க்கையின் சின்னஞ்சிறு ஆசைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம்.

இருந்தாலும், ஆற்றில் போட்டாலும், அளந்து போடணும். எனவே, சிந்தித்து செலவிடுவோமே! 

குறிப்புச் சொற்கள்